தேவையான பொருள்கள்:

புளி – சிறிய எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு.
 

பொடிக்க:
காய்ந்த மிளகாய் – 3 
துவரம் பருப்பு  – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
பெருங்காயம்.
 

தாளிக்க:
எண்ணை – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
வெந்தயம் – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை.
 

venthaya kuzambu

செய்முறை:

  • ஒரு டீஸ்பூன் எண்ணையில் காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, வெந்தயம் இவற்றைச் சிவக்க வறுத்து, பெருங்காயத்தையும் சேர்த்து, பொரிந்ததும் ஆறவைத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
  • புளியை நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும்.
  • எண்ணை அதிகம் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், வெந்தயம், உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, காய்கறி ஏதாவது இருந்தால் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
  • புளித் தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்க விடவும்.
  • காய்கறி வெந்ததும், அரைத்து வைத்துள்ள பொடியைக் கலந்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கி மல்லித் தழை தூவி பரிமாறவும்.

* காய்களில் நான் கத்திரிக்காயும் குடமிளகாயும் சேர்த்திருக்கிறேன். வெண்டைக்காயுடன் ஒரு பச்சை மிளகாயும்(அல்லது எந்த நாட்டுக் காயுடனும் ஒரு பச்சை மிளகாய்) அசத்தலாக இருக்கும். முருங்கைக்காய், தக்காளிக் காய், சின்ன வெங்காயம், மெலிதாக நறுக்கிய பெரிய வெங்காயம்-பூண்டு, தக்காளிப் பழம், பஜ்ஜிக்கு உபயோகிக்கும் பெரிய பச்சை மிளகாய், உடைந்த அப்பளம் என்று ஏதை வேண்டுமானாலும் சேர்த்துச் செய்யலாம்.

* நல்லெண்ணை உபயோகித்தால் மணமாக இருக்கும். பொதுவாக இந்தக் குழம்புக்கு தாளிக்கும்போது, எண்ணை அதிகம் விட்டால் சுவையாக இருக்கும்.

* மேலே கூறியபடி தனியாக வறுத்து, பொடிக்க நேரமில்லாதவர்கள், அன்றாடம் உபயோகிக்கும் சாம்பார் பொடியையே ஒரு டீஸ்பூன் உபயோகித்து அவசரத்துக்கு சமாளிக்கலாம்.

* முதல்நாளை விட இரண்டாம் நாள் சுவையாக இருக்கும். கெட்டுப் போகாது.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நல்லெண்ணை கலந்த சாதம் அல்லது நெய், பருப்பு கலந்த சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். தொட்டுக் கொள்ள பருப்புக் கூட்டு, பொரித்த அப்பளம், வடாம் அல்லது ‘வெடுக்’கென்று இருக்கும் நல்ல மலை(மா)வடு.

குழம்பிலிருக்கும் ‘தான்’ மட்டும் போட்டுக் கொண்டு மோர் சாதத்துடன் சாப்பிடலாம். (ஐயோ!)

தவிர இந்தக் குழம்பை, தயிர்சாதம், மோர்க் களி, பொங்கல் வகைகள், அரிசி உப்புமா, கல் தோசை இவைகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

Advertisements