வாழைத்தண்டை பாட்டியோ அம்மாவோ நறுக்குவதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். அலுக்காது. வட்ட வட்டமாக நறுக்கி, ஒவ்வொருமுறையும் அரிவாள்மணையில் இழுத்துக்கொண்டு வரும் நாரை ஆள்காட்டிவிரலில் சுற்றிக் கொண்டே, அடுத்த வட்டம், அடுத்த நார்ச் சுற்று…. என்று ஓரளவு வந்ததும், கையில் இருக்கும் நாரை நீக்கிவிட்டு தொடர்ந்து…. வட்டங்களை ஐந்தாறாக அடுக்கிக்கொண்டு, சரக் சரக்கென்று குறுக்காக பொடிப்பொடியாக நறுக்கி, மோர் கலந்த நீர் உள்ள குண்டானில் போட்டுக்கொண்டே… வாழைத்தண்டு நாரை விளக்குக்கு திரி போட்டுப் பார்த்திருக்கிறேன்.

அரிவாள்மணையே தேவை இல்லாமல் கத்தியையே நம்பியிருக்கும் எனக்கும் ஒருநாள் அதன் தேவை வருகிறது என்றால் அது வாழைத்தண்டு நறுக்கத்தான். இல்லாததால் கஷ்டப்பட்டு கத்தியிலேயே நறுக்கினேன். ஒன்றும் சுகமில்லை.

தேவையான பொருள்கள்:

வாழைத்தண்டு
பயத்தம் பருப்பு – 1/4 கப்
உப்பு
மஞ்சள் தூள்
கொத்தமல்லித் தழை

தாளிக்க: எண்ணெய், காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

vaazhaiththandu curry

செய்முறை:

  • பயத்தம் பருப்பை தண்ணீரில் அரைமணிநேரம் ஊறவைக்கவும்.
  • வாழைத்தண்டை, வெளிப்பக்கம் இன்னும் பட்டை இருந்தால் நீக்கிவிட்டு, வட்டவட்டமாக நறுக்கி, இடையில் வரும் நாரை எல்லாம் நீக்கி, பின் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • நறுக்கிய காயை சிறிதளவு மோர் கலந்த நீரில் நனைத்துவைக்கவும். (கருக்காமல் இருக்க இது உதவும்.)
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • மோர்நீரிலிருக்கும் நறுக்கிய வாழைத்தண்டைச் சேர்க்கவும்.
  • ஊறவைத்த பயத்தம்பருப்பை நீரை வடித்துச் சேர்க்கவும்.
  • உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, சிறிது நீர் தெளித்து மூடிவைத்து, அவ்வப்போது திறந்து கிளறிவிடவும்.
  • வாழைத்தண்டு வெந்து, நீர் ஒட்ட சுண்டியதும் இறக்கி, கொத்தமல்லித் தழை தூவி உபயோகிக்கலாம்.

* இவ்வளவு எளிமையாக சமைத்தும் ஒரு காய் இவ்வளவு சுவையாக இருக்கமுடியுமா என்று ஆச்சரியப்படுத்துவதில் வாழைத்தண்டை அடித்துக்கொள்ள வேறு காயில்லை.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

என்னைக் கேட்டால் ஹார்லிக்ஸ் மாதிரி அப்படியே சும்மா சாப்பிடலாம் என்றுதான் சொல்வேன். 🙂

நெய்சாதத்தில் பிடித்துச் சாப்பிடலாம்.

ரசத்திற்கு சுமாராகச் சேரும்.

ஆனால் மோர் சாதத்துடன் (தயிர்சாதம் இல்லை) சேர்க்கும்போது பிறந்த பயனை அடையும்.

-0-

“வாழைத்தண்டுக்கும் மோட்சம் இல்லை. அதை நல்லெண்ணை போட்டு வதக்க வேண்டும். வெள்ளரிப்பிஞ்சை நெய்யில் வதக்கி சாப்பிடுவாரா என கேட்க நினைத்து அடக்கிக் கொண்டேன். அதைக் கேட்கப்போய் புதிய ‘ரெசிப்பி’ஆகிவிடும் அபாயம் உண்டு.”

எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன்.