எச்சரிக்கை: ஒரு பெண்ணுக்கு இவ்வளவு பிரச்சினைகளா என்று உருகுபவர்கள், இளகிய மென்மையான மனதுக் காரர்கள் தவிர்க்கவும்.

தேவையான பொருள்கள்:

பணிவு
பொறுமை
அடக்கம்
நேரந்தவறாமை
சுறுசுறுப்பு
சிரித்த முகம்
 

தாளிக்க – பதிபக்தி, பெரியோரிடம் மரியாதை, மிதமிஞ்சிய தாய்மையுணர்வு, கலாசாரத்திலேயே கருத்தும் கவனமும், இன்ன பிற பாவனைகள்…
 

செய்முறை:

வீடு முழுவதும் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். (அப்படியே ஒருமுறை மொத்தமாக ஃப்ளாட்டை தண்ணீரில் முக்கி எடுப்பது மாதிரி இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்?)

ஜன்னல்கள், கதவுகள், கர்ட்டன் துணிகள், டிவி, டிவிடி வகையறாக்கள், படுக்கை, விரிப்புகள், தலையணை, குளியலறைக் கண்ணாடி முதல் கழிவறை டியோரண்ட், கால் மிதிக்கும் மிதியடி வரை, சமையலறை ஷெஃபுகள், மிக்ஸி, கிரைண்டர் உபகரணங்கள், சிங்க், முதல் அஞ்சறைப் பெட்டிவரை… நேர்ப்படுத்தி துப்புரவாக வைக்கவும்.

மறைக்க வேண்டிய பொருள்களை மறைப்பதும், தூக்கி ஏறக் கட்டியிருந்த பொருள்களை இறக்கிச் சீராட்டுவதும் முக்கியம். (உதாரணமாக முறையே அடுப்பில் வைத்துவிட்டு இணையப் பக்கம் எட்டிப் பார்த்ததில் கருகிய பாத்திரங்கள், பூச்சூட்டலுக்கு வாங்கிய புடைவை)

நாலரை மணிக்கு அலாரம் அடித்தால் படு நிதானமாகத் திரும்பிப் படுத்து, ‘பேசாம மும்பைக்கு மாத்திண்டிருக்கவே வேண்டாம். ஏன் நான் மட்டும் இவ்ளோ சிக்கிரம் எழுந்து…’ என்பது முதல் ‘தேடித் தேடி பேங்க் காரனுக்குக் கொடுத்த எங்கப்பாவைச் சொல்லணும்’ வரையிலான வகை வகையான பத்து நிமிடப் புலம்பலை நினைத்துக் கூடப் பார்க்காமல், அப்படியே அலாரம் சத்தம் கேட்டதும் வில்லிலிருந்து அம்பு புறப்படுவது போலவோ, விடுபட்ட ஸ்பிரிங் போலவோ எழுந்திருக்கவும்.

32 பற்களைத் தேய்க்க 3 நிமிடங்கள் எடுத்துக் கொண்டாலும் முழு உடம்பிற்கும் குளிப்பதை 2 நிமிடங்களில் முடிக்கக் கற்றுக் கொள்ளவும்.

பாலை அடுப்பில் வைத்துவிட்டு காய்வதற்குள், ஃப்ளாட்தான் என்றாலும் இருக்கும் குட்டி வாசலைக் கூட்டித் துடைத்து குறைந்தது ஒரு 8 புள்ளி 8 வரிசை கோலம் போடவும். வழக்கமான ஸ்டார், மாவிலைக் கோல ஜல்லிகளுக்கு விலக்கு.

காஃபி போட்டு, அந்தக் களைப்பைப் போக்க நிதானமாக பால்கனியில் தரிசனம் தந்துகொண்டு உறிஞ்சுவது, ஆறரைக்கு கோவிந்த் கிளம்புவதற்குள் ஆறே காலுக்கே காலில் ஷூவை மாட்டிக் கொண்டு, “வாக்கிங் போறேன், கிளம்பும்போது லைட் ஃபேன் எல்லாம் ஒழுங்கா அணைச்சுட்டுப் போங்க, பை” சொல்லிவிட்டு தெருவில் போகிறவர்களுக்கெல்லாம் ‘ஹாய்’ சொல்லிக்கொண்டு ஒரு மணி நேரம் நகர்வலம் வருவது, நாமும் போஸ்டர் பதிவுக் கலாசாரத்தைத் துவங்கலாமா என்று யோசிப்பது, பார்க்கில் பயிற்சி செய்வோரில் தம்மின் மெலியாரைப் பார்த்து ‘ஹூம்!’ என்று பெருமூச்சு விட்டு ஏங்குவது, பெரியோரைப் பார்த்து “அம்மாடீ, நாம பரவாயில்லை, எந்தக் கடை கோதுமையோ!” என்று இறுமாப்பு கொள்வது அனைத்தையும் நினைத்துக் கூடப் பார்க்க வேண்டாம்.

“ஹய்யய்யோ… என் உசுருக்குள்ள தீயைவெச்சான் அய்யய்யோ.. என் மனசுக்குள்ள நோயைத் தெச்சான் அய்யய்யோ” க்களை இப்பொழுதைக்கு மனதினால் நினைக்காவிட்டாலும் மறந்தும் தன்னிச்சையாய் வாயினால் வழக்கம்போல் 50 டெசிபலில் பாடிவிடாமல் இருக்க வேண்டும். (ஏற்கனவே ஒருமுறை இதற்கான விலையைக் கொடுத்தாகிவிட்டது.) “நான் வாடாஆ மல்லி, நீ போடாஆ அல்லி” என்று பெண் பாடினாலும், உடனே உணர்ச்சிவசப்பட்டு, “அது ‘அல்லி’ இல்லைடா செல்லம், ‘அள்ளி’; எங்க, நாக்கை உள்ள மடிச்சு சொல்லு!” என்று கனகாரியமாய் இப்போது பெண்ணுக்கு தமிழறிவை ஏற்றிக் கொண்டிருக்க வேண்டாம். ஆனாலும் பாடிய வாயும் ஆடிய காலும் அடங்குமா தெரியவில்லை. ரொம்ப அடக்க முடியவில்லை என்றால் எதற்கும் “அதரம் மதுரம்.. வதனம் மதுரம்.. நயனம் மதுரம்…” என்று மதுராஷ்டக வகையறாக்களை  திரும்பத் திரும்ப மனனம் செய்தால் அகிலம் மதுரமாக சாத்தியம் இருக்கிறது. 😉

நடுமுதுகிற்கு மேல் பிடரிக்குக் கிழிருந்து மெலிதாக விர்ரென்று ஒரு வலி ஆரம்பிக்கிறதா? அட நம்ப நண்பர் மைக்ரேனார். ஐயோ வேண்டாம், ரம்பையின் காதலில் அஞ்சலிதேவி புல்லாங்குழலிசை கேட்டுப் பாடுவது போல் “அழைக்காதே.. நினைக்காதே” பாடித் தடுக்கப் பார்க்கவும். சொன்னால் கேட்பானா தெரியவில்லையே. 😦

பொதுவில் வந்து “என்னங்க..” என்று அழைக்கும்போது நம் குரம் நமக்கே கொஞ்சம் கேவலமான toneல் பிசிறுகிற மாதிரி இருக்கலாம். ஆனால் அதைக் கேட்டும் கண்டுகொள்ளாத மாதிரி இருந்துவிட்டு சாவகாசமாக, “என்னையா கூப்ட?’ என்று முழிக்கும் கணவனை முதல் இரண்டு முறை மட்டுமே மன்னிக்கலாம். மூன்றாவது முறையாக அந்தச் சம்பவம் நடந்தால் அது நடிப்பு அல்லது கொழுப்பு. “Why all these..? Feel free.. ” என்று வழக்கம்போல் சொன்னாலும் ஏற்கவேண்டாம்.

கணவரையாவது ஒரு முறைப்பில் சமாளிக்கலாம். ஆனால் பெண் கேட்கப் போகும்,

“ஏன் இப்பல்லாம் கம்ப்யூட்டர் எனக்கே கொடுத்திட்ட? மரத்தடி தமிழ்மணம் எல்லாம் மூடிட்டாங்களா, பாஸ்வேர்ட் மறந்திட்டயா?”
 
“ஏன் இப்பல்லாம் என்னைத் திட்டவே மாட்டேங்கற? நான் சமத்தா இருக்கேனா?”

“ஏன் இப்பல்லாம் சிடில பாட்டே போடமாட்டேங்கற? வீணையை வீணையை எடுத்து வெச்சு வாசிச்சுப் பாக்கற?”

“அப்பாவோட ஏன் சத்தமா பேச மாட்டேங்கற?” அல்லது “அப்பாகிட்ட ஏன் எப்பவும் ரகசியம் பேசிண்டே இருக்க?”

“ஏன் எப்பவும் ஏதாவது வேலை செஞ்சுண்ட்டே இருக்க?”

“ஏன் எல்லாத்தையும் துடைச்சு துடைச்சு வெக்கற?”

“ஏன் அப்பா செய்ற வேலையை எல்லாம் நீயே நீயே செய்யற?”

“ஏன் மத்யானம் என்னோட தூங்க மாட்டேங்கற?”

“அப்பாவை ஏன் சர்கேஸ்டிக்கா கூப்பிடற?” (மரியாதையா கூப்பிட்டா, அது சர்கேஸ்டிக்னு நினைக்கற அளவுக்கு கலாசாரம் சீரழிஞ்சிருக்கா வீட்டுல?))

“ஏம்மா தெனக்கும் தெனக்கும் வெளில கிளம்பும்போது இப்பல்லாம் அம்மா மாதிரி அழகா இருக்க?” (அட, அதில் பயப்பட எதுவுமில்லை. புடைவை கட்டும்பொழுதெல்லாம் பெண் பல வருடங்களாகச் சொல்வதுதான். அம்மா என்பவள் புடைவை, தலையில் துண்டு கட்டிக் கொண்டு இருக்கவேண்டும் என்பது இங்கேதான் குழந்தைகளுக்கு கர்ப்பத்திலேயே அழுத்தமாக போதிக்கப் படுகிறது. த்ரிஷாவே அம்மாவாக நடித்தாலும் புடைவைதான்.)

……
……

இடையிடையே ஃபோனில் அம்மா அடக்கமாக(!) இருக்கச் சொல்லி அட்வைஸ், அப்பாவின் நலன் விசாரிப்பு, அண்ணா மன்னியின் அன்பைக் கூட சமாளித்து விடலாம். ஆனால் இந்தத் தம்பி என்ற பெயரில் இருக்கும் வானரம், “என்ன லக்ஸ், சிந்தால்லேருந்து ஹமாம் லைப்பாய் வரைக்கும் ஒரே சோப்பு வாசனை இதுவரைக்கும் வருது? அந்தப் பக்கம் பயங்கரமா சோப்புப் போடறியா, திருந்துங்கடீ” என்று பதில் சொல்லமுடியாத கேள்விகளாகக் கேட்டுக் கொண்டு அந்தப் பக்கம் சிரித்துக் கொண்டே இருப்பதையும், “பதில் பேசு, என்ன பேசமாட்டேங்கற? ஃபோனை அங்க குடு, நானே கேட்டுக்கறேன்’ என்று சீண்டுவதையும் எல்லாவற்றிற்கும் ‘ஹி…. ஹி’ என்று மட்டும் வழிந்துகொண்டு ‘சரி வெச்சுடவா, வேலை இருக்கு’ என்று சொல்லிக்கொண்டே 20 நிமிடம் கேட்க வேண்டியிருப்பதைத் தான் பொறுக்க முடிவதில்லை. இந்தத் தடவை எப்படியும் இதை திடமாகக் கடக்க வேண்டும்.

இன்னும் சில சின்னச் சின்ன dos and donts…

சாப்பாட்டு மேசையாக டைனிங் டேபிளையே உபயோகித்து கம்ப்யூட்டர் டேபிளுக்கு ஓய்வளிக்க வேண்டும்.

உடன் உட்கார்ந்து டி.வி சீரியல்களை ஆர்வத்தோடு பார்ப்பதுபோல் நடிக்க முடிந்தால் நல்லது. சீரியலில் வரும் பெண்களுக்கான சிக்கல்களுக்காக நம் முகத்தையும் சிந்தனையையும் கூட சீரியஸாக வைத்துக் கொண்டு கவலைப்பட முடிந்தால் மேலும் நல்லது.

வெயில் காலமாக இருப்பதால் தலையை விரித்துக் கொண்டே இருப்பானேன்? நன்றாக இழுத்து வாரி எப்பொழுதும் ஒரு band போட்டுக் கொள்ளலாம்.

குழந்தையை எந்தக் காரணம் கொண்டும் கடிந்துகொள்ளாமல் சிரித்துக் கொண்டே அதைச் சமாளிக்கவும். கேட்டதை எல்லாம் ஒரு தாய்க்கே(?!) உரிய பொறுமையுடன் செய்து தரவும். மற்ற குழந்தைகளையும் அப்படியே செல்லமாக வைத்துக் கொள்ளவும். ஆனால் மற்ற குழந்தைகளிடம் அளவை மிஞ்சி விட வேண்டாம். அதனால் பெண்னுக்குக் கோபம் வந்து மீண்டும் மேலே இருக்கும் கேள்விகளில் எதையாவது ஒன்றிரண்டை அது பொதுவில் உருவிப் போடலாம். 

நைட்டி என்பது இரவுக்கான உடை மட்டுமே என்பதை இவ்வளவு காலங் கடந்தாவது உணருவது நல்லது. மற்றபடி டைனிங் சேர், சோபா, கம்ப்யூட்டர் ஸ்பீக்கர், கிரைண்டர் என்று அங்கிங்கெனாதபடி இருக்கும் எல்லாப் பொருள்களுக்கும் முழு ஓய்வு கொடுத்துவிட்டு துப்பட்டாவை எப்பொழுதும் சொந்தத் தோளிலேயே சுமக்கவும்.

ஞாயிறு என்றால் ஏழு மணிக்கு எழுந்தால் போதுமே என்று கோவிந்த் சொல்வதைக் கேட்டு வழக்கம்போல் ஒன்பது மணி வரை தூங்கிவிடவேண்டாம். அதெல்லாம் பொதுவாக உலகில் ரங்கமணிகளுக்கானது.

இத்தனையையும் இன்னும் எதிர்கொள்ளப்போகும் எதிர்பாராத பலவற்றையும்கூட சமாளிக்க வேண்டும். ஆனால் கஷ்டமோ, வலியோ முகத்தில் தெரியாமல் சமாளிக்க வேண்டும். அப்போதுதான், “இதெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்லை. என்னோடது எப்பவுமே ஒரு ஆர்கனைஸ்ட் குடும்பம்தான்” மாதிரி சீன் கிடைக்கும். முடியுமா என்று கேட்டால் முடிய வேண்டும். ஏர்போர்டில் handbaggageல 18 கிலோ பொருளை அடைத்து வைத்துவிட்டு சந்தேகம் வராமல் இருக்க 8 கிலோவுக்கே குறைவு மாதிரி அவர்கள் பார்க்கும்போது அலட்சியமாகத் தூக்கி இந்தப் பக்கத்திலேருந்து அந்தப் பக்கம் வைப்பதில்லையா? (உள்ளே நரம்பு எலும்பெல்லாம் தெறிக்கும்!) ஒருமுறை ஒரு 19 கிலோ + 2 கிலோ கிரைண்டரையே(2 கிலோ, கிரைண்டருக்கு கம்பெனி பாக்கிங் பத்தாது என்று எக்ஸ்ட்ராவாக அண்டக் கொடுத்திருந்த ஜீன்ஸ், டவல் வகையறா) அப்படி எடுத்துக் கொண்டு போன நம் திறமையை இப்போது நினைத்துப் பார்க்கவும்.

Hand baggage போதாது என்று கர்ச்சீப், பர்ஸ் வைக்கிற சின்ன கைப்பையிலேயே 5 கிலோவை வழக்கமாக ஏற்றுவதையும் நினைவுப்படுத்திக் கொள்ளவும். ஆனால் கஷ்டப்பட்டு பாரம் சுமப்பது நாமாக மட்டுமே இருக்கவேண்டும். போனமுறை பெண்ணின் கையிலும் ஒரு கைப்பையைக் கொடுத்து பேருக்கு ஒரு 20 பக்க டிராயிங் நோட் வைத்ததையே அந்தக் குழந்தை தூக்க முடியாமல் ஏர்போர்ட் பொது இடத்தில் அழுத வரலாறுகளை (அதோட ஒரு ஓரமா ‘கொற்றவை’, ‘ஆதவன் கதைகள்’ ரெண்ரே ரெண்டு புக் மட்டும் என்னோடது வெச்சிருந்தேன். அது ஒரு பெரிய வெயிட்டாப்பா?…) இந்த நேரத்தில் நினைவூட்டிக் கொள். 

எப்பொழுதும் நாம் விச்ராந்தியாக இருப்பதைப் பார்த்து பொறாமைப் படும் அக்கம்பக்கத்தவர்கள் எல்லோரும், இப்போது நம்மை பால்கனியில் பார்க்கும் ஓரிரு நொடிகளில் “என்ன ரொம்ப பிசி போலிருக்கு?!” என்று கேட்கும் தொனியில் குரூர சந்தோஷமும், நக்கலும் இருப்பதாகத் தெரியலாம். தெரியலாம் என்ன தெரியலாம், நிச்சயம் இருக்கும். ஆனால் இந்தச் சமயத்தில் அக்கம்பக்கத்தினருடனான நல்லுறவு மிக முக்கியம். அதனால் அதையெல்லாம் இப்பொழுதைக்கு கண்டுகொள்ளாமல் பதிலுக்கு ஒரு ஸ்மைலியை மட்டும் போட்டு வைக்கவும். நாம் இணையத்தில் போடாத வெற்று ஸ்மைலியா?…

===

“இரு.. நிறுத்து… என்ன இணையம் வரைக்கும் வந்துட்ட? ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசில எங்க இணையத்தையுமா? இந்த செய்முறை வேற முடியவே மாட்டேங்குது.. என்ன நடக்குது இங்க?”

“நான் இனிமே எப்படி இருக்கணும்னு எனக்கு நானே சொல்லிக்கறேன்; புலம்பிக்கறேன். வலைப்பதிவு ஆரம்பிச்சதிலேருந்து எனக்குள்ளயே பேசிகிட்டாலும் எல்லாம் ரெசிபி ஃபார்மட்ல தான் சொல்ல வருது..”

“அது போகட்டும், எல்லா பதிவர்களுக்கும் இருக்குற கிறுக்குதான். ஆனா எதுக்கு இவ்ளோ அமக்களம்? 100 வது பதிவைப் போடப் போறியா?”

“அதெல்லாம் இப்ப இல்லை. 99 வரைக்கும்தான். அதுக்கப்புறம் வழக்கப்படி கொஞ்ச நாள் கட்டையா போட வேண்டியதுதான். நான் மட்டும் விதிவிலக்கா?”

“அடடா என்னாச்சு?”

“தங்கை தம்பிகள் அவங்க குடும்பம், குழந்தைகள், அம்மா அப்பா எல்லாரும் லீவுக்கு வராங்களே..”

“வாவ்! நல்ல விஷயம் தானே. அதுலயும் அம்மா வராங்கங்கற ஒரு சந்தோஷமே போதுமே! நாங்களெல்லாம் கேட்டதா சொல்லு. பிரமாதமா சமைச்சு அசத்திடுவியா? இங்க வலைப்பதுவுலயும் எல்லாச் சமையலையும் பகிர்ந்துப்ப இல்லை? ”

“நீங்க வேற, வர்றது கோவிந்தோட அம்மா! நானே டென்ஷன்ல இருக்கேன், எனக்கு உலை வெக்கவே மறந்தாப்ல இருக்கு!! அரிசிக்கு எவ்ளோ தண்ணி வெக்கணும்? ஃபில்டர்ல காப்பிப் பொடியை மேல போடணுமா, கீழ போடணுமா?”

“:))) அதுசரி, கதை அப்படிப் போகுதா? கஷ்டம் தான். அப்ப வேலை எல்லாம் முடிஞ்சுட்டு ராத்திரி 11 மணிக்கு மேலதான் கணினிப் பக்கமே வரமுடியும்னு சொல்லு!”

“ஐய, அவனவனுக்கு இருக்கற அலுப்புல அப்பாடீன்னு படுத்தாப் போதும்னு… “, ஐயய்யோ!!!…. படுக்கும்போது தாலிக்கொடியை அவிழ்த்து தலையணைக்கு அடியில் வைப்பதை மறக்காமல் மறந்துவிட வேண்டும்.

பாதித் தூக்கத்தில்…….
……
…….

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்: (for the title)

As I am suffering from the severe above mentioned situation, I request you sir/madam to grant me leave for 12 days only from today (21/04/07 to 02/5/07).

Thanking you,

Yours seasoningly seasoning 😦
Jayashree Govindarajan.