வெள்ளி, திசெம்பர் 14th, 2007


நன்றி: எழுத்தாளர் நாஞ்சில்நாடன் சொன்னதாக எழுத்தாளர் ஜெயமோகன்.

”அரைக்கீரை ரொம்ப நல்லதுண்ணு சொல்லுகா ஜெயமோகன். அரைக்கீரையை நல்லா ஆய்ஞ்சு மண்ணுகிண்ணு போக சுத்தம் பண்ணி வாணலிய அடுப்பில ஏத்தி ஒரு கரண்டி தேங்காயெண்ணைய விட்டு அதில போட்டு கொஞ்சம் உப்பு தெளிச்சு நல்லா சுண்டவச்சு அப்டியே ஒரு பாத்திரத்தில கொட்டிட்டு இன்னொரு வாணலிய அடுப்பில வச்சு கொஞ்சம் எண்ணைய விட்டு கடுகு கறிவேப்பில உள்ளி போட்டு தாளிச்சு எடுத்தா சோத்துக்கு தொட்டுகிட நல்லா இருக்கும். மோருக்கு முன்னால ரசத்துக்கு பொருத்தம்….சோத்திலக்கூட போட்டுப் பிசைஞ்சி திங்கலாம்…”

அரைக்கீரை குறித்து இங்கே சொல்லியிருக்கிறேன். எனக்குத் தெரிந்து அரைக்கீரை மதுரை அளவு அதிகமாகவும் விலை மலிவாகவும் ஸ்ரீரங்கத்தில் கூட பார்த்ததில்லை. நினைவுதெரிந்து சின்ன வயதில் விடுமுறைக்கு மதுரைக்குப் போகும்போது, ஜெய்ஹிந்துபுரம் முதல் மெயின் தெருவில் 10 பைசாவுக்கு ஒரு பெரிய பை நிறைய அடைத்துக் கொடுப்பார்கள்.

முளைக்கீரை மாதிரி இதில் வேர் இருந்து படுத்தாது என்றாலும் கொஞ்சம் கட்டை எல்லாம் நீக்க வேண்டியிருக்கும். அநேகமாக பெருமளவு தண்டுப்பகுதியை நான் சேர்த்துக் கொண்டுவிடுவேன். வெறும் இலைப்பகுதியைவிட தண்டும் சேர்ந்தால்தான் கறி/கூட்டு சுவையாக இருக்கும். அதற்கும் தடிமனான தண்டுப்பகுதியையும் தனியாக எடுத்து குழப்பில் போட்டுவிடுவேன். நான் தூக்கி எறியும் பகுதி மிகமிகக் குறைவாகத் தான் இருக்கும்.

இது ஒரு பத்திய உணவு என்று தெரிகிறது. நாஞ்சில் நாடன் ஐயா, இன்னமொரு நூற்றாண்டிரும்!

தேவையான பொருள்கள்:

அரைக்கீரை
பூண்டு
உப்பு

தாளிக்க: எண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை

செய்முறை:

 • அரைக்கீரையை பெரிய தண்டுப்பகுதிகளை நீக்கி, தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 • அடுப்பில் வாணலியில் எண்ணெய், கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, உரித்த பூண்டு தாளிக்கவும்.
 • நறுக்கிய அரைக்கீரையைச் சேர்த்து நீர் விடாமல், பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
 • சுண்டியதும் இறக்கி உபயோகிக்கலாம்.

* ஒரு காய்ந்த மிளகாய், சின்னவெங்காயம் 4 உரித்துச் சேர்த்து வதக்கினாலும் சுவையாக இருக்கும். உடலுக்கு நல்லது.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய் சாதம், ரசம் சாதம்.
 

தலை”மை“ப் பண்புக்கு அஞ்சுபவர்கள் அடிக்கடி உணவில் சேர்க்கவேண்டிய துவையல். ஆனால் எழுத்துலகின் ‘பிதாமகன்‘ வேடத்திற்குப் பொருந்துவதாக நினைப்பவர்கள், தனக்கும் எழுத்தெல்லாம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம், முதலில் கெட்டப் மட்டுமாவது வரட்டும் என்று விரும்புபவர்கள், இதைத் தவிர்த்தல் நலம். [பெண்கள் இலக்கியவாதிகளே ஆனாலும் இந்த மாதிரி எல்லாம் ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்பிடமாட்டார்கள் என்று நம்புவோம். :)] வயிற்றில் பிரச்சினை, அல்லது உடல்நலமில்லாதிருந்து மீளும்போது பசியை அதிகரிக்கச் செய்யும் அருமருந்து கறிவேப்பிலை.

தேவையான பொருள்கள்:

கறிவேப்பிலை – 2 கப்
தேங்காய்த் துருவல் – 1/4 கப்
புளி – நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் – 3
உளுத்தம் பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது (விரும்பினால்)
பச்சை மிளகாய் – 1
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு

karuveppilai thuvaiyal

செய்முறை:

 • அதிகம் முற்றலில்லாத கறிவேப்பிலையாக உதிர்த்து 2 கப் எடுத்து, நீரில் அலசி வடித்துக் கொள்ளவும்.
 • அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம் என்ற வரிசையில் சிவக்க வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
 • மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு, புளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை லேசாக மட்டும் வதக்கிக் கொள்ளவும்.
 • மிக்ஸியில் கறிவேப்பிலைக் கலவையை தேங்காய்த் துருவல், தேவையான உப்பு, கொத்தமல்லி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
 • எடுப்பதற்கு முன் வறுத்து வைத்திருக்கும் காய்ந்த மிளகாய், பருப்புகளைச் சேர்த்து ஒரு ஓட்டு ஓட்டி(ஒன்றிரண்டாக உடைபட்டால் போதும்) எடுத்து வைக்கவும்.

* தேங்காய் சேர்க்க விரும்பாதவர்கள் ஒரு கேரட் சேர்த்துக் கொள்ளலாம். கேரட்டில் உள்ள கேரட்டின் சத்து லேசாக வதக்குவதாலேயே வெளிப்படுகிறது என்பதாலும் லேசாக பச்சை வாசனை போகவும், அதையும் கறிவேப்பிலையோடு சேர்த்து வதக்கிவிட்டு அரைப்பது நல்லது. நான் அதிகம் துவையல், அடை மாதிரி உணவுகளில் தேங்காய்க்குப் பதில் கேரட் (அல்லது இரண்டும் பாதிப் பாதி அளவு சேர்த்து) தான் உபயோகிக்கிறேன். தேங்காய் சேர்ப்பதைவிட சுவையாக இருக்கும்.

* தேங்காய் சேர்க்காமல் நன்றாக கறிவேப்பிலையை வதக்கி அரைத்துக்கொண்டால், பிரயாணங்களுக்கு தயிர்சாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். கெட்டுப் போகாது.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

பருப்பு சேர்த்த, அதிகம் மசாலா சேர்க்காத கூட்டு வகைகள் தொட்டுக்கொண்டு சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

தயிர் சாதத்துடன் சேரும்.

வாழைத்தண்டை பாட்டியோ அம்மாவோ நறுக்குவதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். அலுக்காது. வட்ட வட்டமாக நறுக்கி, ஒவ்வொருமுறையும் அரிவாள்மணையில் இழுத்துக்கொண்டு வரும் நாரை ஆள்காட்டிவிரலில் சுற்றிக் கொண்டே, அடுத்த வட்டம், அடுத்த நார்ச் சுற்று…. என்று ஓரளவு வந்ததும், கையில் இருக்கும் நாரை நீக்கிவிட்டு தொடர்ந்து…. வட்டங்களை ஐந்தாறாக அடுக்கிக்கொண்டு, சரக் சரக்கென்று குறுக்காக பொடிப்பொடியாக நறுக்கி, மோர் கலந்த நீர் உள்ள குண்டானில் போட்டுக்கொண்டே… வாழைத்தண்டு நாரை விளக்குக்கு திரி போட்டுப் பார்த்திருக்கிறேன்.

அரிவாள்மணையே தேவை இல்லாமல் கத்தியையே நம்பியிருக்கும் எனக்கும் ஒருநாள் அதன் தேவை வருகிறது என்றால் அது வாழைத்தண்டு நறுக்கத்தான். இல்லாததால் கஷ்டப்பட்டு கத்தியிலேயே நறுக்கினேன். ஒன்றும் சுகமில்லை.

தேவையான பொருள்கள்:

வாழைத்தண்டு
பயத்தம் பருப்பு – 1/4 கப்
உப்பு
மஞ்சள் தூள்
கொத்தமல்லித் தழை

தாளிக்க: எண்ணெய், காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

vaazhaiththandu curry

செய்முறை:

 • பயத்தம் பருப்பை தண்ணீரில் அரைமணிநேரம் ஊறவைக்கவும்.
 • வாழைத்தண்டை, வெளிப்பக்கம் இன்னும் பட்டை இருந்தால் நீக்கிவிட்டு, வட்டவட்டமாக நறுக்கி, இடையில் வரும் நாரை எல்லாம் நீக்கி, பின் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 • நறுக்கிய காயை சிறிதளவு மோர் கலந்த நீரில் நனைத்துவைக்கவும். (கருக்காமல் இருக்க இது உதவும்.)
 • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
 • மோர்நீரிலிருக்கும் நறுக்கிய வாழைத்தண்டைச் சேர்க்கவும்.
 • ஊறவைத்த பயத்தம்பருப்பை நீரை வடித்துச் சேர்க்கவும்.
 • உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, சிறிது நீர் தெளித்து மூடிவைத்து, அவ்வப்போது திறந்து கிளறிவிடவும்.
 • வாழைத்தண்டு வெந்து, நீர் ஒட்ட சுண்டியதும் இறக்கி, கொத்தமல்லித் தழை தூவி உபயோகிக்கலாம்.

* இவ்வளவு எளிமையாக சமைத்தும் ஒரு காய் இவ்வளவு சுவையாக இருக்கமுடியுமா என்று ஆச்சரியப்படுத்துவதில் வாழைத்தண்டை அடித்துக்கொள்ள வேறு காயில்லை.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

என்னைக் கேட்டால் ஹார்லிக்ஸ் மாதிரி அப்படியே சும்மா சாப்பிடலாம் என்றுதான் சொல்வேன். 🙂

நெய்சாதத்தில் பிடித்துச் சாப்பிடலாம்.

ரசத்திற்கு சுமாராகச் சேரும்.

ஆனால் மோர் சாதத்துடன் (தயிர்சாதம் இல்லை) சேர்க்கும்போது பிறந்த பயனை அடையும்.

-0-

“வாழைத்தண்டுக்கும் மோட்சம் இல்லை. அதை நல்லெண்ணை போட்டு வதக்க வேண்டும். வெள்ளரிப்பிஞ்சை நெய்யில் வதக்கி சாப்பிடுவாரா என கேட்க நினைத்து அடக்கிக் கொண்டேன். அதைக் கேட்கப்போய் புதிய ‘ரெசிப்பி’ஆகிவிடும் அபாயம் உண்டு.”

எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன்.