கடுப்பு வலியைப் போக்கும் கண்டத்திப்பிலி என்பது வழக்கு. மழை அல்லது சீதோஷ்ண மாற்றங்கள், மிகுதியான வேலை போன்ற காரணங்களால் வரும் உடல் வலி, காய்ச்சல், தொண்டைக் கட்டு போன்ற அறிகுறிகளுக்கு இந்த ரசம் மிகவும் சிறந்த மருந்து.

ஸ்ரீகாந்த், மேலதிகத் தகவல்கள், குறிப்பில் மாற்றங்கள் இருந்தால் உங்கள் அம்மாவிடம் கேட்டு இங்கே சொல்லவும்.

தேவையான பொருள்கள்:

புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள்
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு
நெய்

kandaththippili

வறுத்து அரைக்க:
கண்டத்திப்பிலி – 8, 10 குச்சிகள்
சதகுப்பை – 2 டீஸ்பூன் (விரும்பினால்)
பூண்டு – 4 பல் (விரும்பினால்)
காய்ந்த மிளகாய் – 2
துவரம் பருப்பு – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
 

தாளிக்க: கடுகு, சீரகம், கறிவேப்பிலை.

kandaththippili rasam

செய்முறை:

  • திப்பிலி, சதகுப்பை, மிளகாய், துவரம் பருப்பு, மிளகு, சீரகத்தை தனித் தனியாக, நன்கு சிவக்க நெய்யில் வறுத்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • புளியை நீர்க்கக் கரைத்து உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், லேசாக நசுக்கிய பூண்டுப் பல் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
  • புளி வாசனை போனதும், அரைத்த விழுதைப் போட்டு, கொதித்ததும்(இந்த நேரத்தில் நல்ல வாசனை வரும்.), தேவையான தண்ணீர் மேலும் சேர்த்து விளாவவும்.
  • நிதானமான தீயில் பொங்கிவரும்போது இறக்கவும்.
  • ஒரு டீஸ்பூன் நெய்யில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.

* மற்ற ரசம் மாதிரி தெளிவாக இல்லாமல் கொஞ்சம் கலங்கி கெட்டியாகத் தான் இருக்கும்.

* திப்பிலி என்று பொதுவாகக் குறிப்பதைவிட கண்டத்திப்பிலி என்று சொல்வதே வசதி. ஏனென்றால் அரிசித் திப்பிலி என்றும் ஒரு மருந்துப் பொருள் (கருப்பாக மிளகுவகை மாதிரி) இருக்கிறது.

* சதகுப்பைக்குப் பதில் 10 அரிசித் திப்பிலியும் சேர்த்துக் கொள்ளலாம்.

* பொதுவாக இதில் தக்காளி சேர்ப்பதில்லை. நான் சேர்க்கவில்லை. விரும்புபவர்கள் இரண்டு தக்காளி சேர்த்துக் கொள்ளலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சூடான சாதத்தில், சுடச் சுட இந்த ரசத்தை விட்டுச் சாப்பிடலாம். தொட்டுக் கொள்ள பருப்புத் துவையல். இத்துடன் வேறு உணவுகள், தயிர் சாதம் போன்றவற்றையும் சேர்த்துச் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

Advertisements