“எனக்குப் பானிப் பூரி சாப்பிடணும்போல இருக்கும்மா!” பரிட்சைக்குப் படிக்கும்போது பாதியில் பெண் வலதுகை கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களைச் சேர்த்து வாயில் சாப்பிடுவது போல் வைத்துக் காண்பித்துக் கேட்டபோது  நெகிழ்.. (ஓக்கே ஓக்கே).

அப்போது மணி காலை 11. மதியம் 3 மணிக்கு மேல் தான் இந்தக் கடைகள் எல்லாம் திறக்கும். இதற்கென்று கிளம்பிப் போனால் மேலும் அரை மணி நேரம் விரயம் ஆகும். அன்றைய பொழுதுக்கு வீட்டில் இருந்ததை வைத்து சூடாக இந்த குழிப் பணியாரத்தைச் செய்துகொடுத்து சமாளித்தேன். (பரவாயில்லை, நன்றாகவே இருந்தது!).

யோசித்துப் பார்த்தால், பல காரணங்களால் பானிப் பூரியை வீட்டில் நாமே செய்வதே சரியான வழி என்று தோன்றியது.

“எவ்ளோ நாசூக்கு பேசற. அந்தாளு தண்ணிக்குள்ள கையை விட்டு விட்டு அந்தப் பூரியைத் தர்றாரு, எப்படித்தான் இதெல்லாம் பிடிக்கிறதோ..” என்று முகத்தைத் திருப்பிக் கொள்ளும் கணவர்.

மழைக் காலத்தில் எல்லாம் நினைத்தே பார்க்க முடியாது. காய்ச்சாத தண்ணீரில் அந்த ‘பானி’யை நம்பிச் சாப்பிட முடியாது.

கடைக்காரர் கொடுக்கும் வேகத்துக்கு சாப்பிட முடியாமல் குழந்தை திணறும். (ஜல்தி ஜல்தி நஹி கிலானா அங்கிள்!)

[ஆனால் பானிப் பூரி கடைகளில் எனக்குப் பிடித்த ஒரு விஷயத்தையும் சொல்லிவிட வேண்டும். ஒரு செட் என்பது 6 பூரி. அதை நாம் பாட்டுக்கு சாப்பிட்டுக் கொண்டிருப்போம். எப்போது முடியும் என்று தெரியாமல் திடீரென நீட்டும்போது இல்லை என்று சொல்லக் கூடாது என்பதற்காக அனைத்துக் கடைக்காரகளும் கடைசி பூரியை வைக்கும்போதே இது கடைசி என்று சொல்லிவிடுவார்கள்.:)]

பூரி மற்றும் பானிப் பூரி மசாலாவை கடையில் வாங்கி விட்டேன். மீடா சட்னி எப்பொழுதுமெ எங்களுக்குப் பிடிப்பதில்லை. (அப்படியே உள்ளெ தள்ளும்போது விர்ரென காரம் மட்டும் தலைக்கேற வேண்டும்.) ஆனால் எல்லாவற்றிற்கும் குறிப்புகள் மட்டும் கொடுத்திருக்கிறேன்.

-0-

பூரி

தேவையான பொருள்கள்:

உளுத்த மாவு – 1 1/4 கப்
ரவை – 1 கப்
மைதா – 3/4 கப்
உப்பு, தண்ணீர் – தேவையான அளவு

puris

செய்முறை:

 • உளுத்த மாவு, ரவை, மைதாவை உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
 • சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
 • சற்று கனமாக வட்டமாக இட்டு எண்ணையில் பொரித்து எடுக்கவும்.

* பூரிகள் உப்பி வரவேண்டும். தட்டையாக இருந்தால் செய்ய வராது.

-0-

பானி

தேவையான பொருள்கள்:

புதினா – 1/2 கட்டு
தண்ணீர் – 4 கப்
பச்சை மிளகாய் – 3
புளி – நெல்லிக்காய் அளவு
உப்பு –  தேவையான அளவு
கருப்பு உப்பு – 1 சிட்டிகை
வறுத்த சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
Everest பானி பூரி மசாலா – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்<a

  pudinaeverest pani puri masalapaani

 • புதினாவை இலைகளை ஆய்ந்து, பச்சை மிளகாய், சிறிது தண்ணீர் சேர்த்து மிக நைசாக அரைக்கவும்.
 • 5 கப் தண்ணீர் சேர்த்து டீ வடிகட்டியில் வடிகட்டவும். நைசாக அரைத்திருப்பதால் மிகச் சிறிதளவே சக்கை வரும். ஒட்ட பிழிந்து விடவும்.
 • அத்துடன் புளி நீர்(அல்லது ஆம்சூர் பவுடர் 1 டீஸ்பூன்), உப்பு, கருப்பு உப்பு, வறுத்த சீரகப் பொடி, Everest பானிப் பூரி மசாலா, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து வைக்கவும். பானி தயார்.

நான் இந்த முறையிலேயே செய்தேன்.
 

(அல்லது, Everest மசாலாப் பொடி இல்லை என்றால்..)

புதினா – 1/2 கட்டு
தண்ணீர் – 3 கப்
மிளகு – 2 டீஸ்பூன் (பொடித்தது)
உப்பு – தேவையான அளவு
கருப்பு உப்பு – 1 சிட்டிகை
ஆம்சூர் பொடி –  1 டீஸ்பூன் (அல்லது மாங்காய்த் துண்டு 1 கப்)
இஞ்சி – 1 துண்டு
வறுத்த சீரகப் பொடி – 1 டீஸ்பூன்

 • மேலே சொல்லியிருக்கும் சாமான்களை ஒன்றாகக் கலந்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
 • தேவையான போது எடுத்து வடிகட்டிக் கொள்ளவும்.

-0-

இனிப்புச் சட்னி (விரும்பினால்)

தேவையான பொருள்கள்:  

புளித் தண்ணீர் – 1 கப்
வெல்லப் பொடி – 1 டேபிள்ஸ்பூன்
தனியாப் பொடி – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

மேலே சொல்லியிருக்கும் பொருள்களை மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு அரைத்துக் கொள்ளலாம். இது சும்மா ‘நாம் கே வாஸ்தே’ அவசரத்திற்கு செய்கிற சட்னி.

(அல்லது)

தேவையான பொருள்கள்: 

புளி – எலுமிச்சை அளவு
பேரிச்சம் பழம் – 8
வெல்லப் பொடி – 1/2 கப்
உப்பு — 1/2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகத் தூள் – 1/2 டீஸ்பூன்

கோது, நாரில்லாத புளியை தண்ணீரில் ஊற வைக்கவும்.

20 நிமிடம் ஊறியதும் புளியோடு எல்லாப் பொருள்களையும் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

டீ வடிகட்டியில் கலவையை வடிகட்டிக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியில் வைத்து கொதிக்க விடவும்.

நன்கு கொதித்து பளபளவென்று சேர்ந்தாற்போல் ஆனதும் ஒரு டப்பாவில் எடுத்துவைத்து, ஃப்ரிட்ஜில் வைத்து, தேவையான பொழுது உபயோகிக்கவும். 6 மாதங்கள் வரை கெடாது. ரெகுலராக இவைகளை வீட்டில் செய்பவர்கள் இந்த முறையிலேயே செய்து வைப்பார்கள்.

-0-

உள்ளே வைக்க

 • வேக வைத்து மசித்த உருளைக் கிழங்கு, நன்கு வேகவைத்த கடலைப்பருப்பு, குழைய வேக வைத்த (மஞ்சள்)பட்டாணி, தண்ணீரில் நனைத்துப் பிழிந்த பூந்தி இவைகளில் ஏதாவது ஒன்றை 2 கப் எடுத்துக் கொள்ளவும்.

paani puri fillings

 • தேவையான உப்பு, சீரகப் பொடி கலந்து மேலும் கரண்டியால் நன்கு மசித்துக் கொள்ளவும். (சில கடைகளில் முளை கட்டிய பயிறு கூட வைக்கிறார்கள். உண்மையில் இது கடையின் தரத்தைப் பொருத்து மாறுபடும்.)

ஆக இப்போது தேவைப்படுவதெல்லாம்- பூரி, உள்ளே வைக்க ஏதாவது ஒரு பொருள், பானி, விரும்பினால் இனிப்புச் சட்னி.

பூரியை மேலாக லேசாகத் தட்டி உடைத்து, உள்ளே பூரணத்தை வைத்து, பானியை ஒரு கரண்டியால் எடுத்து உள்ளே விட்டுக் கொடுத்து….(அந்தத் தொன்னை, சும்மா ஒரு கடை ஃபீல் வருவதற்காக ;)] ஆர்வத்துடன் பெண்ணைப் பார்த்தால்…

“ம்ம்.. குச் தோ கமீ ஹை மா!”

paani puri

ஒரு நொடி தடக்’ என்று இருந்தாலும்,, இது வேலைக்காகாது என்று பூரியில் ஸ்டஃப் செய்து நேராக பூரியை கையை உள்ளே விட்டு பானிக்குள் முக்கி எடுத்துக் கொடுத்ததும்…”யெஸ்.. யெஸ்.. யெஸ்..” கை கட்டை விரல் உயர்த்தி, பெண் குஷியில் குதித்தது.

பின்ன அததுக்குன்னு ஒரு முறை இருக்கில்ல.. 🙂

* மழை மற்றும் குளிர் காலத்தில் இதைவிட சிறந்த வழியில் புதினா, சீரகத்தை உணவில் சேர்க்கமுடியுமா என்று தெரியவில்லை. வீட்டில் செய்து சாப்பிட்டால் மிகவும் ஆரோக்யமானது.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

உள்ளே என்ன வைக்க வேண்டும் என்று அவர்கள் என்ன சொல்வது, நாம் என்ன கேட்பது? நான் எல்லாவற்றையுமே தயார் செய்து கொண்டு கலந்து அடித்தேன்.

சாவகாசமாக நானும் பெண்ணும் கீழே உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டே, ‘வேலை’ பார்த்ததில் பூரி பாக்கெட் காலி. அப்பா வந்ததும் பெண் விபரம் சொல்லி, ராத்திரிக்குப் பசிக்கவே இல்லை என்று சாதித்தாள்.

“அப்படி ஒரு பாக்கெட்ல எவ்ளோ பூரிடா இருந்தது?”

“பெரிய பாக்கெட் இருந்தது. ஆனா அம்மா அதை வாங்கலை. சின்னது தான் வாங்கினா, 50 தான் இருந்தது. :(”

அப்பா எங்களைப் பார்த்த பார்வை… (அடப் போய்யா, கொடுத்து வைக்காத, ரசிக்கத் தெரியாதவங்க!)