தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 2 கப்
வெல்லம் – 2 கப்
ஏலப்பொடி
நெய் அல்லது டால்டா அல்லது எண்ணெய்

செய்முறை:

  • அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து, சிறிது உலர்த்தி, மிக்ஸியில் பொடித்து, நைசான சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.
  • 1/4 கப் தண்ணீரில் வெல்லத்தைப் போட்டு பாகு காய்ச்சவும்.
  • மிதமான பாகுப் பதம்(தண்ணீரில் சிறுது விட்டு எடுத்து உருட்டினால் உருட்ட வராமல் தொய்ந்து கொள்ளும்) வந்ததும் இறக்கி, மாவை பாகில் செலுத்தி, ஏலப்பொடி சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் நெய் அல்லது எண்ணெய் வைத்து, காய்ந்ததும், தேவையான அளவிற்கு மாவை உருட்டி, கால் அங்குல கனத்திற்கு வட்டமாகத் தட்டிப் போட்டு, வெந்ததும் எடுத்து ஒரு தாம்பாளத்தில் வைக்கவும்.
  • தட்டையான முகமுள்ள கரண்டியால் மெதுவாக மேலாக அழுத்தினால், அதிகமுள்ள எண்ணெய் வெளியே வடிந்துவிடும். (வடிந்த எண்ணெயை திரும்ப சேர்த்துக் கொள்ளலாம்.)

* உருண்டை வெல்லமாக இருந்தால் நல்லது. அச்சு வெல்லம் உபயோகித்தால் உதிர்ந்து விடும்.

* வெந்து எடுக்கும் போது மொறுமொறுப்பாகவும் ஆறியபின் பதமாகவும் இருக்கும்.

* அதிரசம் உதிர்ந்தால், இன்னும் சிறிது ஈரமாவைச் சேர்த்துப் பிசைந்து கொள்ளலாம்.

* முதல்நாளே பாகு செலுத்தி, மறுநாள் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். ஆனால் முதல்நாள் பாகு செலுத்துவதானால், சற்று முன் பதத்திலேயே எடுத்து, மாவை சற்றுத் தளர இருக்கும்படி செலுத்திவைத்தால் மறுநாள் இறுகி, தட்டும் பதமாக இருக்கும். அப்படி இல்லாமல் இறுகி இருந்தால், சிறிது பால் தெளித்தும் தளர்த்திக் கொள்ளலாம்.