இதை நான் தான் எழுதினேனான்னு எனக்கே இப்ப படிச்சா சந்தேகமா இருக்கு. ஆனா, ஆமாம்னு மரத்தடி சொல்லுது. 😦

இலக்கியப் பயணத்துல இதெல்லாமும் சகஜம் தான் போலிருக்கு! 🙂

-0-

எல்லா வாசனையும் வேற ஏதாவது நினைவையும் கூட்டிவரும் அல்லது எல்லா நினைவுகளுக்கும் ஏதாவது வாசனையும் உண்டுன்னு நான் நிச்சயம் நம்பறேன். இன்னிக்கு நவராத்திரி வெள்ளிக்கிழமைல எங்க வீடு முழுக்க அடிக்கற உக்காரை வாசனைல கிளம்பின நினைவுகள்….

எனக்கு 6, 7 வயசு இருக்குமான்னு சரியாத் தெரியலை. நவராத்திரி வெள்ளிக்கிழமைன்னா எங்க பாட்டி காலைலேருந்து உக்காரையும் சீயாளமும் செஞ்சுட்டு மத்யானம் ஒரு ஒருமணிவாக்குல வந்து கூடத்துல உக்காருவா. எனக்கு நல்லா வயிறு ரொம்ப சாதம் ஊட்டிவிட்டுட்டு, (செமத்தியா சாப்பிடுவேன், வஞ்சனையே இல்லாம.) அன்னிக்கு அலங்காரம் ஆரம்பிக்கும்.

எப்பவுமே நவராத்திரி வெள்ளிக்கிழமைக்கு ஆண்டாள் வேஷம்தான்.

அம்மா ஓரளவு ஏற்கனவே சௌரி, குஞ்சலம், ராக்குடி, ஜடைபில்லை (இதை எடுக்கும் போதேல்லாம் பாட்டி, ‘அவ்வளவும் அந்தக் காலத்து கெம்புக்கல்லு, கடைல போட்டுடாத மதிப்பு தெரியாம’ன்னு சொல்வா. அம்மாவும் ஒவ்வொரு தடவையும் சலிக்காம சரின்னு சொல்வா) இன்னும் நிறைய அலங்கார சாமானெல்லாம் எடுத்து கொண்டு வந்து ரெடியா வைப்பா. அதெல்லாம் வெச்சிருக்கற டப்பா என்னவோ சொல்லத் தெரியலை, பிரத்யேகமா நல்ல வாசனையா இருக்கும்.

ஆண்டாளுக்கு இடக்கொண்டையா வலக்கொண்டையான்னு வருஷா வருஷம் இந்தக் கேள்வியைக் காத்துல விடாம, பாட்டி, அலங்காரம் ஆரம்பிச்சதே இல்லை. அப்புறம் மீனாட்சிக்குத்தான் வலக்கொண்டை, ஆண்டாளுக்கு இடக்கொண்டைதான்னு முடிவுசெஞ்சு, முதல்ல ஒரு சின்ன- பிறந்த குழந்தை வளையல்ல கருப்பு ரிப்பனால சுத்தி ஏற்கனவே தயாரா செஞ்சுவெச்சிருக்கற- வளையத்தை இடப்பக்கம் வகிடுக்குப் பக்கத்துல வெச்சு, சைட் கொண்டைலேருந்து தலை அலங்காரம் ஆரம்பிப்பா. அம்மா உதவிக்கு எல்லாம் எடுத்துக் கொடுப்பா.

ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்திலயே தூங்க ஆரம்பிப்பேன். தூங்கித் தூங்கி சரியும் போதெல்லாம் அண்ணன் பிடிச்சுக்குவான். தம்பி பக்கத்துலயே உக்கார்ந்து எல்லாத்தையும் வேடிக்கை பாத்துகிட்டு இருப்பான். எதுக்குன்னு தெரியலை, அப்பப்ப அடக்கமுடியாம ரெண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து சிரிச்சுக்குவோம். எதையாவது எடுக்க எடுக்க கை நீட்டுவான். அம்மா தொடக்கூடாதுன்னு திரும்பத் திரும்ப கையை எடுத்து விடுவா.

பின்பக்கமும் பின்னி, குஞ்சலம் வெச்சு, கருப்புக் கயிறால கட்டி முடிச்சிருக்கும்போது நான் நல்லாவே தூங்கியிருப்பேன். முகத்தைத் துடைச்சி, மை, பவுடர், நெத்தில ஆண்டாள் வெச்சுக்கற மாதிரி ஒத்தை ஸ்ரீசூர்ணம் எல்லாம் அம்மாதான் செய்வா. அப்புறம் இன்னும் கொஞ்சம் தலை அலங்காரம்- நெத்திசுட்டி, முன்பக்க தலைசாமான் எல்லாம் திரும்ப பாட்டி..

அப்புறம் அம்மாவோட பூச்சூட்டலுக்கு, பாட்டி வாங்கின தாமரைப்பூ கலர்ல அடர்பச்சை பார்டர் நிறைய ஜரிகை போட்ட பட்டுப் புடவையை அம்மா எடுத்துண்டு வருவா. அதை அம்மா கட்டிண்டு ரொம்ப நான் பார்த்ததேயில்லை. அந்தப் புடவைல ஒரு வாசனை வரும்பாருங்க, யாரோட அம்மா புடவையும் அப்படி வராதுன்னு நிச்சயம் நம்பறேன். சும்மா ஜம்முனு இருக்கும்.

அப்படியே வழவழன்னு ஆனா ரொம்ப கனமா இருக்கும். அந்தக் காலப் பட்டுப்புடவை எல்லாமே ரொம்ப உறுதியா இருக்கும். பாட்டி பத்து வருஷம் முன்னாடியே 26 ரூபாய்க்கு வாங்கினதுன்னு ரொம்பப் பெருமையா சொல்வா. அதை அப்படியே அகலத்தைப் பாதியா மடிச்சு எனக்குக் கட்டிவிட ஆரம்பிப்பா. ரொம்ப கஷ்டமான வேலை.

எல்லாம் முடிய மூணு மணி ஆயிடும். அன்னிக்கி எனக்கு என்ன பிடிக்கும்னா அம்மா என்னை ரிக்ஷா வெச்சு ரெண்டு மூணு சொந்தக்காரங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போவா. கீழச்சித்திரை வீதி, அம்மாமண்டபம் ரோடுன்னு சவாரில தூக்கம் போயிடும். இல்லைன்னா ஜுரம் வந்தாதான் ரிக்ஷா சவாரியெல்லாம் கிடைக்கும்.

அன்னிக்கி ஒருநாள்தான் அம்மா ரொம்ப முக்கியமான சொந்தக்காரங்க வீட்டுக்கு மட்டும் கொலுவுக்குப் போவா. மீதிநாள் எல்லாம் வீட்டுலயே இருந்து வரவங்களைக் கவனிக்கவே நேரம் சரியா இருக்கும். அன்னிக்கும் சீக்கிரமா போயிட்டு நாலு நாலரைக்குள்ள முடிச்சுண்டு திரும்பிடுவோம். அஞ்சு மணிலேருந்து எங்க வீட்டுக்கே எல்லாரும் வர ஆரம்பிச்சுடுவாங்க.

திரும்ப வீட்டுக்கு வந்ததும் எனக்கு சீயாளம் சாப்பிடக் கொடுப்பா. ஸ்வீட் பிடிக்காது, அதனால. சாப்பிட்டுட்டு, என்னோட கொலுவேட்டை ஆரம்பிக்கும். எங்கவீதி மட்டும்தான் அப்ப எனக்குப் போகத் தெரியும். எங்க வீதி இருக்கே, அது ஸ்ரீரங்கத்து மத்த வீதிகள் மாதிரி அடைசலா ரெண்டு பக்கமெல்லாம் வீடு இருக்காது. கோவில்மதிலை ஒட்டின முதல்சுற்று உத்தரவீதி முழுக்க, ஒருபக்கம்தான் வீடு.

அதுலயும், ‘இந்தப்பக்கம் 10 வீடு, அந்தப்பக்கம் 10 வீட்டுக்கு மட்டும் தான் போயிட்டு வரணும், சீக்கிரம் வந்துடணும் சரியா?’னு எப்பவும் சொல்லித்தான் அனுப்புவா. (ஆக்சுவலா இந்தப்பக்கம் ‘பெரியாத்து நாராயணன்’ வீடு, அந்தப் பக்கம் ‘SKR பட்டர்’ ஆத்துவரைக்கும்னு தான் சொல்வா. நாந்தான் உங்களுக்குப் புரியாதேன்னு பத்துவீடுன்னு கணக்கு சொன்னேன்.) ரொம்ப சமத்தா ‘சரி’ன்னு சொல்லிக் கிளம்புவேன். உண்மையிலேயே முகம் அப்பாவி மாதிரி எனக்குப் பால்வடியும். பார்க்கறவங்க எல்லாம், ‘ஐயோ பாவம்! எவ்ளோ சமத்தா இருக்கு’ன்னு தான் நினைப்பாங்க.

வாசல்வரைக்கும் வந்து அம்மா வழியனுப்பி திரும்ப உள்ள போறவரைக்கும் காத்துண்டிருப்பேன். அம்மா போனாளோ இல்லையோ, வாசல்ல விளையாடிண்டிருக்கற பசங்களை வரயான்னு கூப்பிட்டுப்பேன். ‘நச்சா’ அப்புறம் இன்னும்கொஞசம் பசங்களோட கிளம்புவேன். எல்லாரும் ஆர்வமா வருவாங்க. ஆனா என்ன பிரச்சனைன்னா, பெண்குழந்தைன்னு என்னை உள்ளவரச்சொல்லி ஒக்காரவெச்சு மரியாதை செய்யறவங்க, அவங்களை மட்டும் ரேழிலயே- சிலபேர்வீட்டுல வாசல்லயேகூட- நிறுத்திடுவாங்க. அவங்க அதெல்லாம் கண்டுக்கமாட்டாங்க. எனக்கும் ஒண்ணும் வித்தியாசமாத் தெரியாது அப்பல்லாம். ஆனா இப்ப நினைச்சா அதெல்லாம் வருத்தமா இருக்கு.

ஃப்ரெண்ட்ஸ் இருக்கற தைரியத்துல அம்மா சொன்ன எல்லையை எல்லாம் தாண்டிடுவேன். அப்பல்லாம் தெருவுல செருப்புப் போடாமத்தான் கொலுவுக்குப் போனதா நினைக்கிறேன். அந்த அளவுக்கு வீதியும் அப்பல்லாம் ரொம்ப குப்பை, ட்ரா·பிக் எல்லாம் இல்லாம நல்லா இருந்திருக்கணும். எங்கவீதில இன்னொன்னு என்னன்னா, எல்லாமே வீடுகள் கிடையாது. நடுநடுவுல சில கோமுட்டிச் செட்டியார்கள் பெரிய பெரிய வீடுகள் கட்டி, கோவில்ல உற்சவம்னா மட்டும் வந்து தங்கி, பெருமாள் சேவிச்சுட்டுப் போவாங்க மத்த நாள்லகூட சும்மா யாராவது விருந்தா வந்து தங்கிட்டுப் போவாங்க. நான் அங்கயெல்லாம் கூடப் போய் எல்லார்கிட்டயும் என் வீட்டுக்கு அடையாளம் சொல்லி அவசியம் எங்கம்மா வரச்சொன்னாங்கன்னு சொல்லிட்டு வந்துடுவேன். அவங்களும் நிஜம்னு எல்லாரும் வந்து என் வீட்டு ஜாதகத்தையே சொல்லி எங்க பாட்டியை முழிக்கவெச்சிருக்காங்க.

இதுல முக்கியமா __________ வீட்டுக்குப் போனது மட்டும் ஏனோ மறக்கவே இல்லை. நான் அவங்க வீட்டுக்குப் போனபோது ஒரு பாட்டியும், ஒரு மாமியும் (மாட்டுப்பொண்ணும்) மட்டும் இருந்தாங்க.

அந்த மாமி, போனவருஷம் இதே ஆண்டாள் வேஷம் போட்டுண்டு போனபோது, ‘ஆண்டாளைத் தெரியுமா உனக்கு?’ன்னு கேட்டதுக்கு, ‘தெரியும், என்னை மாதிரியேதான் ஆண்டாள் இருப்பா’ன்னு நான் பெரியமனுஷி மாதிரி சொன்னதை ஞாபகமா சொல்லிச் சிரிச்சுண்டே ஆசையா அந்தப் பாட்டிகிட்டக் கூட்டிண்டுபோய் காமிச்சா. பாட்டி லைட்டப் போடச்சொல்லிப் பார்த்துட்டு, ‘ஏண்டி இவ்ளோ அலங்காரமும் உங்க பாட்டி பண்ணினாளா, இந்த வயசுக்கும் உடம்பு அடடான்னு வரது அவளுக்கு.. என்னைப் பாரு எதுக்கும் துப்பில்லாம போயாச்சு… துப்பு இருந்துட்டாலும் இந்த வீட்டுல…. ‘ அப்புறம் ஏதேதோ சொல்லிண்டே போனா.

“என்ன அச்சானியமா இடக்கொண்டை போட்டிருக்கா, கூறுகெட்டுப் போயிட்டாளா உங்கபாட்டி?”ன்னும் கேட்டா. அந்த மாமி எவ்வளவோ சொல்லியும் நம்பாம போகவும், அந்த மாமி உள்ளேயிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஸ்நானப் பவுடர் (இது தீபாவளிக்கு தலைக்கு உபயோகிப்போம்) பாக்கெட் எடுத்து அதுல ஆண்டாளுக்கு இடக்கொண்டைன்னு காமிச்சு அவங்களை ஏதோ கண்டிக்க, பாட்டி அப்பவும் நிறுத்தாம, எங்க பாட்டி, தன் மாட்டுப்பெண் எல்லாம் மானாவாரியா சத்தமா பேசிகிட்டே இருந்தாங்க. ரெண்டு பேரும் எனக்கே தெரியாத, சொன்னாலும் புரியாத என்வீட்டு மேட்டர் எல்லாம் பேசி சண்டைபோட ஆரம்பிச்சுட்டாங்க. அவங்க வீட்டுல விளையாட பாப்பா வேற எதுவும் இல்லை. கொலுவும் வைக்கலை. நான் போணும், போணும்னு பூனைக்குட்டி குரல்ல சொன்னதை காதுலயே வாங்கலை. ரேழில நிக்கற பசங்க கால்மாத்தி கால்மாத்தி நிக்க ஆரம்பிச்சுட்டாங்க. நான் திரும்பித் திரும்பி அவங்களையே பாக்கறேன்.

ஒருவழியா அந்த மாமி நினைவுவந்து ‘திருப்பாவை சொல்வியா ஆண்டாள்?’னு கேட்டா. நான் ‘நீளாதுங்கஸ்..’னு தனியன்லேருந்து ஆரம்பிச்சேன். மார்கழித்திங்கள்- லேருந்துதான் ஆண்டாள் பாடினதுன்னு அப்ப எனக்குத் தெரியாது. சொல்லச்சொன்னா சுவிட்ச் போட்ட மாதிரி தனியன்லேருந்து தான் அதுவும் கொஞ்சம்தான் சொல்லத் தெரியும்.

[வருஷா வருஷம் இந்த மாதிரி கேள்விகள் மாறிண்டே போகும். அடுத்த வருஷம் ‘உங்க பாட்டிக்கு நீ செல்லமா, உங்கண்ணனா?’, அதுக்கும் அடுத்த வருஷம் ‘உங்கப்பா- அம்மா சொல்றதக் கேப்பாளா, பாட்டி சொல்றதையா?’ இப்படி…

எந்த வருஷம் ‘உங்கம்மா உனக்கு (வைரத்)தோடு கட்டிட்டாளா?’ன்னு கேக்கறாங்களோ அந்த வருஷத்தோட நவராத்திரிக்கு அழைக்கப் போறத நிறுத்திடணும். அழைக்கப் போற வயசத் தாண்டிட்டோம்னு அர்த்தம். :P]

‘எந்த ஊர்லடீ ஆண்டாள் நீளாதுங்கஸ் பாடியிருக்கா?’ன்னு திரும்ப அந்தப் பாட்டி என்னைச் சீண்ட, அந்த மாமி, ‘நீ கிளம்பு’ன்னு எனக்கு வெத்தலைபாக்கு, குங்குமம் கொடுத்து அனுப்பினா. அப்ப ஏன்னே தெரியலை, அந்த மாமி முகமெல்லாம் அழுது அழுது சிவந்திருந்தது.

அப்படியே தொடர்ந்து அந்தப்பக்கம் சக்கிலியன் கோட்டை வாசல் வரைக்கும் போவோம். அதாவது வீதில சரிபாதில ஒரு இடைவெளிவிட்டு கோட்டைவாசல் வரும். சாயங்காலத்துக்கு மேல அந்தப் பக்கம் போனா கோட்டைவாசல் காவல் தெய்வம் லேடீஸப்(!) பிடிச்சுக்கும்னு நாராயணன் சொல்லியிருக்கான். (இந்த நாராயணனப் பத்தி வேற எப்பவாவது சொல்றேன். இவன் இல்லைன்னா என் குழந்தைக்கால நாள்களுக்கு வண்ணமே இல்லை.) அதனால ‘கதர்க்கடை நாராயணன்’ குண்டு அஷோக் வீட்டோட திரும்பிடுவோம்.

அங்கங்க உட்கார்ந்து எழுந்து புடவை அவுந்துபோறது, நெத்திச்சுட்டி நகரரதெல்லாம் அந்தந்த வீட்டு மாமிதான் சரிசெஞ்சு விடுவா. எல்லாரும் ஏனோ எங்க பாட்டின்னா கொஞ்சம் மரியாதையோ பயமோ வெச்சிருப்பா. எல்லா வீட்டுலயும் பாட்டி பத்தித்தான் பேசுவா. என்னை யாரும் ரொம்ப கண்டுக்க மாட்டா.

சொல்ல மறந்துட்டேனே.. சிலபேர் வீட்டுல என்கூட வர boys-க்கு வெறும் பொரிதான் கொடுப்பா. அதனால அவங்க அவங்க வீட்டு வாசல்லயே உக்கார்ந்து எனக்குக் கொடுத்த புட்டு, சுண்டல் எல்லாம் பிரிச்சு அவங்களுக்குக் கொடுப்பேன். எப்படியும் எங்க வீட்டுல அதை யாரும் கண்டுக்கமாட்டா. எங்களுக்கு சின்னக்கையா இருக்கறதால பிடிக்கமுடியாம அப்படியே என் புடவைத் தலைப்புல கொட்டிப் பிரிச்சுப்போம்.

அப்புறம் எங்கவீட்டுக்கு வலப்பக்கம் இருக்கற வீடுகளுக்குப் போக, திரும்ப, எங்கவீட்டைத் தாண்டித்தான் போகணும். தாண்டும்போது நைசா பாத்தா எங்கவீட்டுக் கூடம் ஜேஜேன்னு கூட்டமா இருக்கும். எல்லாம் நான் அழைச்சுட்டு வந்த மக்கள். ரொம்பப் பெருமையா இருக்கும்.

அப்படியே கண்டுக்காம அந்தப் பக்கம் போக ஆரம்பிப்போம். அந்தப் பக்கம் கோவிலுக்கு முன்னாடி தேர்முட்டி வீடுவரைக்கும் போவோம். ‘ரன்’ படத்துல ‘தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ..’ பாட்டுல ஒரு தேரடி வருதே அதுதான் எங்கவீட்டுக்கிட்ட இருக்கற தேரடி. அதுல தெரியற முதல்வீடு (இப்ப) சுந்தர்பட்டர் வீடு வரைக்கும் போய்த் திரும்பிடுவோம்.

அன்னிக்கி திரும்பும்போது பாக்கறோம், கொஞ்சநேரம் முன்னாடி அழுத மாமி அந்தப் பாட்டியைக் கையைப் பிடிச்சு கோவிலுக்கு கூட்டிப் போறா. ரெண்டுபேரும் சிரிச்சு பேசிகிட்டே வேற போறாங்க. என்னால நம்பவே முடியலை.

“என்னடா இது, அந்த மாமி லூசா, என்னை யாராவது அழவிட்டா நான் அவாளோட ஒரு மாசமாவது டூ விடுவேன்”ன்னு சொன்னேன். ஒருத்தன், “நான் பத்து மாசம் டூ விடுவேன்”ன்னான். ‘கொட்டு’ மட்டும், “நான் ஒரு வருஷம்”னான். 10 மாசத்தைவிட ஒருவருஷம் பெருசான்னு அப்ப சரியாத் தெரியலை. ஏதோ ஒண்ணு. ஆக எங்க யாருக்குமே அவங்க ரெண்டு பேரும் சிரிச்சுப்பேசறது பிடிக்கலை. அதிர்ச்சிதான்.

ஆனா ‘கொட்டு’ கொஞ்சம் சூட்டிகை. நிறைய ஊர் ஊரா மாத்தலாகி படிச்சு வந்தவன். எங்க க்ரூப்லயே அவன் மட்டும் கொஞ்சம் பெரியவங்க தமிழ்ல பேசறதெல்லாமும் புரிஞ்சுப்பான். அவந்தான் அவங்க என் பாட்டியைப் பத்தி அவங்க வீட்டுக்கு நாங்க போயிருந்தபோது என்ன பேசிண்டாங்கன்னு இப்ப சொன்னான். எனக்கு அதிர்ச்சியா இருந்தது. கைல வெத்தலைப்பாக்கு சுண்டல் எல்லாம் போட்டு கனமா ஒரு பை. புடவை முன்கொசுவம் வேற லூசாகி அதைவேற தூக்கிகிட்டே தடுக்கி தடுக்கி நடக்கறேன், நடக்கவே முடியாம. அவன் சொன்னது வேற சரியாப் புரியலையா, என்னவோ கொஞ்சம் வாடிப்போயிட்டேன்.

அப்ப பார்த்தா தூரத்துல எங்கப்பா ஓடிவராரு என்னப் பார்த்துட்டு. ஆஃபீஸுலேருந்து வந்தவரு, வாசல்லயே நான் வரேனான்னு பாத்துகிட்டிருந்திருக்காரு. தூரக்க எங்க கோஷ்டியைப் பாத்ததும் ஓடிவந்து, என் கைல இருக்கற பையெல்லாம் வாங்கிக்காம அப்படியே மொத்தமா என்னைத் தூக்கிக்கறார். கூட வந்தவங்களை அப்படியே விடலாமான்னெல்லாம் அப்ப ஒண்ணும் மரியாதை எல்லாம் தெரியாது. “ஹை, அப்பா!”ன்னு நானும் ஓடிட்டேன்.

“ஆருடா அது, பெரிய மனுஷங்களா இருக்காங்க.. அப்பாக்கே ஆருன்னு தெர்லயே..” குரலை மழலையா மாத்தி, கொஞ்சிண்டே அப்பா என் மூஞ்சியோட மூஞ்சி வெச்சுத் தேக்கறாரு. வெள்ளிக்கிழமை எப்பவும் ஷேவ் பண்ணமாட்டார் அப்பா. ‘ஐயோ மீசை.. மீசை..’ன்னு (கன்னப்பரப்பும் மீசைதான் அப்ப) சிரிச்சுகிட்டே இருக்கேன். ‘குத்துது’ன்னு மேல சொல்லமுடியாம ஒரே கிச்சுக்கிச்சா இருக்கு. தடுக்க முடியாம ஒருகைல பை, இன்னொன்னுல குங்குமச்சொப்பு. நெளிய நெளிய தூக்கிகிட்டுப் போய் எங்கவீட்டு நடுக்கூடத்துல இறக்கிவிட்டார். பாட்டிதான் ஓடிவந்து கட்டிப் பிடிச்சுண்டா. அம்மா லேட்டானதுக்கு திட்டவேயில்லை. கொலுக்கு வந்தவங்க கூத்துல என்ன மறந்துட்டாளோ என்னவோ.

பாட்டி உக்காரவெச்சு திரும்ப எல்லாத்தையும் மெதுவா அவிழ்த்து, தலைசாமான் எல்லாம் பத்திரமா எடுத்துவெச்சுண்டே அப்பாவை சீண்டறா. ‘எப்படிடா இருக்கா என் பேத்தி? சேத்து வெச்சுக்கோ கல்யாணத்துக்கு இப்போலேருந்தே..’.

அப்பா சிரிச்சுண்டே, ‘வாட், நான் எதுக்கு சேக்கணும், என் பொண்ணை எவனாவது பணம் கொடுத்து, கல்யாணம் செஞ்சுண்டு போவான்’னு சொல்லி முடிக்கறதுக்குள்ள அம்மா ஒரு சின்ன சண்டை போட தயாரா வந்தா. ‘ஆமா, நீங்க அப்படித்தான் என்னை செஞ்சுண்டேளா, எவனாவது பகல் கொள்ளைக்காரன் வந்து உங்களை மொத்தமா சுரண்டனும்.(நாக்குல சனி!) நான் கண்குளிரப் பாக்கணும்.”

மேல கூட அம்மா பேசியிருப்பா நிறைய. ஆனா அதுக்குள்ள அந்தப் பட்டுப்புடவையோட நிலைமையைப் பாத்து பதறிட்டா. எல்லா இடத்துலயும் சந்தனம், குங்குமம், எண்ணைக் கறை, பார்டர் எல்லாம் ரோட்டுல புரண்டு மண். அலறிட்டா. “சின்னக் குழந்தைக்கு யாராவது இந்தப் புடவை எல்லாம் கட்டலாமா, சொன்னா கேக்கமாட்டேங்றேளே”ன்னு பாட்டியை நொந்துண்டா. “உனக்கு இப்படி எத்தனை புடவை வேணும்?” பாட்டி அமைதியா திரும்பக் கேக்கறா. இப்படி பேசிண்டிருக்கும்போதே பாட்டி என்னை அலங்காரத்துலேருந்து மொத்தமா ரிலீஸ் செஞ்சு, தலையை அலுங்காம திரும்பப் பின்னிட்டா.

‘இனிமே இது எங்க சாப்பாடு சாப்பிடப் போறது, ஒரு டம்ளர் பால் கொண்டா’- அம்மாவுக்கு சொல்லிட்டு, ‘நீ போய் அவளோட கவுனைக் கொண்டாடா’- அண்ணனுக்கும் சொல்லிட்டு தான்போய் திருஷ்டி சுத்திப்போட உப்புமிளகாய் எடுக்க உள்ள போனா.

மூணுபேரும் பொருளோட திரும்ப வரதுக்குள்ளயே எந்த கண்ணனோட காதல் தொந்தரவும் இல்லாததால அன்றைய ஆண்டாள் அப்பா மடிலயே நிம்மதியா தூங்கிடுச்சு.

லாலி!

-0-

இவ்ளோ சந்தோஷமான வீட்டுல, மறுநாள் பாட்டி எனக்கு பல்விளக்கி விடும்போது, “ஏன் பாட்டி உனக்கு குழந்தையே இல்லையாமே, அப்பாவ நீ ஓசியடிச்சியாமே?,” ‘கொட்டு’ சொன்னதோட அர்த்தம் சரியாப் புரியாம நான் கேட்டுவைக்க, அதுவரைக்கும் ஒரு தைரியமான, திமிர்பிடிச்ச, சமுதாயம் பார்த்து மரியாதை தர ஒரு ஆளாவே நான் பாத்துவந்த என் பாட்டி கதறி அழுததும், எங்கவீடே அன்னிக்கி சோகமானதும் இப்ப நினைச்சாலும் கலக்கமா இருக்கு.

அதுக்கு அப்புறமும் பாட்டி என்கிட்ட சாதாரணமா, ரொம்ப ரொம்பப் பாசமா, பிரியமா, உயிராத்தான் இருந்தான்னாலும் எனக்கு என்னவோ சின்ன இடைவெளி விழுந்துடுச்சோன்னு தோணிகிட்டே இருந்தது. நவராத்திரி வெள்ளிக்கிழமைன்னாலே இந்த உறுத்தல் இன்னும் அதிகமாயிடுது.

பேசிமுடிச்ச வார்த்தைகளை திரும்ப எடுக்கமுடியும்னா எவ்ளோ நல்லா இருக்கும்!
 

நவராத்திரி: நடமாடும் கொலு – எம்.கே.குமார்