தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கப்
நெய் – 1 டீஸ்பூன்
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 3,4
வெங்காயம் – 1 (விரும்பினால்)
பச்சைப் பட்டாணி (விரும்பினால்)
மஞ்சள் துள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை.

தாளிக்க:
எண்ணை –  2 டேபிள்ஸ்பூன்
கடுகு –  1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு –  2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பெருங்காயம்.

thakkaali saadham

செய்முறை:

  • தக்காளிப் பழங்களை சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணை, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய், வெங்காயம், பச்சைப் பட்டாணி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது வதக்கிக் கொள்ளவும்.
  • கடைசியில் தக்காளித் துண்டுகளைச் சேர்த்து நன்கு கிளறி, சுருண்டு வந்ததும் இறக்கவும்.
  • உதிராக வடித்து நெய் கலந்து வைத்துள்ள சாதத்தில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

* தக்காளியை வெந்நீரில் போட்டு, தோலை நீக்கிவிட்டு, கூழ் போல் ஆக்கியும் வதக்கிச் சேர்க்கலாம்.

* வெங்காயத்துடன் அல்லது அதற்கு பதில் கோஸ், கேரட், குடமிளகாய் போன்ற காய்கறித் துருவல்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

* காய்ந்த மிளகாயை மட்டும் தாளித்துவிட்டு, இரண்டு பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழையை (சேர்ந்து அரைபடுவதற்காக ஒரு தக்காளித் துண்டுடன்) அரைத்துச் சேர்த்து வதக்கலாம்.  இந்த முறையில் சாதத்தின் நிறம் கொஞ்சம் பச்சை கலப்பதால் அடர் சிவப்பாக இல்லாமல் போனாலும் மிகவும் சுவையாகவும் மணம் கூடுதலாகவும் இருக்கும். அநேகமாக இந்த முறையிலேயே செய்கிறேன்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

பொரித்த அப்பளம், வடாம், வற்றல், சாதாக் கூட்டு, தயிர்ப் பச்சடி வகைகள்…