சின்ன வயதில் திரைப்படங்களுக்குப் போயிருக்கிறேன். கதை காட்சிகள் எதுவும் நினைவில்லை. ஆனால் படம் முடிந்ததும் கடைசியில் கருப்பு வெள்ளையில் ஒரு கொடி சட்டெனெ திரையில் விழும். எல்லோரும், எழுந்து நிற்க ‘ஜன கன மண’ பாடுவார்கள். எப்போது இந்தப் பழக்கம் நின்றது என்றோ, அதைவிட முக்கியமாக ஏன் நின்றது என்றும் எனக்குச் சரியாக சொல்லத் தெரியவில்லை.

[ஹாங்காங்கில் இந்தியக் குழந்தைகளை வாரம் ஒருமுறை இணைத்து சில உருப்படியான விஷயங்களைச் செய்துகொண்டிருந்தோம். (தெரிந்த குழந்தைகள் தெரியாத குழந்தைகளுக்கு செஸ் போன்றவற்றின் நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுப்பது, படித்த புத்தகங்களை ஒருவருக்கொருவர் மாற்றிப் படிப்பது, படித்துக் காட்டுவது, போட்டிகள்… இப்படி. நான் போகத் தொடங்கியபோது, நிகழ்ச்சி முடிந்ததும் தேசியகீதம் பாடச் சொல்லலாம் என்று சொன்னேன். “But why?” என்ற கேள்வி வந்தது. அந்த டோக்கனை வைத்துத் தானே குழந்தைகளை சந்திக்க வைக்கிறோம். Why not? எதிர்பார்த்தபடியே இந்தியாவிலிருந்து இடையில் போயிருந்த குழந்தைகள் தவிர பல குழந்தைகளுக்கு அந்தப் பாடலே தெரியவில்லை. இதெல்லாம் பெற்றோரைப் பொருத்த வரை பள்ளியில் சொல்லித் தரவேண்டியது என்ற எண்ணம் தவிர வேறு காரணம் இருக்க முடியாது. இத்தனைக்கும் இவர்களது பள்ளி அந்தந்த நாட்டுக் கொடி, கீதம், கலாசாரம், உணவு எல்லாவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும், தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற பள்ளி.]

வலைப்பதிவர் பட்டறையில் ஆரம்பத்திலோ முடிவிலோ தமிழ்த் தாய் வாழ்த்து பாடினார்களா என்று ஒரு நண்பரை சும்மாத் தான் கேட்டேன். “நான் கவனிக்கவில்லை. நீயெல்லாம் வளரவே மாட்டியா?” என்று திருப்பிக் கேட்டார்.

janaganamana

இந்த ஞாயிறன்று adlabs திரையரங்கில் ஜாக்கி சான் படம் சென்றிருந்தோம். விளம்பரங்கள் டிரெயிலர்கள் எல்லாம் முடிந்து அதிரடிக்குத் தயாராக வசதியாக உட்கார்ந்தால், மெயின் படம் ஆரம்பிப்பதற்கு முன் “Please stand up for National Anthem” என்று ஒரு ஸ்லைடு. சுதாரித்து முடிப்பதற்குள் எல்லாரும் எழுந்து தேசிய கீதம். இந்த mall சமீபத்தில் தான் திறந்திருக்கிறார்கள். ஆனால் மும்பையின் எல்லா அரங்குகளிலும் இந்த வழக்கம் உண்டா சரியாகத் தெரியவில்லை. அல்லது நான் தாமதமாகப் போய் கவனிக்கவில்லை. (இன்று வேறு ஒரு அரங்கிற்குப் போகிறேன். கவனிக்க வேண்டும்.)

திரையரங்குகளுக்குத் தேவையா என்று சொல்லத் தெரியவில்லை. நம் மாநிலத்தில் மட்டும் தான் இந்த வழக்கம் இல்லையா? அல்லது மும்பையில் மட்டும் தான் இருக்கிறதா?

Advertisements