நான் சமைக்க ஆரம்பிச்சு முதல்முதல்ல செஞ்ச ரசம் இதுதான். ஐயோ, முதல்லயே கஷ்டமானதா எதுக்கு செஞ்ச? சிம்பிளா எதாவது வறுக்காம அரைக்காம செய்யற சாத்துமதா செஞ்சிருக்கலாமேன்னு அம்மா பயந்தாங்க. இது கஷ்டம், இது சுலபம்னெல்லாம் கண்டுபிடிக்கற அளவுக்குக் கூட சமையல் அறிவு இல்லாதவ, எதைச் செஞ்சாலும் டைரியைப் படிச்சுதான் செய்யணுங்கற நிலைமைல இருக்கறவளுக்கு கஷ்டம் என்ன, சுலபம் என்ன? நல்லா இருந்ததும்மான்னு வேற தன்னடக்கத்தோட சொல்லிப் பார்த்தேன். இது யார் செஞ்சாலும் நல்லாத் தான் இருக்கும்னு சொல்லிட்டாங்க. (Grrr…)

தேவையான பொருள்கள்:

புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
தக்காளி – 2, 3
துவரம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் (வேகவைத்து மசித்தது)
மஞ்சள் தூள்
உப்பு – தேவையான அளவு

mysore rasam 1

வறுத்துப் பொடிக்க:
காய்ந்த மிளகாய் – 3
மல்லி விதை – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு – 1 டீஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பெருங்காயம்
கொப்பரைத் தேங்காய் – 1 டேபிள்ஸ்பூன்(துருவியது)

தாளிக்க: எண்ணெய், கடுகு, சீரகம், , கறிவேப்பிலை.

mysore rasam 2

செய்முறை:

  • புளியை நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் வைத்து, காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, மிளகு, மல்லி விதை, சீரகம், பெருங்காயம், கொப்பரைத் தேங்காய்த் துருவல் என்ற வரிசையில் வறுத்து, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
  • புளி நீரில் தக்காளியை கையால் நன்றாக நசுக்கிவிட்டு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
  • புளி வாசனை அடங்கியதும், வேக வைத்த துவரம் பருப்பும் அடுத்து அரைத்து வைத்துள்ள பொடியையும் போட்டு மேலும் கொதிக்க விடவும்.
  • தேவையான தண்ணீர் சேர்த்து விளாவி, நிதானமான தீயில், பொங்கி வரும் சமயம் இறக்கவும்.
  • எண்ணெயில் கடுகு, சீரகம் கறிவேப்பிலை தாளித்து, கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறலாம்.

* அடியில் வண்டலாக இருக்கும். மேலாக நன்றாகக் கலக்கிப் பரிமாறினால் தான் சுவையாக இருக்கும். அப்படியும் வண்டல் மிஞ்சியிருந்தால் அதை அடுத்த வேளைக்குச் செய்யும் கூட்டில் அல்லது குழம்பில் விடலாம். : ) சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.