காரடையான் நோன்பு குறித்து…. சுட்டி 1| சுட்டி 2

தேவையான பொருள்கள்:

அரிசி மாவு – 1 கப்
தண்ணீர் – 1 கப்
வெல்லம் – 1 கப்
துவரை அல்லது தட்டப் பயறு – 1 பிடி
தேங்காய் – சிறிது
ஏலப் பொடி – 1/2 டீஸ்பூன்
நெய் – தேவையான அளவு

செய்முறை:

kaaradaiyaan-nonbu-kozukkattaiinippu.JPG

 

  • முதலில் அரிசி மாவை, நிதானமான சூட்டில், சிவக்க வறுத்துக் கொள்ளவும். (அரிசியை சிவக்க வறுத்தும், மிக்ஸியில் அரைத்துக் கொள்ளலாம். நைசாக அரைத்தால் கொழுக்கட்டை மொழுக்’கென்று இருக்கும். கொஞ்சம் கரகரப்பாக அரைத்தால் சுவையாக இருக்கும்.)
  • தேங்காயை, சிறுசிறு துண்டுகளாகக் கீறிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில், தட்டப் பயறை வறுத்து, தண்ணீர் சேர்த்து, கொதித்கவைத்து, பயறு பாதிவரை வேக வைக்கவும்.
  • அதன்பின் வாணலியில் இருக்கும் தண்ணீர் ஒரு கப் இருக்குமாறு- தேவைப் பட்டால் மேலும் சேர்த்துக் கொள்ளவும்.
  • அத்துடன் வெல்லம் சேர்த்து, கரைந்ததும், தேங்காய்த் துண்டுகள், ஏலப்பொடி சேர்த்து, மாவைக் கொட்டிக் கிளறி இறக்கவும்.
  • இட்லித் தட்டில் நெய் தடவி, கொழுக்கட்டையாகவோ, அடை மாதிரி தட்டியோ வேகவைத்து எடுக்கவும்.

* நோன்பு தினம் என்பதால் மிகவும் சுத்தமாகச் செய்ய நினைப்பவர்கள், நேரடியாக வாணலியில் தட்டப் பயறை வறுத்து பாதிவரை வேகவைப்பார்கள். இப்படிச் செய்வது மிகுந்த மணமாக இருக்கும். அல்லாமல் ஒரு நான்கு மணி நேரம் முன்னாலேயே பயறை தண்ணீரில் ஊறவைத்தும் செய்யலாம். இது செய்வது சுலபம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சுடச் சுட இதைச் சாப்பிட, இதற்குத் தொட்டுக் கொள்ள வெண்ணை என்று கண்டுபிடித்தவருக்கு அபார ரசனை இருந்திருக்க வேண்டும். சூப்பர் காம்பினேஷன்.

நன்றாக இருக்கிறதே, இன்னும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னால், ஒவ்வொரு தடவையும் பாட்டி, “அவ்ளோதானே, இதென்ன பிரமாதமா, திரும்ப இன்னொரு நாள் செஞ்சுட்டா போச்சு!” என்று சொல்வார். ஆனால் சில உணவுகள் அந்தந்தப் பண்டிகை தவிர வேறு நாள்களில் செய்யக் கைவருவதே இல்லை. நமக்கும் கேட்கத் தோன்றுவதில்லை. அதுபோல் இந்த நோன்புக் கொழுக்கட்டைக்கும் இன்னொரு நாள் என்பது இனி அடுத்த வருட மாசி மாதக் கடைசி நாள் தான்.

இதில் எனக்குப் பிடித்த இன்னொரு மிக முக்கிய விஷயம், அண்ணன் தம்பியை எல்லாம் அப்படி ஓரமாக உட்காரவைத்துவிட்டு நமக்கு வீட்டில் முதல் மரியாதை நடக்கும். வேண்டுமென்றே, செய்தவை ஆறிப் போகும்வரை, நேரத்தை இழுத்தடித்து சாப்பிடுவேன். 🙂

காரடையான் நோன்புக் கொழுக்கட்டை (காரம்)

Advertisements