கீரையை அதிகம் படுத்தாமல் உள்ளது உள்ளபடியே சமைக்கும் எளிய முறை.

தேவையான பொருள்கள்:

கீரை – 2 கட்டு
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – 1 சிட்டிகை

தாளிக்க – எண்னை, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, சீரகம்.

keerai masiyal1

செய்முறை:

  • கீரையை வேரிருந்தால் நீக்கிவிட்டு, நன்றாக அலசி, பொடிப்பொடியாக நறுக்கவும்.
  • அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தில் கீரையை போட்டு, உப்பு, பெருங்காயம், கால் கப் தண்ணீர் சேர்க்கவும்.
  • பாத்திரத்தை மூடவேண்டாம். எங்காவது அறையை விட்டு வெளியே செல்லவேண்டியிருந்து, திறந்து வைப்பது ரிஸ்க் என்று நினைத்தால், மேலே இருப்பது போல் துளைகள் போட்ட மூடியால் மூடலாம்.
  • சிம்மில் வைத்திருந்தால், கீரை சிறுகச் சிறுக குறைந்து, நன்கு வெந்துவிடும். (கீரை வேகும்போது வரும் வாசத்திற்கு ஈடு இணையே இல்லை.)
  • இப்போது அடுப்பிலிருந்து இறக்கி ஒரு கனமான கரண்டியால் நன்கு மசிக்கவும்.
  • அதிக நீர் இருந்தால் மசிக்கும் முன் அரிசி மாவு அல்லது கார்ன்ஃப்ளோர் சேர்த்துக் கொள்ளவும்.
  • எண்ணையில் கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, சீரகம் தாளித்துச் சேர்க்கவும்.
  • Keerai Masiyal

* முளைக்கீரை, அரைக்கீரை, பாலக்… போன்ற கீரைகளை இந்த முறையில் சமைக்கலாம்.

* கீரையை வேகவைக்க, நிறம் மாறாமல் இருக்க, சிலர் சமையல் சோடா சேர்ப்பார்கள். உண்மையில் தேவை இல்லை. சத்துக்கள் தான் அழியும். நாம் திறந்தே சமைப்பதால் நிறம் மாறாது.

* கீரை மசியல் மண் சட்டி அல்லது மாக்கல் சட்டியில் சமைப்பது சுவையை அதிகரிக்கும்.

* மிக்சியில் கீரையை மசிப்பது சுவையை பெருமளவு பாதிக்கும். மோர்கடையும் மர மத்து அல்லது கனமான கரண்டியால் மசிப்பதே சரி. இந்த முறையில் கீரை அதிகம் மசியாது என்றாலும், இதுவே சுவையாக இருக்கும்.

* சில சமயம் (அநேகமாக மழைக் காலங்களில்) கீரை, சுவையில் கடுக்கும். எத்தனை வேக வைத்தாலும் சரியாகாது. அந்த நேரத்தில் மட்டும் ஒரு கரண்டி வேகவைத்த துவரம் பருப்பும் சேர்த்து மசிக்கவும்.

* கீரைகளை வாங்கிய உடனே சமைத்துவிட வேண்டும். சமைத்த உடனே சாப்பிட்டுவிட வேண்டும். ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட வேண்டாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

எல்லாவகை குழம்பு, ரசம், தயிர் சாதத்திற்கும் ஒத்துப் போகும். ஆனால் வத்தக் குழம்பு, வெந்தயக் குழம்புடன் கூட்டணி சேர்ந்தால் தயிர்சாதத்திற்கு மிக அபாரமாக இருக்கும்.