தேவையான பொருள்கள்:

புளி –  எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
சாம்பார்ப் பொடி – 1 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க – எண்ணை, காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயம், சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.
 

உருண்டை செய்ய

அரைக்க:
துவரம் பருப்பு – 2 கப்
கடலைப் பருப்பு – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 2
பச்சை மிளகாய் – 2
தேங்காய் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு.

தாளிக்க – கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை

paruppu urundai kuzambu

செய்முறை:

  • பருப்புகளை தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து பருப்புக்குத் தேவையான அளவு உப்பு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
  • அரைத்து முடிக்கும் நேரம் தேங்காய்த் துருவலும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துவைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணை விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்துவைத்துள்ள விழுதில் கொட்டிக் கலந்துவைக்கவும்.
  • புளியை மிகவும் நீர்க்கக் கரைத்து, புளிக்குத் தேவையான உப்பு, மஞ்சள் தூள், சாம்பார்ப் பொடி சேர்த்து ஒரு உயரமான பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.
  • மீண்டும் வாணலியில் எண்ணைவிட்டு காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயம், சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து புளிக் கரைசலில் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
  • குழம்பை நன்றாகக் கொதிக்கவிடவும். அரைத்த பருப்பு விழுதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பில் ஒவ்வொன்றாகப் போடவும். உருண்டைகளைச் சேர்க்கத் தொடங்கும்போது அடுப்பை கொஞ்சம் பெரிய தீயில் வைத்துக் கொள்ள வேண்டும். இது  முக்கியம்.
  • அரை நிமிடத்திலிருந்து ஒரு நிமிடத்திற்குள் போட்ட உருண்டை மேலே மிதக்கும். ஒரு உருண்டை கொதித்து மேலே வந்ததும் மட்டுமே அடுத்த உருண்டையைப் போடவும். கடகடவென்று ஒன்றின்மேல் ஒன்றாகப் போட்டால் உருண்டைகள் கரைந்துவிடும்.
  • அப்படியே ஒவ்வொரு உருண்டையாகப் போட்டுக் கொண்டு வரும்போது இட நெருக்கடியாக இருந்தால், மேலே வந்த உருண்டைகளை எடுத்து தனியாக வைத்துவிடலாம். கரண்டியால் அதிகம் அழுத்தாமல் நாசுக்காகக் கையாள வேண்டும்.
  • குழம்பில் மேலும் உருண்டைகள் போட, புளித் தண்ணீர் குறைந்துவிட்டால் மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் தண்ணீர் விட்ட பின், மீண்டும் குழம்பு கொதிக்கத் தொடங்கியபின் தான், அடுத்தடுத்த உருண்டைகளைப் போட ஆரம்பிக்க வேண்டும்.
  • மொத்த விழுதையும் உருட்டிப் போட்டபின் எடுத்து வைத்திருக்கும் எல்லா உருண்டைகளையும் போட்டு, தேவைப்பட்டால் நீர் சேர்த்து மேலும் ஒரு கொதிவிட்டு இறக்கி, கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும்.

* விரும்புபவர்கள், பருப்பு விழுதோடு சின்ன வெங்காயம் பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளலாம்.

* இந்த உருண்டைகளை…

— கொழுக்கட்டை மாதிரி ஆவியில் வேகவைத்தும் கொதிக்கிற குழம்பில் போடலாம்.

— வாணலியில் தாளித்தபின், இந்த விழுதைக் கொட்டி கொஞ்சநேரம் கிளறி, பின் உருண்டைகளாக்கியும் போடலாம்.

— பருப்பு விழுதோடு அரிசி மாவு ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கலந்தும் செய்யலாம்.

மேற்சொன்ன மூன்று முறைகளில் உருண்டைகள் உடையாது. ஆனால் கடினத் தன்மையாக இருக்கும்.

— விழுதை, கரகரப்பாக அரைக்காமல் நைசாக அரைத்துவிட்டாலும் உருண்டை கடினத் தன்மையுடன் இருக்கும்.

உருண்டை கடினமாக இருந்தால் குழம்பு உருண்டைக்குள் முழுவதும் இறங்காமல் சுவை குன்றிவிடும்.

* சற்று கரகரப்பாக அரைத்து நல்ல தீயில், கொதிக்கும்போது ஒவ்வொன்றாக நிதானமாகச் சேர்த்து செய்வதே சரியான முறை. இந்த முறையில் உருண்டைகள் தளர்வாகவும்(ஆனால் உடையாமல்), முழுவதும் குழம்பு உள் இறங்கி சுவையாக இருக்கும்.
 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இந்தக் குழம்பு சாதத்துடன் கீரை மசியல், பொரித்த அப்பளம், கேரட், பீட்ரூட் போன்ற சற்றே இனிப்பான பொரியல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன் சாப்பிடலாம். எதுவுமே இல்லாவிட்டாலும் உருண்டைகளை வைத்தே ஒப்பேத்தலாம். 

தயிர்சாதத்திற்கும் பருப்பு உருண்டைகளைத் தொட்டுக் கொள்ளலாம்.

எங்கள் வீட்டில் தனியாக சுடச் சுட உருண்டைகளை முதலில் சாப்பிட்டு விடுவோம். 

Advertisements