அத்யாவசிய முன்குறிப்பு:

 யாராவது தலைப்பைப் பார்த்து, சுஜாதைவை கற்றதும் பெற்றதும் பகுதிக்காக தாக்கியிருக்கேன்னு நினைச்சு இந்தப் பக்கம் திறந்திருந்தா, தயவுசெய்து சன்னலை மூடிடுங்க. இது தெரியாத்தனமா ரெண்டு வருஷம் முன்னாடி என் கவிதைக்கு வெச்ச பேர். இப்ப மாத்த முடியாது.

-0-

அதாகப் பட்ட இந்தக் கவிதை அல்லது கவுஜை, மரத்தடிப் போட்டிகள்ல, எல்லாப் பிரிவுலயும் சேர்ந்துடணுங்கற ஒரு அல்ப ஆசைல எழுதிப் பார்த்தது. அட, மூன்றாம் அல்லது இரண்டாம் பரிசுன்னு இல்லை, முதல் பரிசுகூட வாங்கலைன்னா பாருங்க. அநியாயத்துக்கு வார்த்தைகள் ஏராளம்னு பெரிய பெரிய ஆளுங்களெல்லாம் உதடு பிதுக்கினாங்க… (எழுதறதுன்னு முடிவு பண்ணிட்டோம். அப்புறம் என்ன கஞ்சத்தனம்?) ஆனா….

கவுஜ மடக் காரியதரிசி உஷா, அப்பல்லாம் நவீன கவிதைக்குன்னு ஒரு லிஸ்ட் வெச்சிருப்பாங்க. யார் கவிதை எழுதினாலும் லிஸ்ட்ல இருக்கற வார்த்தை எல்லாம் கவுஜைலயும் இருக்கான்னு அவங்க தான் செக் பண்ணிப் பார்த்து மரத்தடில சான்றிதழ் தருவாங்க. இன்னிக்கி அந்த லிஸ்ட் பல பரிமாணங்களை/பரிணாமங்களை அடைஞ்சிருக்கலாம். ஆனா அன்னிக்கி தேதில அவங்க லிஸ்ட்ல இருந்த எருமை, சூரியன், காண்டாகினி மாதிரி சிலபல வார்த்தைகள் இல்லைன்னாலும், மரம், பட்டம், மாஞ்சா மாதிரி சில வார்த்தைகளுக்காக (திரும்பத் திரும்ப அழுத்திக் கேட்டதுல) ரொம்பப் பெரிய மனசு பண்ணி நவீன கவுஜைதான் சான்றிதழ் தந்தாங்க. அந்த ஒரே தகுதியோட இந்தக் கவிதையை இங்கயும்… vijayramக்காக ஆடிப் பட்டம் (மரத்தடில)தேடி, இங்க போடறேன். 

நன்றி: மரத்தடி.காம்
 

-0-

கற்றதும் பெற்றதும்

 

எப்படியோ பிடித்துப் போனது
புயல்நாளில் வீட்டுச்சுவர் ஒதுங்கிய அந்தப் பட்டம்

கவுன்போட்ட தேவதை நானதைக்
கையிலெடுத்த நொடியிலிருந்து ‘என்னோட’ பட்டமென்றானது
முன்னேற்பாடின்மையில்
யாரோ வீசியிருந்த நூலெடுத்து
முன்னும் பின்னும் குறுக்கும் நெடுக்குமாய்க் கட்டி
முதல்தடவையாய் நூலில் மாஞ்சா சேர்த்ததில்
மென்தோல் கிழிந்து இரத்தக்களறி.
கையுதறிக் கையுதறி வலிதாங்கவொண்ணா நேரங்களிலெல்லாம்
‘என்னோட’ பட்டம் பார்த்து மரத்தேன்.

நூல் கோத்துக் கிளம்பிய நொடியில் விண்தொட்ட பெருமை
ஓட்டம் கையில் பட்டத்துடன்
கண்மண்தெரியாத ஓட்டம்

இமை மூடிய நொடியில் எதிர்மோதிய மரம்
மரச்செறிவில் செருகிக்கொண்டது பட்டம்.
பதறி இழுத்ததின் பயனாய் நூலறுந்து
கற்றுத்தந்தது
‘நான் பலம் சேர்த்ததும் பிடித்திருந்ததும்
வெறும் நூலன்றி பட்டமில்லை.’

பிரிவாற்றாது
தூரத்தில் அமர்ந்து
சிக்கிய பட்டம் பார்ப்பதே இயல்பென்றானது.
‘என்னோட’ பட்டம்.

“பந்து போடுடி, நான் பேட்டிங் செய்றேன்”
“ஸ்கிப்பிங் குதிக்கலாமா சேர்ந்து”
“ரைம்ஸ் கேசட் வெச்சிருக்கேன்”
“மணல்வீடு கட்டலாம்; கிச்சுக் கிச்சுத் தாம்பாளமும்”
“பனிப்பொம்மையாச்சும் செய்யலாமே!”

நண்பர்களும் பருவங்களும் மாறிமாறி அழைத்தும்
எதற்கும் அசையாது
தூரத்திலமர்ந்து பட்டம் பார்த்தபடி.
‘என்னோட’ பட்டம்.

ஆட்டையிலில்லை என்ற தைரியத்தில்
கையாலாகாத அகங்காரி
ஆள்வைத்து
வீடுபுகுந்து
என் பம்பரம் எடுத்து வட்டத்தில் வைத்துக் குத்தச்சொல்ல
கைகொட்டிச் சிரிக்கும் கூட்டம்.

பட்டம் பார்த்தபடி
கைகள் மட்டும் நூற்கண்டை அவிழ்ப்பதும் சுற்றுவதுமாய்.
அனிச்சை விளையாட்டில் நெருடி சற்றே மகிழ
நூலோடு பிய்ந்து வந்திருந்த பட்டத் துணுக்கு.

“நூல் என்னோடது”
அறியா கணத்தில் பறித்தோடியது அதையும் ஒரு கை.

எல்லாவற்றிற்கும் சாட்சியாய்
அசையாமல் பட்டம்
கம்பீரமாய் மரச்செறிவிலமர்ந்து கற்றுத்தந்தது
‘பந்தமென்பது பட்டத்திற்கில்லை’ என்று.

வெறுங்கையாய் தளர்நடையில் திரும்பிய வீட்டில்
பாதியில் விட்டுவந்த அம்மா-அப்பா விளையாட்டு
திரும்ப வருவேன் என்று காத்திருக்கும் ராமுவும்
பலநாளாய் சட்டை மாற்றப்படாத என் பார்பி பொம்மையும்

இழுத்து அணைக்கையில்
நெருடல் உணர்ந்து உள்ளங்கை பார்க்க
ரேகைகளுக்குப் போட்டியாய்
மாஞ்சா நூல் அறுத்த கோடுகள்

பார்க்கும்பொழுதெல்லாம் ‘என்னோட’ பட்டம் போலவே
ஜிவ்வென்று மேலுயறும் நினைவுகள்
உள்அழிந்துவிடாது இருக்கவேண்டும் தழும்புகள்
உயிர்வாழவாவது.

Advertisements