ஒரு திருமணப் பந்தியில் தான் ‘அரைச்சுக் கிளறல்’ என்ற பெயரை முதன்முதலில் கேட்டேன். ஏதோ புது ஐட்டம் என்று ஆவலாகப் பார்த்தால் அட, நம்ப ‘பருப்பு உசிலி’. 🙂 இது ஏதாவது வைணவ சம்பிரதாயப் பெயரா அல்லது ஏதாவது ஊரின் வழக்குப் பெயரா என்று தெரியவில்லை. பருப்பு உசிலி என்ற பெயரே நாம் வைத்துக் கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்:

கொத்தவரங்காய் – 1/2 கிலோ
துவரம் பருப்பு – 3/4 கப்
கடலைப் பருப்பு – 1/4 கப்
காய்ந்த மிளகாய் – 5
தேங்காய்த் துருவல் – 3 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
கொத்தமல்லித் தழை – சிறிது
மஞ்சள் தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

தாளிக்க – எண்ணை, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

koththavarangaai-paruppu-usili.jpg

செய்முறை:

  • பருப்புகளைத் தண்ணீரில் 2 மணிநேரம் ஊறவைத்து, காய்ந்த மிளகாய், உப்பு (பருப்புக்குத் தேவையானது மட்டும்), பெருங்காயம் சேர்த்து கெட்டியாக, கரகரப்பாக அரைத்து 2 சிட்டிகை மஞ்சள் தூள் கலந்துகொள்ளவும்.
  • கொத்தவரங்காயை காம்பு நீக்கி, பொடியாக நறுக்கி, காய்க்குத் தேவையான உப்பு, சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும்.
  • வாணலியில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்த பருப்பு விழுதைக் கொட்டி அடிப்பிடிக்காமல் நிதானமான தீயில் கிளறவும்.
  • சிறிது சிறிதாக மாவு வெந்து, உதிர் உதிராக வர ஆரம்பிக்கும்.
  • நன்கு வதங்கி உதிர்ந்ததும், வேகவைத்த கொத்தவரங்காயை, முற்றிலும் நீரை வடித்தபின் சேர்த்துக் கொட்டி, மேலும் மொறு மொறுப்பாகக் கிளறி இறக்கவும்.
  • தேங்காய்த் துருவல், கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறலாம்.

* இங்கே கொத்தவரங்காயில் சொல்லியிருந்தாலும் பீன்ஸ், கோஸ், முக்கியமாக வாழைப்பூ என்று எந்தக் காயோடும் இதைச் செய்யலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய் சாதம், பருப்பில்லாத குழம்பு வகைகள் (வெந்தயக் குழம்பு, வத்தக் குழம்பு, முக்கியமாக மோர்க்குழம்பு….), ரசம் மற்றும் தயிர் சாதம்.

காரம் குறைவாக இருந்தால் அப்படியே சாப்பிடலாம்.

Advertisements