தேவையான பொருள்கள்:

வெண்டைக்காய் – 1/2 கிலோ
தயிர் – 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்
உப்பு

தாளிக்க:  எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை

vendaikkaai fry

செய்முறை:

  • வெண்டைக்காயைக் கழுவி, நன்றாக மேல் ஈரம் காயவிட்டு, சிறிய வட்டங்களாகவோ அல்லது நீளமாக குறுக்கிலோ நறுக்கிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து வெண்டைக்காயைச் சேர்க்கவும்.
  • உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தயிர் சேர்த்துப் பிரட்டிவிட்டு, சிம்மில் வைத்து மூடிவைக்கவும்.
  • அவ்வப்போது திறந்து கிளறிவிட்டு மீண்டும் மூடவும்.
  • அரைப் பதம் வெந்ததும், கடலை மாவு தூவி, திறந்துவைத்தே வேகவைக்கவும்.
  • அடிப்பிடிக்காமல் மெதுவாக அவ்வப்போது திருப்பிவிட்டு, முக்கால் பதம் வெந்ததும் இறக்கவும்.

* வெண்டைக்காய் நறுக்கும்போது இடையில் ஒன்றிரண்டு முற்றிய காய்கள் இருந்தால் நிச்சயமாகத் தூர எறிந்துவிடவும். அவை மொத்த உணவையே சாப்பிடமுடியாமல் கெடுத்துவிடும்.

* விரும்புபவர்கள் ஒரு டீஸ்பூன் கொத்தமல்லித் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

* தயிருக்குப் பதிலாக புளிநீரும், காரப்பொடிக்கு பதில் ரசப்பொடி அல்லது கறிப்பொடியும் சேர்க்கலாம்.

* மிளகாய்த் தூளைக் குறைத்துக் கொண்டு, காலையில் செய்த தேங்காய்ச் சட்னி மீந்திருந்தால் அதையும் சேர்த்துக் கிளறியிருக்கிறேன். நன்றாக இருக்கும். (பச்சை மிளகாய், பொட்டுக்கடலை தேங்காய் அரைத்துச் சேர்ப்பது ஆந்திரா ஸ்டைல்)

* வெண்டைக்காயுடன், தக்காளி, தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் மட்டும் அரைத்துவிட்டு தேங்காய் எண்ணையில் கடுகு தாளிக்கலாம். (கேரளா ஸ்டைல்)

* வெண்டைக்காயை நீளத் துண்டுகளாக நறுக்கி, அரை மூடி தேங்காய், 4, 5 காய்ந்த மிளகாய், 1/2 டீஸ்பூன் சீரகம், உப்பு சேர்த்து அரைத்து காயில் பிசிறி 20 நிமிடம் வைத்து, வாணலியில் எண்ணெயில், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து வதக்கலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சும்மாவே சாப்பிடலாம்.

குழம்பு, ரசம் என்று எல்லா சாதத்துடனும், முக்கியமாக தயிர் சாதத்துக்கு மிகவும் பொருந்தும்.

Advertisements