தமிழ்நாட்டில் பெண்பார்க்கச் செல்பவர்களுக்குக் கொடுக்கப் படும் முக்கிய உணவு. : ) எப்பொழுதிலிருந்து அந்த இடத்தை இது பிடித்தது, ஏன் அவர்களுக்கு பஜ்ஜியை தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை மக்கள் வந்ததும் வேகமாகத் தயாரிக்க முடிவதும், ஒரே வகையில் வெரைட்டி காண்பிக்க முடிவதும் காரணமாக இருக்கலாம். தமிழ்நாட்டின் நடைபாதைத் தள்ளுவண்டிகளில் அன்றாடம் அதிகம் விற்பனை ஆவதும் இதுவாகத் தான் இருக்கும்.

தேவையான பொருள்கள்:

கடலைப் பருப்பு – 1 கப்
பச்சரிசி – 1/3 கப்
துவரம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
காய்ந்த மிளகாய் – 4 அல்லது 5
பெருங்காயம்
எண்ணெய்
உப்பு – தேவையான அளவு.

கத்திரிக்காய், வாழைக்காய், வெங்காயம், உருளைக் கிழங்கு, சௌசௌ போன்ற காய்கறிகள்….

bajji 1

செய்முறை:

  • கடலைப் பருப்பு, துவரம் பருப்பு அரிசியைச் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • ஊறியதும் பெருங்காயம், காய்ந்த மிளகாய், சேர்த்து மிக மென்மையாக இட்லிமாவு பதத்திற்கு அரைக்கவும். கிரைண்டரில் அரைத்தால் நலம். மிக்ஸியும் பரவாயில்லை.
  • அரைத்து எடுப்பதற்கு முன் உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • காய்கறிகளை தயாராக நறுக்கிக் கொள்ளவும். கத்திரிக்காய், உருளைக் கிழங்கு, வெங்காயம், சௌசௌ போன்ற உருளையான காய்களை மெல்லிய வட்டமாக நறுக்கவும். வாழைக்காயை இரண்டாக வெட்டி, அகலமான இரண்டு பக்கங்களில் மட்டும் தோல்சீவி, நீளவாக்கில இரண்டு பக்கமும் தோலோடு மெலிதாக நறுக்கவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து நன்கு சூடாக்கவும். பஜ்ஜிக்கு எண்ணெய் குறைவாகக் காய்ந்திருந்தால் சரியாக வேகாமல் எண்ணெயைக் குடித்து சவசவவென்றிருக்கும். அதிகம் காய்ந்திருந்தால் மேலாகக் கருகி, உள்ளே காய் வேகாமல் இருந்துவிடும். சரியான பதத்தில் எண்ணெய் சுட்டதும் அடுப்பை நிதானமான சூட்டில் வைக்கவும்.
  • நறுக்கித் தயாராக வைத்திருக்கும் காய்கறிகளை ஒவ்வொன்றாக மாவில் தோய்த்து, எண்ணெயில் போடவும்.
  • இரண்டு பக்கமும் பொன்னிறமாகப் பொரிந்து பஜ்ஜி உப்பிவந்ததும் எண்ணெயை வடித்து வெளியே எடுக்கவும். 

bajji 2 

*  வெங்காயம், சௌசௌ போன்ற காய்கள் கொஞ்சம் இனிப்பாக இருப்பது பிடிக்கவில்லையென்றால் குடமிளகாயை வட்டமாக நறுக்கி, அதையும் அவைகளோடு சேர்த்து தோய்த்துப் போடலாம்.

* தோய்ந்திருக்கும் மாவு அடர்த்தியாக இல்லாமல், மெலிதாக மூடியிருந்தால் பாதி வேகும்போதே வெளியே எடுத்துவிடவும். அடுத்த தவணை பஜ்ஜியை எண்ணெயில் போட்டு எடுத்துவிட்டு, இவை ஆறியதும் மீண்டும் மாவில் தோய்த்து எண்ணெயில் நன்றாகப் பொரித்து எடுக்கவும். முக்கியமாக அப்பளம் போன்றவைகளுக்கு இந்தப் பிரச்சினை வரலாம்.

* வீட்டிலேயே பருப்புகளை ஊறவைத்து அரைப்பது மிகச் சிறந்த முறை. ஊறவைத்து செய்ய நேரமில்லை என்றால் கடலைப் பருப்பு, துவரம் பருப்பை வாணலியில் வறுத்து 5 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து, மிக்சியில் நைசாக அரைத்து, அரிசி மாவு கலந்து செய்யலாம்.

* பின்வருகிற அளவுகளில் மொத்தமாக மிஷினிலும் அரைத்துவைத்துக் கொள்ளலாம். அவ்வப்போது தேவையான அளவு மாவை உப்பு பெருங்காயம் சேர்த்துக் கரைத்துச் செய்யலாம்.

1. கடலைப் பருப்பு – 3 கப், பச்சரிசி – 1/2 கப், காய்ந்த மிளகாய் – 12

2. பச்சரிசி 1 1/2 கப், துவரம் பருப்பு – 1 கப், கடலைப் பருப்பு – 1 கப், உளுத்தம் பருப்பு – 1/2 கப், காய்ந்த மிளகாய் – 12

* சட்டென பஜ்ஜி தயாரிக்க கடலை மாவு ஒரு கப், அரிசி மாவு ஒரு டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கரைத்தும் செய்யலாம். அதிகம் பேர் அப்படித் தான் செய்கிறார்கள்.

* பஜ்ஜி கரகரப்பாக இருக்க சமையல் சோடா சேர்ப்பதை விட இரண்டு டீஸ்பூன் டால்டா அல்லது 1 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃளோர் சேர்த்துக் கொள்ளலாம்.

* கரகரப்பாக இல்லாமல் மெத்தென்று இருக்க மைதா மாவு 2 டேபிள்ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம். இது ஆறிய பின்னும் சுவையாக இருக்கும்.

* இட்லி அல்லது தோசை மாவு இருந்தாலும் ஒரு கரண்டி கலந்து கொள்ளலாம்.

* பஜ்ஜி கடையில் செய்வதைப் போல் நிறமாக இருக்க விரும்புபவர்கள் கலர் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது காஷ்மீர் மிளகாய்த் தூள் சேர்த்து உபயோகித்தாலும் அடர் சிவப்பாக இருக்கும். என்னுடையது அதுவே.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தேங்காய்ச் சட்னி…

நல்ல மழை…

சுடச் சுட செய்து தட்டில் எடுத்து வந்து கையில் கொடுக்க அம்மா அல்லது மாமியார் [ஒருவேளை அவர்களைக் கேட்டால் மருமகள் என்று சொல்லலாம். :)]…

“போரடிக்குதுன்னு நீ சொன்னியேன்னு தான் வேலையை எல்லாம் போட்டுட்டு சீக்கிரமே வந்தேன்” என்று (பொய்) சொல்லிக் கொண்டு எதிர்பாராத நாளில் மாலையிலேயே கிரிக்கெட் மேட்ச் பார்க்க வரும் கணவன்…

பேசுவதற்கு சூடான விஷயங்கள்..

“C6 block கட்டிடமே என்னமோ இடிஞ்சு விழுந்துடுச்சுன்றாங்க. காலனியே அங்க இருக்கு, நீ பஜ்ஜி போட்டுகிட்டிருக்க?”

“எதுக்கு இவ்ளோ அதிர்ச்சி? ரெண்டு வருஷமா அதைத் தானே நான் அலறிகிட்டிருக்கேன். கன்ஸ்ட்ரக்ஷன் படு கேவலம். எல்லாரும் சாப்பிட்டுட்டாங்கன்னு நான் சொல்லும்போதெல்லாம் ஆளாளுக்கு வானமாமலை ஜீயரைச் சுத்தி நிக்கிற அடிப்பொடிகள் மாதிரி உஸ் உஸ்னு என் வாயை அடைச்சாங்க. இன்னிக்கு என்னவோ நடக்க முடியாதது நடந்த மாதிரி…. எனக்கு அதிர்ச்சியெல்லாம் இல்லை. நல்லவேளை, யாருக்கும் ஒன்னும் ஆகலை, வீட்டுக்குள்ள இருந்திருக்காங்க. இதுக்கு மேல இதுக்கெல்லாம் என்னால ரியாக்ஷனும் காமிக்க முடியாது! நான் அங்க ஒன்னும் சொல்லாம வந்ததுக்கே எனக்கு நன்றி சொல்லுங்க. தேவை இல்லைன்னு தான் உங்களுக்கும் ஃபோன்ல சொல்லலை.”

“நீ போய்ப் பாக்கலையா?”

“பின்ன பார்க்காம? ஃபர்ஸ்ட் ஃப்ளோர் வாசல் கதவுலேருந்து மாடிப்படி வரைக்கும் முழுக் காரிடரும் மொத்தமா விழுந்திருக்கு. லட்சக்கணக்குல காலனில திருட்டுப் போனப்ப ஒரு FIR ஃபைல் பண்ண என்ன பிகு செஞ்சாங்க போலீஸ் ஸ்டேஷன்ல, இப்ப ஊருக்கு முன்னாடி வந்து நிக்கறாங்க. நான் போறதுக்குள்ளயே Fire Brigades, Police, Media… எல்லாரும் வந்தாச்சு. ஒரு மாசத்துக்குள்ள காலி செய்யணுமாம். இல்லைன்னா சீல் வெப்போம்னு ஆர்டர்..”

“உனக்கு பயமா இல்லையா இந்த பில்டிங்ல இருக்க? கூலா பஜ்ஜி சாப்பிடற, அலட்டிக்காம கம்ப்யூட்டர்ல வேற வந்து உக்கார்ற?”

“இல்லையே சூடாத் தான் பஜ்ஜி சாப்பிடறேன். உங்களுக்கு பயமா இருந்தா ப்ளாட்ஃபார்ம்ல போய்ப் படுங்க. நானெல்லாம் தமிழச்சி. உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்…” ஐயோ!! மேற்குப் பதிப்பகம் கிட்டேயிருந்து பின்னூட்டம் வந்திருக்கா?? தலை சுத்துதே..!!!

மிளகாய் பஜ்ஜி இன்னபிற….

பஜ்ஜி குறித்த சுவாரசியமான கட்டுரைத் தொடர்…