1.
தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 2 கப்
உளுத்தம் மாவு – 4 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
வெண்ணை – 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி
உப்பு
எண்ணெய்

uppu cheedai_sreejayanthi

செய்முறை:

  • அரிசியை லேசாக, சற்று சிவந்த நிறந்த்திற்கு வறுத்து, கரகரப்பாக அரைத்து சலித்துக் கொள்ளவும்.
  • உளுத்தம் பருப்பைச் சிவக்க வறுத்து, நைசாக அரைத்து, சலித்துக் கொள்ளவும்.
  • கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
  • சீரகம், மிளகை சுத்தம் செய்து, ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய், சில் இல்லாமல் நன்றாகத் துருவி லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  • எல்லாவற்றையும் ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, அத்துடன் உப்பு, பெருங்காயம் சிறிது நீரில் கரைத்துச் சேர்க்கவும்.
  • வெண்ணய் அல்லது நெய் விட்டு, சிறிது சிறிதாக நீர் சேர்த்துப் பிசையவும்.
  • பிளாஸ்டிக் பேப்பர் அல்லது தட்டில் சீடைகளாக உருட்டிப் போட்டு, வாணலியில் நிதானமான தீயில் பொன்னிறமாக ஓசை அடங்கும்வரை பொரித்து எடுக்கவும்.
     

2.
தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 2 கப்
உளுத்தம் மாவு – 4 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
வெண்ணை – 1 டேபிள்ஸ்பூன்
எள் – 2 டீஸ்பூன்
காரப் பொடி
உப்புப் பொடி
பெருங்காயப் பொடி
உப்பு
எண்ணெய்

செய்முறை:

  • அரிசியைச் சுத்தம் செய்து, நீரில் கழுவி, அரை மணி நேரம் ஊறவைத்து, லேசாக துணியில் உலரவைத்து, மிக்ஸியில் அரைத்து, கட்டியில்லாமல் சலித்து, வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.
  • உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து மிக்ஸியில் அரைத்து நைஸ் சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.
  • மாவில் பத்திற்கு ஒன்று என்ற அளவில் உளுத்தம் மாவு சேர்த்தால் சரியாக இருக்கும்.)
  • எள்ளை கல், மண் தூசி இல்லாமல் சுத்தமாக்கிச் சேர்க்கவும்.
  • கடலைப் பருப்பை சுத்தம் செய்து, ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து மாவில் சேர்க்கவும்.
  • காரப் பொடி, உப்புப் பொடி, பெருங்காயப் பொடி, வெண்ணை சேர்த்து, நீர் விட்டுப் பிசையவும்.
  • பிளாஸ்டிக் பேப்பர் அல்லது தட்டில் சீடையை உருட்டிப் போட்டுக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெயில் 20, 25 சீடைகளாகப் போட்டு, நிதானமான தீயில் பொன்னிறமாகப் பொரித்து, ஓசை அடங்கியதும் எடுக்கவும்.

-0-

* அரிசியை கரகரப்பாக அரைத்து, நன்றாகச் சலிக்காவிடில், அதிலுள்ள கற்கள் மண்களாகி ஒவ்வொரு துகளுக்கும் வெடிக்கும்.

* உளுத்தம் மாவுக்கும் அஃதே.

* எள்ளை நன்றாக கல் சோதித்துவிடுவது நல்லது. இல்லாவிடில் கண்டுபிடிக்க முடியாது.

* கடலைப் பருப்பு, மிளகு, சீரகத்தையும் நன்றாக சுத்தம் செய்தபின்பே உபயோகிக்கவும்.

* தேங்காய்த் துருவல் சேர்ப்பதாக இருந்தால், அதில் பெரிய சில்லுகள் இல்லாமல் நன்றாகத் துருவிக் கொள்ளவும். வாணலியில் சிறிது வறுத்துக் கொள்வதும் நல்லது.

* உப்பு, பெருங்காயப் பொடி போன்றவைகளை நேரடியாகச் சேர்க்காமல், நீரில் கரைத்துச் சேர்த்தால் வெடிக்காது.

* சீடை உருட்டியதும், ஒரு குண்டூசியால் ஒவ்வொரு சீடையிலும் குத்தியபின், காய்ந்த எண்ணெயில் போட்டால், சீடை வெடிக்காது.