“அம்மா, என்னோட பல்லாங்குழி ஒன்னு இருக்குமே அது இப்ப எங்க?” இப்படி ஃபோன்பேசி வீட்டுக்குக் கேட்டு சில மாசங்கள் இருக்கும்.
“யாருக்குத் தெரியும்? அதான் வீடு இடிச்சுக் கட்டும்போது எல்லா சாமானும் போயிடுச்சில்ல, அதுல இதுவும் போயிருக்கும். இப்ப என்ன திடீர்னு காலங்கார்த்தால பல்லாங்குழி நியாபகம்?”
எது நடந்திருக்கக் கூடாதுன்னு பயந்தேனோ அதுதான் நடந்திருக்கு. 😦
“அதெப்படிம்மா போகும்? என்ன அலட்சியமா பதில் சொல்றீங்க..” மெதுவா கோபம் கிளம்பிச்சு.
“என்னைக் கேட்டா? உங்கப்பாவையே கேளு. தானப் பிரபு எல்லாத்தையும் ஊராருக்கு வாரி வழங்கிட்டாரு.. ஆனான அம்மியும், உரலும், கொலுப் படிக்கட்டும் போனதுக்கே கேக்க முடியாம இருக்கேன். பெரியவங்க ஆண்டு பழகினது. இனிமே தேடினாலும் அப்படி சாமானெல்லாம் கிடைக்குமா. நீ என்னவோ பல்லாங்குழிக்கும் சில்லாக்குக்கும் வந்துட்ட. ”
“சரி, அப்பாகிட்ட ஃபோனைக் குடு”
“எத்தனை குழந்தைகள் ஆடின மரத் தொட்டில்… போகப் போற குழந்தையை அதுல போட்டாக் கூட பொழச்சு எழுந்துக்கும் தீர்க்காயிசோட… அதைத் தூக்கி எவனோ பழைய சாமான் எடுக்கறவன், பாக்கப் பாவமா இருந்ததுன்னு கூப்டு வெறுன குடுத்திருக்கா..”
“அம்மா, ப்ளீஸ், அப்பாகிட்ட கொடு!”
வெளில போயிருக்கா. வந்ததும் பண்ணச் சொல்றேன். ஆமா, நீ என்ன காலங்கார்த்தால 7 மணிக்கு பல்லாங்குழியை நினைச்சுண்டாப்ல கேக்கற. உனக்கு வீட்டுல வேலையே இருக்காதா…?”
அம்மாவோட இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருக்கலாம். பாவம். அப்ப மூட் இல்லை. வெச்சுட்டேன். அப்பா வந்து போன் பண்றதுக்குள்ள இடைப்பட்ட நேரத் தவிப்பை சொல்லவே முடியாது. நிதானமா வந்து சாப்பிட்டப்பறம் எங்கம்மா சொல்லி, எங்கப்பா எடுத்து, “சொல்லும்மா..”
“என் பல்லாங்குழி என்னாச்சுப்பா?” வேற எதுவும் முதல்ல கேக்கப் பொறுமை இல்லை.
“அப்படீன்னா?”
“ப்ச்! மரத்துல செஞ்சிருக்குமே. மூடி வெச்சா பீர்க்காங்காய் ஷேப்ல இருக்குமேப்பா. குழி குழியா புளியங்கொட்டை எல்லாம் போட்டு விளையாடுவோமே..”
“ஓ, நான் கூட உரல், குழவின்னு அம்மா புலம்புவாளே, அந்த மாதிரி எதோன்னு நினைச்சு பயந்துட்டேன். விளையாடற சாமானா?” [“ஓ பழய கடிகாரமா, நான் கூட புதுசோன்னு பயந்திட்டேன்!”ன்னு அப்ரசண்டிகள் ஒடைச்ச ஜெர்மன் கடிகாரத்துக்கு சித்தப்பு, சொல்லும்போது எவ்ளோ சுலபமா விழுந்து விழுந்து சிரிக்கறோம்? 😦 ]
“தெரியலையே. மரச் சாமானெல்லாம் வேணுங்கறவங்களுக்கு கொடுத்திட்டேனே. விளையாட்டு சாமான்னா பக்கத்துவீட்டு வேலைக்காரக் கிழவி தான் பேரக்குழந்தைகளுக்கு இருக்கட்டும்னு எடுத்துகிட்டுப் போனான்னு நினைக்கறேன்.”
“என்ன விளையாடறீங்களாப்பா, போய் கேட்டு வாங்குங்க”
“உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? அவ பேரன்களெல்லாம் காலேஜ் போயிட்டாங்க”
“அதனால தான் சொல்றேன். அவங்களுக்கு எதுக்கு? என் பொண்ணு கேக்குதுன்னு சொல்லிக் கேளுங்க”
“என்னடா எனக்கு இப்படி விடிஞ்சிருக்கு இன்னிக்கி…. சரி பாக்கறேன்”
“பாக்கறேனெல்லாம் வேண்டாம். எனக்கு வேணும்!!”
‘நான் கொடுத்த கிழவி கொட்டாவி விட்டுட்டா’ன்னு பொய் சொல்லியிருக்கலாமில்ல?’ன்னு அப்புறம் தம்பி (Grrrr….) அட்வைஸ் செஞ்சானாம். இந்தத் தடவை ஸ்ரீரங்கம் போயிருந்தபோது நானும் நேர்லயே கேட்டுப் பார்த்தேன்.
“அது என்ன எளவோ தெரியலையே… அப்பாரு கூட கேட்டாரு. நினைப்புலயே இல்லை. புள்ளைங்க எங்கக் கொண்ட போட்டுச்சுங்களோ… அதெல்லாம் இப்ப யார் விளையாடுறாங்க… நல்லா இருக்கியா? எங்கிட்டு இருக்க?… போக வண்டிச் சத்தம் என்ன ஆகும்? வூட்டுக்காரரு நல்லா வெச்சிருக்காராத்தா? அந்த ஒத்தப் பொண்ணு தான் இல்ல?…. ஏன் ஆத்தா, இன்னும் கூட ஒன்னு ரெண்ட பெத்துப் போட முடியாமயா இருக்க?… தனிமரம் தோப்பாகுமா சொல்லு?… இப்படித்தான் என் கொழுந்தன் பேத்தி, ஒன்னு போதும் ஒன்னு போதும்னு இருந்துட்டு, 15 வயசுல வாரிக் கொடுத்திடுச்சு……………….”
“எதுக்கும் உங்க வீட்டுல தேடிப் பாக்கறீங்களா ஆயா?”
“அப்றம் எட்டு வீடு பிரிச்சு கட்டியாச்சு. இருந்தா தெரியாமயா இருக்கு? அந்தக் கருமாந்திரத்தை எல்லாம் இப்ப யார் விளையாடறாங்க?”
“இப்ப என்னம்மா செய்யறது?” அப்பாவுக்கு இப்பத்தான் லேசா குற்றவுணர்ச்சியே கண்ணுல தெரியுது.
“அவங்க சொல்ற மாதிரி இன்னும் ஒன்னு ரெண்டைப் பெத்துப் போட வேண்டியதுதான்.” – அண்ணன்.
“சே, பாவம் அந்தப் பாட்டி. சின்னக் குழந்தையாட்டம் கொடுத்ததைக் கேக்கறதெல்லாம் ஓவர்.” – தம்பி.
“உங்கப்பா கண்டிக்காம வெச்சிருக்காளே!” – அம்மா.
“ஆனா உன்னைவிட ஒம்பொண்ணு எவ்வளவோ மெச்சூர்ட்டா! அதைச் சொல்லியே ஆகணும்.” – அப்பா.
“அது என் பொண்ணு. இது உங்க பொண்ணில்ல..”, நேரம் பார்த்து ரங்கமணி கத்தி செருக, பேசக் கூடப் பிடிக்காம உள்ள போயிட்டேன். எல்லாருக்கும் என் பொழப்பு நக்கலாப் போச்சு. 😦
-0-
“ஹை ஜாலி அப்பா வந்தாச்சு!!” அப்பா ஆபிசுலேருந்து அல்லது ஊரிலேருந்து வரும்போது குதிச்சு எத்தனை வருஷமாச்சு? அல்லது எத்தனை வயசு வரைக்கும் குதிச்சுகிட்டிருந்தேன், நினைவில்லை. ஆடிட்டிலேயே தமிழ்நாடு முழுசும் சுத்திண்டிருந்த அப்பா… அப்பா வரதைவிட அதனால் வரப் போகிற ஆய பயன்கள்– உடனே பையிலிருது எடுக்கற சாப்பிடற பண்டங்கள், (அல்வா, பால்கோவா மாதிரி…), இது உடனடி மகிழ்ச்சி.. அப்புறம் கடைகளுக்கு, சினிமாவுக்கு கூட்டிப் போறது, கேட்டதையெல்லாம் வாங்கித் தர்றது (பொண்ணு கேட்கவே வேண்டாம், கண்ணால ஒரு பொருளை ஒரு செகண்ட் தயங்கிப் பாத்தாலே அவப்பா வாங்கித் தந்துடுவா அப்டீங்கறது அம்மாவோட இன்னும் தொடர்கிற குற்றச்சாட்டு. “ஆமா, கேட்டதை எல்லாம் வாங்கித் தந்திருக்கேன். ஆனா என்னால முடியாத எதையும் அவ கேட்டதில்லை” ங்கறது அப்பா தரும் நற்சான்றிதழ்!), இதையெல்லாம் விட முக்கியமாக பிராகரஸ் ரிப்போர்ட்ல கையெழுத்துப் போடரது (ஐயோ, அம்மா கிட்ட காட்டவே முடியாது. முதுகுத் தோலை உரிச்சுடுவா. எவ்ளோ மார்க் வாங்கினாலும், “நான் படிச்சு பேர்வாங்கின ஸ்கூல். இதுல எல்லாம் கையெழுத்துப் போட்டு என் பேரைக் கெடுத்துக்க முடியாது. உங்கப்பாகிட்டயே வாங்கிக்க!”ன்னு சொல்லி கடைசில கையெழுத்தும் போட மாட்டா. இரக்கமே கிடையாது. ‘இதுக்கு எதுக்கு காட்டி திட்டு வேற வாங்கற. பேசாம உள்ள வெச்சுடு, அவன் வந்ததும் வாங்கிக்கலாம்’னு பாட்டிதான் ஐடியா.)
அப்புறம் காலேஜ் சேர்ந்ததும், அப்பா வாங்கித் தர பொருள்கள் மகிழ்ச்சியா இருந்தாலும் குதிச்சதில்லை. அதிகம் வெளிக் காண்பிச்சதில்லை. கல்யாணம் ஆகி வந்ததும் அப்பா வாங்கிவர பொருள்கள் அதைவிட விலைமதிப்பானவை. ஆனா எதுவுமே பெரிய அளவுல சந்தோஷம் கூட கொடுக்கறதில்லை. அப்பான்னு இல்லை, அண்ணன், தம்பி, மாமா, சித்தப்பா, ரங்கமணி யார் வாங்கினாலும் பரிசுகள், புடைவை, நகை மற்ற எதுவுமே கொடுக்கிறீங்களா தாங்க்ஸ், இல்லையா, எதுவும் இழப்பில்லைன்னு ஒரு நிலை. பொருள்களை விட அப்பா வரது மட்டுமே மகிழ்ச்சியா மாறிப் போச்சு.
போன மாசம் வந்தபோதும் குருவாயூர்(கேரளப்) புடைவை, தங்கத்துல சின்ன தோடு-ஜிமிக்கி,…. கடைசில “டடன் டடன் டடாண்..” சவுண்டெல்லாம் பலமா கொடுத்து வெளில எடுத்தாரு. பாத்தா, ஒரு பல்லாங்குழி. ரொம்ப சந்தோஷப்படுவேன்னு எதிர்ப்பார்த்தாரு போல. எனக்குக் குழப்பமா இருந்தது.
“இதை எதுக்கு வாங்கிட்டு வந்தீங்க?”
“நான் கூட இது கிடைக்காத சாமான்னோனு கொஞ்சம் பயந்திட்டேன்டா. பாத்தா ஸ்ரீரங்கம் முழுக்கக் கொட்டிக் கிடக்கு.”
“ஆமா, எனக்குத் தெரியாதாக்கும்!. ஆனா நான் கேக்கலையே”
“நீ தானே இதை வேலைக்காரம்மா கிட்ட எல்லாம் கெஞ்சிக் கேட்டுகிட்டிருந்த? நல்லவேளை கிடைச்சது. சோழி தான் இங்க நல்லா இல்லை. இப்போதைக்கு வெச்சுக்க. இராமேசுவரம் போய் குட்டிக் குட்டியாய் ஒரே மாதிரி வெள்ளைவெளேர்னு சோழி கிடைக்கும், வாங்கித் தரேன்…..”
“அப்பா ப்ளீஸ், நான் கேட்டது நான் விளையாடினதை. இது எனக்கு எதுக்கு?”
“அதுக்கும் இதுக்கும் என்ன வித்யாசம். அதே தானே இது? பல்லாங்குழின்னா ஒன்னுதான்னு சொன்னானே கடைல..!”
இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு எனக்குத் தெரியலை.
“அதுல குழி எல்லாம் பெருசா இருக்கும்பா. எவ்ளோ ‘அளவான்’ வந்தாலும் நிறையவே நிறையாது. வழ வழன்னு இருக்கும் மரம். இப்படி ஃபினிஷிங் இல்லாம இருக்காது. கையால காய் எடுக்கும்போது சொரசொரன்னு குத்தி, கை வலிக்காது. இதெல்லாம் சும்மா பேருக்கு செய்றதுப்பா!”
“இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? சரி விடு. அப்ப சொல்லியே செய்யச் சொல்லலாம். எனக்குப் புரியலை. அம்மாகிட்ட தெளிவா சொல்லு. ஆசாரியை செய்யச் சொல்றேன்.”
அப்பாவோட இதான் பிரச்சினை. பதின்ம வயசுலயே திடீர்னு ஒருநாள் நடுத்தெருவுக்கு வந்துட்டாரு. அப்புறம் வாழ்க்கைல உழைப்புலயும் உறவுகள் மேலயும் இருக்கற நம்பிக்கையும் அபிமானமும் உடைமைகள் மேல அவருக்கு என்னிக்கும் வரதில்லை.
“ஆனா என்னோடதுல ரெண்டு ஆணில ஒன்னு லூசா இருக்கும். கொடகொடன்னு ஆடிண்டே இருக்கும். மூணாவது குழிகிட்ட ஒரு நெயில்பாலிஷ் கறை வேற இருக்கும்…”
அப்பா மையமா என்னைப் பார்த்தாரு. திடீர்னு சூழ்நிலை ரொம்ப அமைதியாயிடுத்து. எனக்கே தெரிஞ்சுடுத்து நான் கொஞ்சம் ஓவரா ஒளற ஆரம்பிச்சுட்டேன்னு.
“எனக்கு என்னோடதுதாம்பா வேணும். எனக்கு அதைப் பாக்கணும்போல இருக்கு….” பேசாம தலையை குனிஞ்சுகிட்டு சோழியைக் கிளறிண்டிருந்தேன். பாவம் அப்பா. பேசாம எழுந்து போயிட்டேன். அது அங்கயே ஒருநாள் முழுக்க சீந்துவாரில்லாம இருந்தது. அடுத்தநாள் தான் எடுத்துவெச்சேன்.
ஊருக்குக் கிளம்பும்போது சிரிச்சுண்டே, “பரவாயில்லை, இந்தப் பல்லாங்குழியை பத்திரமா எடுத்துவை. உன் பேத்தி நாளைக்கு இப்படி கேக்கும்போது கொடுக்கலாம். சொன்னமாதிரி சோழி மட்டும் வேற வாங்கித் தரேன்.”
‘ஏன் இப்படி மாத்தி மாத்தி வீட்ல சாமானை அடைக்கிறீங்க”ன்னு ரங்கமணி கமெண்ட் விடறதைவிட பெருசா எதுவும் பிரயோசனமில்லை. அல்லது என் பழைய பல்லாங்குழியை நினைவுப் படுத்தி இன்னும் எங்கிட்டயும் இது திட்டுதான் வாங்கப் போகுதுன்னு முதல்ல நினைச்சேன்.
ஆனா இப்பல்லாம் எத்தனையோ வேலைகளுக்கு நடுவுல, மன அழுத்தங்களுக்கு நடுவுல, சோர்வுல, சந்தோஷத்துல, பாட்டு கேட்கிறப்போ, தனிமைல, பேய்மழை தர பயத்துல இப்படி எந்த சூழ்நிலைலயும் அப்படியே போட்டுட்டு இதோட அஞ்சு நிமிஷம் உட்கார்ந்தாலே மனசு இன்னும் லேசா ஆயிடுது. ஆசுவாசமா இருக்கு. இதை அப்பாகிட்ட சொல்வேனான்னு தெரியலை. காசி, முத்து, நாலு காய் எல்லாமே ஆடிப் பார்த்துட்டேன்.
-0-
சின்ன வயசுல யாரோடயாவது சண்டை போட்டு கோபம் வந்தா, அப்பா ஆபிசுலேருந்து வந்து சம்பந்தப்பட்டவங்களுக்கு சாத்து கொடுக்கறவரைக்கும் மாவு அரைக்கிற கல் இயந்திரம் ஒன்னு கூடத்துல இருக்கும், அதுமேல ஏறி உம்ம்னு உக்காந்திருப்பேன். சும்மா கோபமா இருக்கேன்னு உலகத்துக்கு(வீட்டுக்குத் தான்) சொல்றதுல இது ஒரு பாணி. மாமியாருக்கு ஆகாதுன்னு பாட்டி சொல்ல, அம்மா வந்து தூக்கப் பாப்பாங்க. இயந்திரத்தோட கைப்பிடி ஒரு மரக்குச்சி மாதிரி இருக்கும். அதை இறுக்க பிடிச்சுகிட்டா நம்பளைத் தூக்க முடியாது. நல்லா திட்டிட்டு போயிடுவாங்க.
அப்ப தம்பி தான் கொஞ்ச நேரம் பார்த்துட்டு, பல்லாங்குழியை தூக்கிகிட்டு வருவான். சின்னக் கையால முதல்ல பல்லாங்குழி; அப்புறம் புளியங்கொட்டை; அப்புறம் சப்பைக் குழிகளுக்குப் போடறதுக்குன்னு கதவு நிலைப்படில சில்லாக்கு ஒடிசல் எல்லாம் வெச்சிருப்பேன்; அதெல்லாம் எடுத்து வைப்பான். நடு(காசிக் குழி) தவிர்த்து எல்லாக் குழிலயும் 12 காய் போடுவான்.
இதெல்லாம் கவனிக்காத மாதிரி ஆனா அடிக்கண்ணால பாத்துகிட்டிருப்பேன். “விளையாடலாமா?” க்கு இன்னும் வேகமா வேற பக்கம் மூஞ்சியைத் திருப்பிப்பேன். “நான் முதல்ல விளையாடறேன், நீயே ரெண்டாவதா விளையாடிக்கோ”ன்னு சொல்லி பெருந்தன்மையா ஆட ஆரம்பிப்பான். முதல்ல ஆடறவங்க மூணாவது குழியைப் பிரிச்சு ஆடினா அவங்களுக்கு ஒரு காயும் ஒரு அளவானும் தான் கிடைக்கும். அதைத் தொடர்ந்து இரண்டாவதைப் பிரிச்சு ஆடறவங்களுக்கு இரண்டு அளவான் கிடைக்கும். அதனால் இரண்டாவதா ஆடறதை நான் கோபமா இருக்கறதால எனக்கு விட்டுத் தரானாம். போனாப் போவுதுன்னு[:)] நானும் பிடிக்காத மாதிரி விளையாட ஆரம்பிப்பேன். அப்புறம் ஒரு நேரத்துல விளையாட்டு ஜோர்ல என்னை அறியாமலே இயந்திரத்துலேருந்து கீழ இறங்கிடுவேன். 🙂
எல்லா நேரத்துக்கும் தம்பி வரமுடியுமா? அவனும் வரமுடியாத சமயங்களும் உண்டு. அப்பல்லாம் ‘சீதையாட்டம்’ அப்படீன்னு ஒன்னு. வரிசையாக 7, 6, 5….,1 ன்னு குழிகள்ல ஒவ்வொன்னா குறைச்சுப் போட்டுண்டே வரணும். பிரிச்சு விளையாடிண்டே இருந்தா நிக்காம ஓடும். திடீர்னு எப்படிப் போட்டோமோ அதே வரிசையில காய்கள் குழிகள்ல திரும்ப 7, 6, 5, ….,1 ன்னு வந்து ஆட்டம் நின்னுடும். இதை ஒருத்தர் மட்டுமே தனியா விளையாடணும். கூடத்துல இருக்கற மாடிப்படியோட கீழ்ப் படில குறுக்கே காலை Vஐ கவுத்துப் போட்ட மாதிரி மடக்கி உட்கார்ந்து (இப்ப அந்தப் படி எல்லாம் காணாது.) விளையாடிண்டிருந்தா, மாடிக்கு ஏறரவங்களும் இறங்கறவங்களும் வழியைவிடச் சொல்லி சத்தம் போடுவாங்க. நாம தான் கோபமா இருக்கமே, அதனால அதை எல்லாம் கேக்கணும்னு இல்லை. போர், காதல் மட்டுமில்லை, கோபத்திலயும் எதுவும் தப்பில்லை.
முதல்ல எல்லாம் மாடியோட மேல்ப் படில தான் உட்கார்ந்திருப்பேன், அப்பத்தான் ரொம்பக் கோபம் மாதிரி ஒரு எஃபக்ட் கிடைக்கும்னு. அண்ணனும் தம்பியும் கண்டுக்காம அதோட கைப்பிடிக் கட்டைல சறுக்குமரம் மாதிரி சறுக்கிப் போயிடுவாங்க. ஆனா ஒரு தடவை ஏறும்போது அவசரத்துக்கு நான் எழுந்திருக்கலைன்னு அண்ணன் கிச்சுகிச்சு மூட்டறேன்னு செஞ்சு, தடதடன்னு படில ரெண்டுபேரும் உருண்டு விழுந்து பல்லாங்குழியும் புளியங்கொட்டையும் சிதறிடுச்சு. கடைசில வீட்டுல எல்லாருக்கும் என்னோட கோபம் தணிக்கும் நடவடிக்கைல எனக்குக் கைகால் சரி செய்யறது, பல்லாங்குழிக்கு ஆணி போடறது, சிதறின கொட்டை பொறுக்கற வேலை எல்லாம் வேற சேர்ந்திடுச்சு. சரி போனாப் போகட்டும்னு கீழ்ப்படிதான் அப்புறம். அழுத்தமா ஒக்காந்து, விடாம விளையாடுவேன். திட்டிகிட்டே தாண்டிக் குதிச்சுப் போவாங்க. பாட்டி வந்து பாத்தா, “ஐயோ, ஆகவே ஆகாது, உனக்கென்னா தலையெழுத்தா, இதை மட்டும் விளையாடாதே!” ன்னு பாதிலயே கலைச்சுப் போட்டுடுவா. முழுசா அதிகம் விளையாடாததால இப்ப எப்படி விளையாடறதுன்னு மறந்திடுச்சு. :((
ராமன் கழட்டிவிட்டப்பறம் சீதை காட்டுல தனியா இருக்கும்போது எப்பவும் இந்த விளையாட்டு தான் விளையாடிண்டிருப்பாளாம். யாருக்காவது இது எப்படி விளையாடணும்னு தெரியுமா?
திங்கள், ஓகஸ்ட் 13, 2007 at 4:27 பிப
Excellent. Your anna’s humour is very fine. Good writing.
திங்கள், ஓகஸ்ட் 13, 2007 at 4:29 பிப
எனக்குத்தெரியும். நான் நிறய விளையாடியிருக்கேன். நேத்துத்தான் நினைச்சேன் அம்மா இங்க வரும்போது கொண்டு வரச்சொல்லணும்னு. (what a coincidence!)
1. சீதை விளையாட்டு நிக்கவே நிக்காம ஓடும். ஒரே ஆள் விளையாடறது.
2. குழிக்குப் 12முத்துப் போட்டு விளையாடறதுதான் பொதுவா விளையாடறது. இதைப் “பாண்டி”-ன்னும் சிலர் சொல்லுவாங்க.
3. குழிக்கு ஆறு முத்துப் போட்டும் விளையாடலாம்.
4. “தக்கம்”னு என்னமோ வேற ஞாபகத்துல வருது.
தலையை உலுக்கி மறந்துமோன nomenclatureஇ வெளில் கொண்டுவந்துட்டு எழுதறேன்.
எங்க பக்கத்து பன்னாங்குழி (பதிநான்கு குழிகள் இருப்பதால் அந்தப் பெயர்) செவ்வகமாய் இருக்கும். மூடி வைக்க மாட்டோம். ஒரே pieceஆக இருக்கும். நடுவில் இருக்கும் இரண்டு பெரிய குழிகள் முத்துப் போட்டுவைக்கும் சேமிப்பறையாக இருக்கும். இந்தக் குழிகளுக்கு விளையாட்டில் பங்கு இல்லை என்பதால் பெயரிலும் (பன்னாங்கு) பங்கு இல்லை; மற்றபடி மொத்தம் பதினாறு குழிகள்.
நன்றாகத்தேர்ந்தெடுத்த புளிய விதைகள்தான் உபயோகிப்பது முத்தாக. புளி harvest முடிந்து தோடெடுத்து கொட்டைதட்டின ஜோரில் சூடுபிடிக்கும் இந்த விளையாட்டு.
சோழி வைச்சு விளையாடறது தாயம் இல்லையா?
திங்கள், ஓகஸ்ட் 13, 2007 at 4:38 பிப
http://nabataea.net/games3.html
http://en.wikipedia.org/wiki/Mancala
அந்த ஒத்த முத்து போட்டிருக்கீங்களே அந்தக் குழிகளோட பெயரை ஞாபகப் படுத்திவிட்டீங்கன்னா கொஞ்சம் புண்ணியமாப் போகும்.
திங்கள், ஓகஸ்ட் 13, 2007 at 5:15 பிப
Hi,
Sorry, I don’t have tamil fonts downloaded. Yours is a very beautiful site. I love coming here and even my mom loves it now. Your sense of humour is very much appreciated. Neengall veettin chella pillai pola! Ungalladhu indha post, ennudaiya appa, palanghuzhi, ellavattraiyum ninaivootriyadhu. Keep posting….
திங்கள், ஓகஸ்ட் 13, 2007 at 5:19 பிப
1. சீத்தா விளையாட்டு.
preparation:
காசிக்குழிக்கு (அந்த ஒத்த முத்துக் குழி) வலது பக்கக் குழி (உங்கள் படத்துப் படி) அல்லது,
முதல் குழியில் (left most one), (left most one suits our style board) ஆறு முத்து. அடுத்த வலது பக்கக் குழியில் ஐந்து முத்து. அடுத்து நான்கு. அடுத்து மூணு முத்து, அடுத்து இரண்டு, அடுத்து ஒன்று.ஆறு குழிகளில் முத்து இருக்கும், ஏழாவது குழி சும்மா இருக்கும். (எங்கள் board-l இது காசிக் குழி. இரண்டு பக்கத்திற்கும் பொதுவாக மத்தியில் ஆனால் வலது பக்கக் கடைசிக் குழிகளுக்கு மத்தியில் ஒன்றும், இடது பக்கக் கடைசி குழிகளுக்கு மத்தியில் ஒன்றுமாக இருக்கும்).
அதே போல் அடுத்த பக்கக் குழிகளில், ஆனால் ஏழில் ஆரம்பித்து ஒன்றில் முடிக்கவும். இந்தமுறை எந்தக் குழியும் சும்மா இருக்காது.
விளயாடும் முறை.
உங்கள் பக்கத்து குழிகளில் ஆறு முத்துள்ள குழியில் ஆரம்பித்து counter clockwise ஒரொரு முத்தாக போட்டுக்கொண்டே வந்தால், emptyக் குசியில் ஒருமுத்துப் போட்டு அடுத்துள்ள ஏழு முத்தை எடுக்க வேண்டும். continue counter clockwise. that is it. that is the game.
இதுதான் எனக்குத்தெரிந்தது. ஏதேனும் தவறிருக்கலாம். விளையாடி 25 வருடங்களுக்கு மேலாகிறது.
2. பாண்டி.
பாண்டி உங்களுக்குத்தெரியுமென்று நினைக்கிறேன். அதோடு அதில் கொஞ்சம் அதிகமாக எழுதவேண்டும் (rules and regulations are more and might have regional variations). எனக்கு நிறய moveலாம் ஞாபகம் வைச்சு விளையாடிப் பழக்கம். 🙂
திங்கள், ஓகஸ்ட் 13, 2007 at 5:30 பிப
http://www.tradgames.org.uk/games/Mancala.htm
திங்கள், ஓகஸ்ட் 13, 2007 at 6:00 பிப
நான் கூட விளையாடிருக்கேன். இதுவும் சதுரங்கம் மாதிரி ரொம்ப யோசித்து புத்திசாலித்தனமா விளையாட வேண்டியது. பிரேமலதா சொன்னா மாதிரி நாங்க 6 புளியங்கொட்டையை ஒவ்வொரு குழியில் போட்டு விளையாடுவோம். ஆரம்பிக்கும் நபர் ஒரு குழியிலிருந்து எடுத்து வரிசையாக ஒவ்வொரு குழியிலும் ஒவ்வொன்றாக போட வேண்டும். காலியான குழிக்கு பிறகு உள்ள அத்தனை முத்துகளையும் எடுத்துக் கொள்ளலாம். யார் பக்கத்தில் முத்தே இல்லையோ அவர்கள் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும். ரொம்ப சுவாரஸ்யமான விளையாட்டு இப்படி திடீரென்று உங்கள் எழுத்தால் ஆசையை கிளப்பிவிட்டுட்டீங்களே..
திங்கள், ஓகஸ்ட் 13, 2007 at 6:54 பிப
hey so cherubic. so nice and same pinch for the first paragraph.. 🙂
i played only பாண்டி..சீத்தாட்டம் theriyadhu.. 🙂
super.. nice post
திங்கள், ஓகஸ்ட் 13, 2007 at 7:37 பிப
பிரேமலதா சொல்ற தக்கம் – நாங்க தக்கைன்னுவோம் அது ஒரு ரவுண்ட் முடிஞ்சு அடுத்த ரவுண்ட் விளையாட ஆரம்பிக்கும் போது நாம போன ரவுண்டுல தேத்தின காய் நம்ம பக்கத்து குழி எல்லாத்துக்கும் போடற அளவுக்கு இல்லைன்னா, மிஞ்சற குழிகளை ஆட்டத்துலேர்ந்து நீக்கிடணும். அதை குறிக்கறதுக்காக ஒரு துரும்பை போட்டு வைப்பாங்க அந்த குழிகளில். சின்ன வயசு ஞாபகங்களை கிளறிட்டீங்க ஜெயஸ்ரீ… ஹ்ம்ம்…
திங்கள், ஓகஸ்ட் 13, 2007 at 10:01 பிப
hello jeyashree… ippothu thaan ungalai padikkirane..interesting really.. antha jan 29 2007 padhivil ” thosai ” pattri yaarudia comments athu ? ( ippo thaan athai padithane )… avasiyam sollavum… keep posting ..love and long live..
திங்கள், ஓகஸ்ட் 13, 2007 at 11:18 பிப
இதுவே இப்ப கொஞ்சம் மாரி மெலன்காலேன்னு இங்க வந்திருக்கு. அதில ட்ராவல் சைச்கூட உண்டு. கூடவே பளிங்காட்டம் கல்லும். குழந்தைகளுக்கு விளையாடப் பிடிக்கும். பல்லாங்குழியை விட நீங்க எழுதின அந்த கலாட்டாவும் சிரிப்பும் சின்ன வயசு காலத்தை மலரும் நினவாக்கியது. போன தடவை ஸ்ரீரங்கம் போன போது மெலன்காலேன்னு சொல்லி வருணுக்காக வாங்கி வந்தது சோழியோட சேர்த்து அப்படியே இருக்கு.
செவ்வாய், ஓகஸ்ட் 14, 2007 at 12:49 முப
ஜெயஸ்ரீ, (See, I get my ஸ்ரீ. Thanks.)
////“ஐயோ, ஆகவே ஆகாது, உனக்கென்னா தலையெழுத்தா, இதை மட்டும் விளையாடாதே!” ன்னு பாதிலயே கலைச்சுப் போட்டுடுவா.////
உங்க பாட்டி சொன்னதையே நானும் சொல்றேன், “உங்களுக்கு என்ன தலையெழுத்தா?” 😦
செவ்வாய், ஓகஸ்ட் 14, 2007 at 1:03 முப
ஜெயஸ்ரீ, If you dont mind my going too personal,
உங்கள் சமீபத்துப் பதிவுகளில் எல்லாம் வெளியே சொல்லத் தெரியாத ஒரு சோகம் அல்லது விரக்தி இருக்கிற மாதிரி எனக்கு ஒரு எண்ணம் அல்லது பிரமை. ஆனால் உங்கள் நண்பர்கள் எல்லோரும் எழுதும்போது உங்களை உற்சாகமானவர் என்று சொல்கிறார்கள். அதனால் நான் தவறாகவும் இருக்கலாம். இருக்கவேண்டும் என்று தான் பிரார்த்திக்கறேன். எது உண்மை?
செவ்வாய், ஓகஸ்ட் 14, 2007 at 1:12 முப
To defend my previous comments, எங்க பாட்டி சொல்றதையும் நான் சொல்றேன். சமையல் செய்யறவங்க அழுத்தமான அல்லது அழுகிற மனநிலைல சமைச்சா, அது சாப்பிடறவங்களையும் பாதிக்குமாம். சமையல் குறிப்பு எழுதறவங்களுக்கும் அதே தான். 🙂
இந்த பல்லாங்குழி மாதிரி indoor game எல்லாம் உண்மையாகவே கலைத்துப் போட்டுவிட்டு, வெளியே வாருங்களேன். ஆடி மாதம். திறந்த வானத்தில் பட்டம் விடுங்கள். கூட்டத்தில் வாய்விட்டுச் சிரியுங்கள். உலகம் நம் கற்பனைக்கும் மிஞ்சி ரொம்பப் பெருசு மேடம்.
(ஒவ்வொரு தடவையும் கமெண்டுக்கு என் பெயரும் மெயில் ஐடி அடிப்பதும் கடியாக இருக்கிறதே. அதற்கு எதுவும் செய்யமுடியாதா?
செவ்வாய், ஓகஸ்ட் 14, 2007 at 8:24 முப
பிரேமலதா,
///1. சீத்தா விளையாட்டு.////
உங்களுக்கு எவ்வளவு நன்றி சொல்றது அந்த சீதையாட்டத்துக்கு? ஒரு நாலைஞ்சு நாளா தவிச்சுகிட்டிருந்தேன், ஆடத் தெரியாம. இப்ப வந்துடுச்சு. நான் செஞ்ச தப்பு ஒரு பக்கம் ஒரு குழியை காலியா விடாம அதுலயும் 7 காய் போட்டது தான். மத்தபடி anticlockwise எல்லாம் நினைவு இருந்தது. நன்றி.
உங்க சுட்டிகளுக்கும் நன்றி. Mancala ஹாங்காங்ல வாங்கினது, பொண்ணு வெச்சிருக்கா. பத்மா சொல்ற “மெலன்காலே” என்னன்னு தெரியலை. பொண்ணுக்குத் தெரிஞ்சிருக்கலாம்.
12 காய் போட்டு ஆடறதை “காசி’ ன்னு தான் சொல்வோம். அந்த ஒத்தை முத்து போட்ட குழிக்கும் காசிக் குழின்னு தான் பேர். ஜெஸிலா(நன்றி ஜெஸிலா) சொல்லியிருக்கற மாதிரி காலியா இருக்கற குழிக்கு அடுத்த குழி, அதுக்கு எதிர்ல இருக்கற குழி இரண்டுலேருந்தும் காயை ஆடறவங்க எடுத்துக்கலாம். அங்க காய் 1, 2 இல்லாம நிறைய இருந்தா “அளவான்”ன்னு சொல்வோம். காலி குழிக்கு அடுத்த குழி காசிக் குழியா இருந்தா ‘காசி தட்டறது”ன்னு பேர். ஒரே காசியையே ரெண்டு பேரும் கூட தட்டற மாதிரி வந்துடும். அப்ப கடைசில அந்தக் காயை ரெண்டு பேரும் பிரிச்சு எடுத்துக்கணும். தட்டாத காசி இருந்தா, அந்தக் காய்கள் அடுத்த ஆட்டத்துக்கும் தொடரும்….
நீங்க சொல்ற மாதிரி சதுரமாவும் பல்லாங்குழி இருக்கும். அது நான் பார்த்திருக்கேன். ஆனா எங்க வீட்டுது ஆர்டர் கொடுத்து செஞ்சது. இப்ப அப்பா வாங்கி வந்ததும் கடைல வாங்கினதால குவாலிட்டி இல்லை, ஆனாலும் இரண்டா மடக்கி மூட முடியும். மீன் ஷேப்ல இருக்கு.
நீங்க சொல்ற தக்கம், லஷ்மி சொல்ற தக்கை ரெண்டு வார்த்தையுமே எனக்கு புதுசா இருக்கு. ‘சப்பை’ன்னு தான் சொல்வோம். அதுக்குப் போடத் தான் விதவிதமா கலக்ஷன் இருக்கும். உடைஞ்ச சில்லாக்கு உபயோகிச்சதா பதிவுலயும் சொல்லியிருக்கேன்.
///நன்றாகத்தேர்ந்தெடுத்த புளிய விதைகள்தான் உபயோகிப்பது முத்தாக. புளி harvest முடிந்து தோடெடுத்து கொட்டைதட்டின ஜோரில் சூடுபிடிக்கும் இந்த விளையாட்டு.////
ஆமாம் புளியங்கொட்டைன்னு தான் போன்லயும் சொன்னேன். பதிவுலயும் அப்படித் தான் சொல்லியிருக்கேன். வசதியானதும் அதுதான். என்கிட்ட இருந்த புளியங்கொட்டை கலக்ஷன் வீதிலயே யார்கிட்டயும் இல்லை. அப்பா தெரியாம கடைக்காரரைக் கேட்டு சோழி வாங்கி வந்திருக்காங்க.
///சோழி வைச்சு விளையாடறது தாயம் இல்லையா?////
ஐயோ சொல்லாதீங்க. பல்லாங்குழியாவது சின்னவங்க தான் விளையாடுவோம். தாயக்கட்டை மானாவாரியா பெரியவங்க சின்னவங்க எல்லாரும் இன்னமும் விளையாடுவோம். ஏரோப்ளேன் கட்டம் 4 பக்கம் காணாதுன்னு 8, 10 பக்க வடிவத்துல எல்லாம் வரைஞ்சு விளையாடுவோம். 5,6 மணி நேரம் ஆனாக் கூட முடியாது. ஒரு காய் ஒரு தடவை சுத்திவரதுக்குள்ள 10 தடவை வெட்டுப் படும். விளையாட்டு முடிஞ்சுடக் கூடாதுங்கறதுல ரொம்ப கருத்தா இருப்போம். சமயத்துல பாதில நிறுத்தி அதை படமா வரைஞ்சு வெச்சு மறுநாளும் தொடர்ந்திருக்கோம். இடையிடையே ஒருத்தரை ஒருத்தர் டீஸ் பண்ண பாட்டெல்லாம் வெச்சிருக்கோம். கடைசியா தோத்த ஆள் ஒழிஞ்சாங்க. இந்தத் தடவையும் சித்தப்பா தாயம் கிழின்னு சொல்லி, மாமா வரையவே ஆரம்பிச்சிட்டாரு. ஆனா நேர நெருக்கடில விளையாட முடியலை. :((
செவ்வாய், ஓகஸ்ட் 14, 2007 at 8:52 முப
ramya, எங்கம்மா முதுகுத் தோலை உரிப்பாங்க, திட்டுவாங்கன்னெல்லாம் சொல்லியிருக்கேனே. அதையெல்லாம் படிச்சுமா என்னைப் பாத்தா உங்களுக்கு செல்லப் பிள்ளைன்னு தோணுது? ஆனா, ஆமாம், எங்கப்பா என்னை மட்டும் இல்லை, என் அண்ணன் தம்பியைக் கூட இதுவரை ஒருதடவை கூட கடுமையா பேசினதா நினைவே வரலை. நிச்சயமா இல்லை. ஆச்சரியம். வெளி உலகத்துக்கு ரொம்பக் கடுமையானவரா இருப்பாரு. அது செல்லமா, எங்கப்பாவோட கோளாறான்னு தெரியலை.
Adiya நன்றி. அது பேர் பாண்டின்னே இப்ப நீங்களெல்லாம் சொல்லித் தான் தெரியும். காசியாட்டம்னே சொல்வோம்.
லஷ்மி, amutha நன்றி.
amutha, தோசை பதிவுல அது யாரோட கமெண்ட்னு நீங்கதான் சொல்லணும். எனக்கு மறந்திடுச்சு. 🙂
செவ்வாய், ஓகஸ்ட் 14, 2007 at 8:54 முப
///Good writing.///
ப்ரசன்னா, ஐயொ இதை எப்படி தவறவிட்டேன்? எனக்கு நெத்தில நிஜமாவே பொட்டு வெக்கற இடத்துல தூக்கமா வருது. :)) படிக்கற யாராவது நாம நண்பர்கள்னு நினைச்சுடப் போறாங்க. 🙂
செவ்வாய், ஓகஸ்ட் 14, 2007 at 9:40 முப
vijayram,
//உங்க பாட்டி சொன்னதையே நானும் சொல்றேன், “உங்களுக்கு என்ன தலையெழுத்தா?”//
: )
//To defend my previous comments, எங்க பாட்டி சொல்றதையும் நான் சொல்றேன். சமையல் செய்யறவங்க அழுத்தமான அல்லது அழுகிற மனநிலைல சமைச்சா, அது சாப்பிடறவங்களையும் பாதிக்குமாம். சமையல் குறிப்பு எழுதறவங்களுக்கும் அதே தான்.//
உங்க கருத்தைச் சொல்ல இவ்ளோ முன்னேற்பாடு, பின்னேற்பாடுகள் தேவை இல்லை. Feel free. உங்க பாட்டி கருத்தை நான் 101% ஒத்துக்கறேன். நிச்சயம் என் வீட்ல சமைக்கும்போது அப்படி இருக்கமாட்டேன்.
//ஆடி மாதம். திறந்த வானத்தில் பட்டம் விடுங்கள். கூட்டத்தில் வாய்விட்டுச் சிரியுங்கள். உலகம் நம் கற்பனைக்கும் மிஞ்சி ரொம்பப் பெருசு மேடம்.///
ஆடி மாசம் தான். ஆனா வானம் எங்க திறந்திருக்கு? எப்பவும் இங்க மழையா இல்ல இருக்கு? இப்ப என்ன, உங்களுக்கு நான் பட்டம் தானே விடணும்? இருங்க பழைய ஆல்பத்திலேருந்து எடுத்து விடறேன்.
“என்னைப் பாடச் சொல்லாதே
நான் கண்டபடி பாடிப்புடுவேன்”
பாட்டு தெரியுமா? அது நான் தான்.
இங்க இருக்கு.
செவ்வாய், ஓகஸ்ட் 14, 2007 at 9:57 முப
//(ஒவ்வொரு தடவையும் கமெண்டுக்கு என் பெயரும் மெயில் ஐடி அடிப்பதும் கடியாக இருக்கிறதே. அதற்கு எதுவும் செய்யமுடியாதா?//
vijayram, உங்களுக்கு blogger account இருந்தா இது இன்னும் சுலபமா இருக்கும். wordpressல மெயில் ஐடி கொடுத்தே ஆகணும். தவிர்க்க முடியாது. ஆனா அது உண்மையானதா இருக்கத் தேவை இல்லை. சும்மா எதையாவது தட்டலாம்.
தமிழ் நல்லா அடிக்கறீங்களே. வலைப்பதிவு எதுவும் வெச்சிருக்கீங்களா?
செவ்வாய், ஓகஸ்ட் 14, 2007 at 10:45 முப
பல்லாங்குழியின் வழுவழுப்பு போலவே சுகமான எழுத்தும் நடையும். நமக்கு ஆண்டிக் பொருட்களின் மதிப்பு அவ்வளவாகத் தெரிவது இல்லை. இங்கு இருப்பது போல் தனியாக டென்னோ அல்லது வீட்டிற்குக் கீழே தட்டு முட்டுச் சாமான்களுக்கான அறையோ நமது மாடர்ன் வீடுகளில் இல்லாமல் போவதும் இதற்குக் காரணம், இங்கு பல வீடுகளில் சிறு வயதில் விளையாடிய அனைத்து பொம்மைகளையும் அப்படியே பாதுகாத்து வைத்து விடுகிறார்கள். விற்பதோ கொடுப்பதோ இல்லை. பழைய நினைவுகளைத் தூண்டியதற்கு நன்றி. நடு இரவில் கதவைத் தட்டியவுடன் அடித்துப் புரண்டு எழுந்திருந்து அப்பா கொண்டு வரும் அல்வாவையோ, சில்லுக் கருப்பட்டியையோ, மாம்பழத்தையோ, பால்கோவையோ உடனே நேரம் காலம் இல்லாமல் உள்ளே தள்ளிய காலங்கள் நினைவுக்கு வந்தன. அதென்னவோ அவர் ஊருக்குப் போனால் திரும்பி வரும் சமயம் எப்பொழுதும் நடு இரவோ அதிகாலையாகவோவாவே இருந்தன. இப்பொழுதெல்லாம் யாரும் யாருக்காகவும் காத்திருப்பதும் இல்லை கொண்டு வருவதும் இல்லை அவை ருசிப்பதும் இல்லை. நுட்பமான உணர்வுகள் எல்லாம் மாறிக் கொண்டே வருகின்றன
அன்புடன்
ச.திருமலை
செவ்வாய், ஓகஸ்ட் 14, 2007 at 3:40 பிப
ஹைய்யா………. பல்லாங்குழியா இன்னிக்கு.
நானும் இப்படிப் பைத்தியமா ஒரு காலத்துலே இருந்தவதான்.
என்னோட ‘விளையாட்டை’ எல்லாம் என் பொண்ணுக்கும் சொல்லிக்
கொடுக்கணுமுன்னு ‘அடுத்த தடவை ஊருக்குப் போறச்சே ஒரு பல்லாங்குழி
வாங்கிவரணும்’னு சொன்னதும் கோபால் ஒரு சாமியாட்டம் ஆடுனார்:-)
“ஏர்லைன்ஸ்காரன் கொடுக்கற 20 கிலோவிலே 4 கிலோ பல்லாங்குழிக்கே போயிரும்.
நீ உன்னோட 20லே கொண்டு வந்துக்கோ.”
இதுக்கெல்லாம் அசர முடியுமா? ( சம்பவம் நடந்தது 17 வருசம் முந்தி)
மதுரையில் ஒரு பாத்திரக்கடையிலே போய் எவர்சில்வர் பல்லாங்குழி ஒண்ணு வாங்கினேன்.
கொஞ்சம் கோபமா இவர் பார்க்கறாருன்னு தோணித்து. கடைக்காரகிட்டே இதை எடை
போட்டுச் சொல்லுங்கன்னேன். 250 கிராம்:-))))))
வழிஞ்ச அசடை கடையிலேயே விட்டுட்டு வந்தார்.
அப்புறம் நம்ம கோமளா (பூனா) மாமி, மெட்ராஸ் பீச்லே ச்சின்னச் சின்ன சோழிகளை
வாங்கித் தந்தார்.
இதோ…….ஜன்னல்கட்டையிலே உக்காந்துருக்கு என் பல்லாங்குழி.
செவ்வாய், ஓகஸ்ட் 14, 2007 at 4:30 பிப
பல்லாங்குழிக்கு இத்தனை ரசிகைகளா? துளசி: பின்னூட்டம் கூட சுவாரஸமா இருக்கு.
ஜெயஸ்ரீ
எல்லா விளையாட்டும் ஸ்கூலுக்கேத்த மாதிரி உள்ள திரிபுன்னு நினைக்கிறேன். ரூல்ஸ் கிடைச்சா ஸ்கேன், அப்புறம் ஒரு பின்னூட்டம். சரியா?
செவ்வாய், ஓகஸ்ட் 14, 2007 at 4:38 பிப
[…] Posted by பிரேமலதா on August 14th, 2007 சின்னவயது ஞாபகங்களைத்தூண்டிவிடுவது…. […]
புதன், ஓகஸ்ட் 15, 2007 at 4:11 முப
Aha.. Inga oru research nadakkudhu..
Oru chinnatha thendral veesudhe…
Good one…
புதன், ஓகஸ்ட் 15, 2007 at 6:32 பிப
dear JM,
my last request was about RANGAN & SRIRANGAM.
thanks for ur post about Pallanguzhi and and the picture closely resembles RANGA.
As vijayram says, oru izhai SOGAM ungal ezhuthil ottikonduvidugirathu(ungalai-ariyamale)?
sundaram
வெள்ளி, ஓகஸ்ட் 17, 2007 at 8:05 முப
///இப்பொழுதெல்லாம் யாரும் யாருக்காகவும் காத்திருப்பதும் இல்லை கொண்டு வருவதும் இல்லை அவை ருசிப்பதும் இல்லை. நுட்பமான உணர்வுகள் எல்லாம் மாறிக் கொண்டே வருகின்றன.///
திருமலை, எனக்கு அப்படி நிச்சயம் இல்லை. புதுசாக் கிடைக்கற பரிசுப் பொருள்கள் மேலதான் ஈர்ப்பு குறைஞ்சிட்டுதுன்னு சொல்லியிருக்கேன். உறவினர்களை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் பிரியும்போதும் மனம் கனத்துப் போயிடுவேன். அவங்களும் அப்படித்தான். என் அண்ணன் போன் செஞ்சு முடிச்சுட்டு அடுத்த அஞ்சாவது நிமிஷமே திரும்பப் பண்ணுவான், “ஏன் பேசும்போது குரல் ஒரு மாதிரி இருந்தது, உடம்பு சரியில்லையா?”ன்னு. இல்லை, தூங்கிகிட்டிருந்தேன், பிசியா இருக்கேன்னு ஏதாவது சொல்வேன். ஆனா வெளில காண்பிச்சுக்காம என்னை மட்டும் கிண்டல் செய்வாங்க. “நீயும் நல்லாத் தான் இருக்க, உன் தம்பியும் நல்லாத் தான் இருக்கான். உனக்கு தினம் போன் செஞ்சே அவன் வாழ்க்கை கழியுது. அப்புறம் ஏன் பாக்கும்போதெல்லாம் ரெண்டுபேரும் கண்ணீர் விட்டு பாசப் பெருக்குல என்னைக் குளிக்க வெக்கறீங்க?”ன்னு வீட்டுக்காரர் எப்பவும் கிண்டல்.
இப்ப ஜெனரேஷனுக்கு நுட்பமான உணர்வுகள் குறைய வேற என்ன காரணம் இருக்க முடியும்? என் பொண்ணுக்கு(உங்க பொண்ணுக்கும் தான்)அண்ணன், தம்பி, அக்கா தங்கை எல்லாம் என்னன்னே தெரியாது. அவளுக்காவது பரவாயில்லை, அவளோட குழந்தைகளுக்கு அத்தை, சித்தப்பா, மாமா, பெரியம்மா எல்லாம்? அப்புறம் எங்கேருந்து என்ன உணர்வுகள் வரும்?
வெள்ளி, ஓகஸ்ட் 17, 2007 at 8:08 முப
துளசி, எவர்சில்வர் பல்லாங்குழி பெஸ்ட். விளையாடுவீங்களா? ஊஞ்சலையே யாருக்கோ(?!) கொடுத்திருக்கீங்க.
பத்மா, ‘டூ’ விடறதுக்கும், ‘சே’ விடறதுக்கும் விரல் காண்பிக்கறதே எனக்கும் என் பொண்ணுக்கும் வேறுபடறது. : )
கதம்பமாலை நன்றி. : )
Senthil Nathan, தென்றலா? புயல் அடிச்சு ஓய்ஞ்சிருக்குங்க. : ( Anyway, Thanks.
Sundaram, request ன்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க. எனக்கு எழுதணும்னு எண்ணம் எதுவும் வரலை. அதுக்கும் ‘அவன்’ தான் நினைக்கணும். பல்லாங்குழிலயும் அவனைப் பார்க்கற நீங்க தான் எழுத சரியான ஆள். எழுதுங்க. நாங்க படிக்கறோம். அப்புறம்,
“SOGAM” ம்ம்… எனக்கே தெரியலை. இதுகுறித்து பலர் தனிமடல் எழுதிட்டாங்க. இனிமே கவனமா எழுதறேன். நன்றி.
வெள்ளி, ஓகஸ்ட் 24, 2007 at 10:23 முப
Jayshree,
visiting back after quite long time, didn’t feel the length of the post untill i scrolled up after reading 🙂
hmmmmmmmmmmm… yegapatta palaya ninaivugal.. arumayana korvai..
திங்கள், ஓகஸ்ட் 27, 2007 at 12:30 பிப
yaathirigan, Thanks.
இந்தப் பிழைதிருத்தறதெல்லாம் கூட எனக்கு பழைய நினைவுகள் தான். அதெல்லாம் நிறுத்தி நானே பெரிய பெரிய பிழை எல்லாம் செய்றவளாயாயிட்டேன். ஆனாலும்…
கோர்வை சரியில்லை, கோவை.
கோர்த்து சரியில்லை, கோத்து. 🙂