கறி/கூட்டு பகுதியில் முதலில் இந்தப் பதிவைத் தான் நான் எழுதியிருக்க வேண்டும். அநேகமாக திருமணத்திற்கு முன்பு(அல்லது சமைக்க ஆரம்பித்ததற்கு முன்பு) நான் சாப்பிட்ட காய்கறிகளை உருளை, கீரை, பூசணிக்காய் என்று விரல்விட்டு எண்ணிவிடலாம். நேர்மாறாக என் வீட்டில் அனைவருமே காய்கறிகளை மிக அதிகமாகச் சாப்பிடுபவர்கள்; வற்புறுத்துபவர்கள். பாட்டி கெஞ்சல், அம்மா திட்டு, உடன்பிறப்புகள் நக்கல்/போட்டுக் கொடுத்தல்களுக்கு மத்தியில் அப்பாவின் ‘பாவம் பிடிச்சதை சாப்பிடட்டுமே, விட்டுடலாமே!’ படு சன்னமாக எடுபடாமல் போகும். இதனாலேயே சாப்பாட்டு நேரம் எனக்கு போர்க்களமாகவே இருந்திருக்கிறது. கேரட், பீட்ரூட், பரங்கி மாதிரி அசட்டுத் தித்திப்புக் காய்கறிகளைப் பார்த்தால் சாப்பாட்டு நேரத்திற்கு முன்பே, ‘பசிக்கலை மாதிரி இருக்கு!’ என்று மெதுவாக ஒரு திரியைக் கொளுத்துவேன். ஆனால் எடுபடாது. பொதுவாக அந்தக் காலத்தில் வீட்டில் ஒதுக்கிய முருங்கை, வெங்காயம், முள்ளங்கி போன்ற காய்களைக் கூட பாட்டி சமையலைறைக்கு வெளியே ஒரு தனி அடுப்பில் சமைத்துக் கொடுத்திருக்கிறார். [மதி கேட்டது நினைவுக்கு வருகிறது; சின்ன வெங்காயத்தை நெய்யில் வதக்கி, சர்க்கரை சேர்த்துக் கொடுப்பார்கள் பாருங்கள்(இரத்த விருத்திக்காம்!)], அவைகளின் வாசனைக்கே தலைதெறிக்க ஓடுவேன்.  

எப்படி இந்த ரசவாதம் நிகழ்ந்தது என்று தெரியவில்லை, சமைக்க ஆரம்பித்த மூன்றே மாதத்தில் பப்பாளிக்காய், சுரைக்காய், சுண்டைக்காய் என்றெல்லாம் தேடிப்பிடித்து சமைக்கவும், அதனாலேயே வேறு வழியில்லாமல் சாப்பிடவும் ஆரம்பித்துவிட்டேன். (திட்டிக் கொண்டிருந்த அம்மா, ‘ஆனாலும் நீ ரொம்ப மாறிட்ட!’ என்று ஏன் இதற்கு சந்தோஷப்படாமல் வருத்தப்படுகிறாள் என்றுதான் புரியவில்லை) இன்றைக்கு என் பெண்ணை சாப்பிட அழைத்தால் முதலில் “என்ன காய்?” என்று கேட்காமல் சாப்பிட வந்ததில்லை. சாதமே இல்லாமல் கூட சாப்பாடு போட முடியும், ஆனால் காய் இல்லாமல் தப்பிக்க முடியாது. பாகற்காயும் சம்மதமே. திட்டமிட்ட வளர்ப்பு. (இன்னொரு திட்டமிடல்- இதுவரை கிரிக்கெட்டே பார்க்கவிடாமல், அதன் வாசனையே தெரியாமல் வளர்த்துவிட்டேன். 🙂 என்றைக்கு சித்தார்த்தனாய் பிய்த்துக் கொள்ளப் போகிறதோ!)

தேவையான பொருள்கள்:

காய் – 1/2 கிலோ
காய்ந்த மிளகாய் – 1 அல்லது 2
உப்பு, மஞ்சள் தூள் – தேவையான அளவு
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
கொத்தமல்லித் தழை – சிறிது

தாளிக்க: எண்ணை, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை.

Pudalangaai CurryBeetroot Curry

Carrot CurryBeans Peas Curry

செய்முறை:

  • காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

  • அடுப்பில் வாணலியில் இரண்டு டீஸ்பூன் (மட்டும்) எண்ணையில் கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, காயைச் சேர்க்கவும்.

  • தேவையான உப்பு, மஞ்சள் தூளுடன் (வெண்டைக்காய், பூசணிக்காய் தவிர்த்து மற்ற காய்களுக்கு) அரை கப் தண்ணீரும் சேர்த்து விட்டு, மூடிவைக்கவும்.

  • அடிக்கடி திறந்து, கிளறி, தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் சேர்த்து முக்கால் பதம் வெந்ததும் (இன்னும் கொஞ்ச நேரம் அடுப்பில் இருக்கலாம் என்று நினைக்கும்போதே இறக்கவும்.)

  • தேங்காய்த் துருவல், கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

* வேகவைக்காத சாலட்டுக்கு அடுத்ததாக முக்கால் பதத்தில் வெந்த, அதிகம் மசாலா சேர்க்காத காய்கறிகள் ஆரோக்யத்தில் கொஞ்சம் சமரசம் இல்லாத ஏற்பாடு. காய்கறிகளை விரும்ப முதலில் அவைகளில் மசாலா மிக்ஸிங், அரைச்சல்ஸ், கரைச்சல்ஸ் இல்லாமல் அதன் இயற்கையான சுவையை முழுமையாக முயற்சிப்பது நல்லது.

* பீன்ஸ், கேரட், பீட்ரூட், அவரை, கோஸ், உருளை, சௌசௌ, புடலை, டெம்ஸ், கொத்தவரங்காய், நூல்கோல்… என்று எந்தக் காயையும் தனியாக இந்த முறையில் சமைக்கலாம். தேவைப்பட்டால் பச்சைப் பட்டாணி, மொச்சை போன்றவை மட்டும் சேர்த்துக் கொள்ளலாம்.

* தேங்காய், இயற்கை உணவிலேயே சிபாரிசு செய்யப்படும் அதி முக்கிய உணவுப் பொருள். அடுப்பில் வதக்காத பச்சைத் தேங்காய் அதிக ஆபத்தில்லாதது மற்றும் சுவையானது. எனவே விரும்பினால் தேங்காய்த் துருவல் பச்சையாக எல்லாக் கறிகளிலும் கடைசியில் அடுப்பிலிருந்து இறக்கியபின் சேர்த்துக் கொள்ளலாம்.

* ஒருவேளை காரட்டின் சுவை கத்திரிக்காயிலும், பாகற்காயின் சுவை பூசணிக்காயிலும் இருந்தால் எப்படி இருக்கும், சகிக்க முடியுமா? எனவே இயற்கையில் எது எப்படி இருக்கிறதே அதுவே சரியானது என்பதைப் புரிந்துகொண்டு இவைகளை ஏற்க ஆரம்பித்தால் எல்லாக் காயும் பிடித்துவிடும். காதலிக்கும் போது மட்டும்தான் குறைகளே கண்களில் படாதாமே. (அப்படியா??!!) சொல்லிக் கொள்கிறார்கள். அதனால் அந்தத் தலைப்பு. (என்னமோ போங்க!)

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

காரக் குழம்பு போன்ற எந்த மசாலாக் குழம்புகளுக்கும், ரசம் மற்றும் தயிர் சாதம், தேங்காய் சாதத்திற்கும் கைகொடுக்கும்.

ஆனால், ஒரு ‘சாட்’ மாதிரி இவைகளை அப்படியே தனியாகவும் சாப்பிடப் பழகிக் கொள்வது நல்லது.