நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க. இதை எல்லாம் செய்ய எனக்கு ஒரு முழு மாசம் நெட் பிச்சுக்கணும்.

இந்த வரிகளை இந்தப் பதிவில் சிரித்துக் கொண்டே நான் தட்டியபோது, விதியும் என்னோடு சேர்ந்து சிரித்திருக்க வேண்டும். பதிவை ஏற்றிவிட்டு, இரவு தூங்கி காலையில் ஆறரை மணிக்கு, பெட்டியைத் திறந்தால், எதுவுமே வரவில்லை. “No operting system found..” என்ற ஒரே வரிதான், திரும்பத் திரும்ப. எனது வானளாவிய கணினி அறிவுக்கு இதன் பொருள் புரியாததால், வலைப்பதிவு நண்பர் ஒருவருக்கு அந்த அதிகாலையில் தொலைப்பேசினால், இந்த நேரத்துக்கு இவளா என்று வியந்தார் என்றாலும் செய்திகேட்டு மகிழ்ச்சியாகி விட்டார்.

“ஆஹா, பொட்டி புட்டுகிச்சு!”

“அப்டீன்னா?”

“அப்டீன்னா, harddisc corrupted. மாத்தற வரைக்கும் எதுவும் செய்ய முடியாது. என்சாய்!”

கடந்த 5 வருடங்களில் இப்படி எல்லாம் நடந்ததே இல்லை. அதெல்லாம் இருக்காது என்று திடமாக நம்பினேன். சாட்சிக்காரனை விட சண்டைக்காரனே மேல் என்று என் வீட்டு ரங்கமணிக்கு ஃபோனினால், லேசான அதிர்ச்சிக்குப் பின் தெளிவாக பதில் வந்தது, “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. மூடிவெச்சுட்டு மிச்ச தூக்கத்தை தொடர்ந்து செய்! நான் நேரம் கிடைக்கும்போது ஆளைப் பிடிச்சு ஏதாவது செய்றேன்.”

மனம் ஆறாமல் மீண்டும் நண்பருக்கே பேசினால், உள்ளே இருக்கும் கோப்புகள் எதுவும் திரும்பக் கிடைக்க சாத்தியம் குறைச்சல் என்று சொல்லிவிட்டார். அப்படியென்றால் நெட் கனெக்ஷன் போகாமல், எனக்கு ஒரு மாதம் வேலை வைக்காமலே எல்லாம் துடைத்து துப்புரவாகிவிட்டதா?”

கோப்புகள்… முதலில் என்னென்ன வைத்திருக்கிறேன் என்று சரியாக உடனே நினைவுக்கு வரவில்லை. ஆனால் ஐயோ… நினைக்க நினைக்க அன்று முழுவதும் நான் அடைந்த மனச்சோர்வு வாழ்நாளில் அடைந்ததில்லை. எக்கச்சக்கமான(ஆயிரத்திற்கும் மேற்பட்ட) புகைப்படங்கள், இதுவரை படித்த புத்தகங்கள், இணையத்திலிருந்து எடுத்த ரசித்த குறிப்புகள், பக்கங்கள், ரொம்பப் பிடித்ததென்று சேமித்த பக்கங்கள், மிக அதிக அளவிலான இசைக் குறிப்புகள், பாடல்கள், ஹரிமொழி.காம்-ற்காக சேமித்த ஆவணங்கள், மக்கள் முகவரிகள், சுஜாதாவோடு பேசி சேமித்த அம்பல அரட்டைகள், அப்புறம் படிக்கவென்று சேமித்த சுவாரசியச் சுட்டிகள், லூசுத்தனமாய் நான் எழுதி ஆனால் உலக நன்மைக்காக நான் வெளியிடாமல் வைத்திருந்த சில படைப்புகள்(!), பின்னூட்டங்கள், இதுவரை இணையத்தில் மற்றவர்கள் படித்து சிபாரிசு செய்திருக்கும் மிக நீளமான புத்தக விருப்பப் பட்டியல், இன்னும் சொல்ல விரும்பாத பெரிய்ய லிஸ்ட், இன்னும் என்னவெல்லாம் இப்பொழுதைக்கு மறந்து பின்னர் தேடுவேனோ….. எல்லாவற்றிற்கும் மேல் இத்தனை வருடங்கள் உறவினர்கள், நண்பர்கள், மரத்தடி நண்பர்களுடன் செய்த யாஹூ சாட்.. இணையத்தில் எல்லாவற்றிலிருந்தும் என்றாவது ஒரு நாள் விலகநேர்ந்தாலும், பின்னர் நினைவுகூற, ஆசையாய் அசைபோட இருக்கட்டும் என்று வைத்திருந்த எல்லாமே போச்!

பெண் ஸ்கூலிலிருந்து வந்து, கணினி மூடியிருப்பதைப் பார்த்து ‘கரண்ட் கட்டா? இருக்கே, ஃபேன் ஓடுதே?” என்று வியந்தாள். நடந்ததைச் சொன்னால், “C E L E B R A A A A T E!!” என்று ஒரே குதி. :((

வைத்திருந்த ஒவ்வொன்றாய் நினைவுக்கு வரவர திகிலோடு ஒரு பத்துமுறையாவது அன்று ஃபோன் செய்து புலம்பியதில் ரங்கமணி வரும்போது ஆளோடு வந்தார். வந்த சிகாமணி பார்த்துவிட்டு, ஆபரேஷன் முடிந்து வெளியே வரும் டாக்டரைப் போல் கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக் கொண்டார். Booting sector மட்டும் போயிருக்கலாம், டேட்டா ஏதாவது தேறுமா என்று எடுத்துப் போய் பார்த்து எதுவும் ஒரு 24 மணிநேரம் ஆனால் தான் சொல்ல முடியும் என்று சொல்லி செர்வரைத் திறந்துபார்த்தார். திறப்பதற்கான அத்தனை உபகரணங்களும் ஓடோடி எடுத்துக் கொடுத்தேன். நாங்களும் முதல்முறையாக இப்போது தான் உள்ளே பார்க்கிறோம். ‘ஐயா, செம குட்டி ஃபேன் உள்ள இருக்கு’ என்று பெண் குறுக்கே விழுந்து ஓடியது. “சாய் பீதே ஹைங் க்யா?” என்று வந்தவரை விசாரித்த ரங்கமணியை முறைத்தேன். அப்பொழுதைக்கு அந்த இடத்தை விட்டு எந்தக் காரணத்திற்காகவும் நகரும் உத்தேசமில்லை. 

ஏதாவது data வெச்சிருந்தீங்களா என்று ரங்கமணியைக் கேட்டதற்கு எனக்கு மேலும் இரண்டு கோபங்கள். பொதுவாக கணினி என்றால் அது ஆணுடையதாகத் தான் இருக்க வேண்டும், வீட்டில் டூல்ஸ் தேவை என்றால் மட்டும் எடுத்துத் தர பெண்கள் என்ற மக்களின் பொதுவான கண்ணோட்டம். அதைவிட, இதற்கு பதில் சொல்லாமல் ஒரு பெரிய யோகியைப் போல் முகத்தை தினசரிக்குள் வைத்திருந்த நம்மாளின் ரியாக்ஷன். ‘ஏதாவது data’ என்று சொல்வதற்கு கொஞ்சமாகவா உள்ளே இருக்கிறது? சே! 

“பதில் சொன்னா என்ன?”

“என்னிக்காவது அடுத்தவனுக்கும் கொஞ்சமாவது அந்த நாற்காலியை விட்டுக் கொடுத்திருந்தா, நானும் கிறுக்கனாட்டம் எதையாவது உள்ள சேத்து வெச்சிருந்திருப்பேன். அப்படி ஒரு ஆக்ஸிடென்ட் இதுவரைக்கும் இந்த வீட்டுல நடந்திருக்கா? அக்கிரமம் அதிகமாகும்போது கடவுள் இப்படித்தான் உள்ள பூந்து அழிப்பாரு. டேய் கோவிந்தா, எதை வைத்திருந்தாய், அதை நீ இழப்பதற்கு? நீ ஜாலியா இருடா!! அண்ணே, எது அழிந்ததோ, அது அங்கிருந்தே கொடுக்கப்பட்டது. நீங்க அங்கயே கேளுங்க விபரமெல்லாம்!” என்று என்பக்கம் கைகாட்டப் பட்டது.

சொல்ல வார்த்தையே வராமல் துக்கம் தொண்டையை அடைப்பதை அன்றுதான் அனுபவத்தில் கண்டேன். என்னுடைய கலக்கம் நிச்சயம் என்னையும் சேர்த்து, யாரும் எதிர்பாராதது. வீடு சீரியஸானது.

வந்தவரை முடுக்கியதில் தன்னால் 25 சதம் டேட்டாவிற்கு மட்டுமே கியாரண்டி தரமுடியும் என்று சொன்னார். ஆனால் ஆபரேட்டிங் சிஸ்டம் தன்னிடம் இல்லை என்ற குண்டைத் தூக்கிப் போட்டார். IBM வழியாகவே அதை மீண்டும் செய்ய முடியும் என்று சொன்னதில், விட்டால் போதும் என்று அவருக்கான தட்சிணையைக் கொடுத்து அனுப்பிவைத்து மறுநாள் IBM agency வழியாக…

பொதுவாக யாருக்கு தொடர்புகொண்டாலும், சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா மாதிரி, கம்பெனி வழியாக வரட்டுமா, பிரைவேட்டாக வரட்டுமா என்று கேட்கிறார்கள். ரிஸ்க் எதற்கு, வரியோடு பில்லும் வேண்டும் என்று சொல்லியே வரவழைத்தோம்.

“நான் ஆபரேடிங் சிஸ்டம் இப்ப இதுல ஏத்திடுவேன். ஆனா ஏற்கனவே ஏதாவது(?!) உள்ள டேட்டா வெச்சிருந்தீங்கன்னா, அதெல்லாம் போயிடுமே, பரவாயில்லையா?” கூலாகக் கேட்டார்.

ஐயய்யோ, இருக்கிற டேட்டாவெல்லாம் retrieve செய்தபின் ஏற்றவும் என்று சொன்னால், IBM உள்பட எந்தப் பெரிய கம்பெனியும் அந்த வேலைக்கு மட்டும் பொறுப்பு எடுத்துக் கொள்வதில்லை என்று திடமாக மறுத்தார். இதன் காரணம் எனக்குப் புரியவில்லை. இதற்கென்று கஸ்டமர் தனியாக ஒருவரை நாட முடியுமா? வந்தவரையே ப்ரைவேட் வேலையாக எடுத்து செய்யச் சொன்னால், ஏதோ ஒரு படத்தில் திருமணத்திற்காக கவுண்டமணி ஒருநாள் மட்டும் லஞ்சம் வாங்காத போலீஸ் மாதிரி, அந்த வார்த்தையைக் கேட்டதுமே ஓடுவாரே, அப்படி ஒரு அதிர்ச்சி காட்டி மறுத்தார். மூனு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்லை என்று எவ்வளவோ நான் சொல்லிப் பார்த்தும் கேட்கவில்லை. இடையில் “ஜாப் எதிக்ஸ்னா என்னன்னு உனக்குத் தெரியுமா? அடுத்தவங்களை தொல்லை பண்ற, உனக்கு வேலை ஆகணும்னு?” என்று பக்கவாட்டிலிருந்து வந்த முறைப்பிற்கு, “ஆமாமா, நாங்களெல்லாம் எதிக்ஸ் பார்க்க ஆரம்பிச்சா குப்பை கொட்ட முடியும் மாமியார் வீட்டுல,” என்று சொல்லவந்ததை இன்னொரு நாள் மறக்காமல் சொல்லிவிட வேண்டும். இப்பொழுதைக்கு நமக்கு வேலை ஆக வேண்டுமே. (ஆனால் உண்மையிலேயே தெரியாமல் தான் கேட்கிறேன். நமக்கு ஒரு தொழில்நுட்பம் தெரிந்திருக்கிறது. நம் கம்பெனி ஏற்காத அந்த வேலையை, கம்பெனியை பாதிக்காத பட்சத்தில் வேறு ஒருவருக்கு பகுதி நேரத்தில் செய்துகொடுத்து பணம் சம்பாதித்தால் என்ன தவறு?)

சரி, நாங்கள் எல்லா டேட்டாவும் மீட்டபின் உங்களைக் கூப்பிடுகிறோம், அப்போது வந்தால் போதும், ஆனால் திரும்ப ஒருமுறை இதற்கு பணம் தரமுடியாது என்று அத்தனை கவலையிலும் மறக்காமல் கறாராகச் சொல்லி அனுப்பிவிட்டு,… பழைய மீட்பரின் நம்பரைத் தேடினேன். (எதற்கும் இருக்கட்டும் என்று வாங்கிவைத்திருந்தேன்.) இரண்டு நாள் கழித்து வருவதாக உத்தரவாதம் கிடைத்தது.

அதற்குள் ஒரு 25 சதமாவது கிடைக்கும் என்று சொன்னாரே, நம்முடையதில் எந்த 25 சதம் கிடைத்தால் பரவாயில்லை என்று மனம் கணக்குப் போட்டு சபலப்பட ஆரம்பித்தது. நாம் முக்கியமாக நினைப்பதெல்லாம் மட்டும் கிடைத்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ‘வேண்டாத தெய்வமில்லை, நீதானே பாக்கி!” என்றே எல்லாத் தெய்வத்திடமும் சொல்லி வேண்டிக் கொள்ள ஆரம்பித்தேன். (பகுத்தறிவாவது, மண்ணாங்கட்டியாவது!)

“25 பெர்சண்ட்ங்கரது system files, temporary files, cookies, favorites, visit history இதெல்லாமா இருக்கும்!” என்று போகிற போக்கில் சொன்னவரை பசிக்காத, பொழுதுபோகாத கிழப் புலிதான் தின்ன வேண்டும். Grrr…

0

“பத்து நாளா ஒரே டார்ச்சர்பா. எப்பப் பாரு படி படின்னு. தனக்கு போர் அடிக்குதுன்னு என்னைப் படிக்க வெக்கறா. விளையாடவே விட மாட்டேங்கறா. ஃப்ரெண்ட்ஸ் விளையாட வந்தாலும் அவ படிக்கணும்னு சொல்லி அனுப்பிட்டா. ஒரு கார்ட்டூனும் பாக்க முடியலை. தானே ரிமோட் கைல வெச்சுக்கறா. டிவி பாக்கவும் தெரியலை. ஒன்னும் நல்லால்லைன்னு சொல்லிண்டே half minuteக்கு ஒரு சேனல் மாத்திண்டே இருக்கா. சீக்கிரம் கம்ப்யூட்டர் சரி செஞ்சு கொடுத்திடுங்க. நாம ஜாலியா இருக்கலாம்,” ஆபீசிலிருந்து வந்த அப்பாவைக் கொஞ்சிக் கொண்டே உள்ளே குட்டி பதினாறு அடி பாய்ந்துகொண்டிருந்தது. பெண் இவ்வளவு நாள் போட்டுக் கொடுத்ததிலேயே இதுதான் சாதகமான போட்டுக்கொடுத்தல்.

“நாளைக்கு காலைல அந்த அங்கிள் வந்து எடுத்துப் போயிடுவாரு. ரெண்டு மூணு நாள்ல எல்லாம் சரியாயிடும். இரு, அதுவரைக்கும் என் லாப்டாப்பை இறக்கலாம். சும்மா browse பண்ணிகிட்டு இருக்கட்டும், பாவம்.”

அட, இது ஏன் எனக்கு இவ்வளவு நாள் தோன்றாமல் போயிற்று. அந்த அளவு கூட யோசிக்க விடாமல் இழப்பு என்னை பாதித்திருக்கிறது. 😦

“எனக்கு எதுக்கு மத்தவங்களோடதெல்லாம். என்னோடது சரியாகட்டும். அதுலயே பாத்துக்கறேன்.”

“அட ரொம்பத்தான்! பரவாயில்லை பரவாயில்லை, எனக்கு இண்டர்வியூ வருது. கொஞ்சம் நெட் வேணும். இப்ப நைட் 8 மணி. ரொம்ப லேட்டாச்சு. நாளைக்கு காலைல சிஃபியைக் கூப்பிட்டு கனெக்ஷன் கொடுத்துவை!.. ஆனா சிஃபி போன் நம்பரெல்லாம் கம்ப்யூட்டர்ல இல்ல வெச்சிருப்ப? எப்படி பேசுவ?”

“அதெல்லாம் மனசுலயே இருக்கு. கூப்பிடறேன், இப்பவே வருவாங்க” நம்பாமல் பார்த்தார்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஆள் ஆஜர். வந்தவர் 5 நிமிடம் என்னை துக்கம் விசாரித்தார். :((( 15 நிமிடம் இணைப்பு கொடுக்கவே முடியவில்லை. யாருக்கோ திரும்பத் திரும்ப ஃபோன் செய்து காத்திருந்து, கொடுத்துவிட்டுப் போனார். அங்கே அலுவலகத்தில் இருப்பவர் வீட்டுக்குக் கிளம்பி Belahpur வரை போய்விட்டதாகவும், மொபைலில் திரும்ப அவரை அலுவலகத்திற்குக் கூப்பிட்டு இணைப்புக் கொடுத்ததாகவும் சொன்னார். பக்கவாட்டிலிருந்து இதற்கும் ஒரு முறைப்பு.

“எதுக்கு முறைக்கணும்? அதெல்லாம் எனக்குன்னா சிஃபில செய்வாங்க. எத்தனை தடவை டப்பா ஹிந்தில சண்டை போட்டிருக்கேன் அவங்களோட!”

“அதானே பாத்தேன். எல்லாம் சண்டைபோட்டு சேர்த்த ஃப்ரெண்ட்ஸ். நல்லது செஞ்சு வந்தவங்க இல்லை.”

“ஏதோ பாவம், இண்டர்வ்யூன்னு சொன்னீங்களேன்னு தான். நான் ஏன் அதைத் தொடப் போறேன்?”

0

harddisc.JPG

காலையில் வந்த மீட்பர் செர்வரைத் திறந்து, ஒரு வீடியோகேசட் சைஸ் வஸ்துவை மட்டும் உருவி எடுத்துக் கொண்டு மீண்டும் மூடிவைத்தார். காப்பி செய்ய 5 காலி டிவிடி வாங்கிக் கொண்டார். நான் எதற்காகவோ எப்பொழுதோ வாங்கியது, இப்பொழுது உபயோகம். என்னைப் பார்த்து மிகவும் பரிதாபப் பட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

“நான் இன்னிக்கி லீவ் எடுத்துட்டேங்க. இதுதான் எனக்கு முதல் வேலை. உங்களுக்கு முடிஞ்சவரைக்கும் 100% எடுத்துத் தர முயற்சி செய்றேன். கவலைப்படாம இருங்க.” சொன்னதோடு என்ன விதமான கோப்புகள் என்றும் நிதானமாக விசாரித்து எழுதிக் கொண்டார்.

உண்மையைச் சொன்னால் எனக்கு இப்பொழுது கவலை அதிகம் இல்லை என்றுதான் தோன்றுகிறது. இந்தச் சின்ன பெட்டியா நம்மை 15 நாள்களாக அலைக்கழித்து இவ்வளவு மன உளைச்சலைக் கொடுத்தது? பதிந்து வைத்தவை தானே போயிருக்கிறது. இணையம், நண்பர்கள், இசை, புத்தகங்கள், குழந்தை, குடும்பம் எல்லாம் அப்படியே தானே இருக்கிறார்கள். எதை இழந்தாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. அங்கிருந்தே மீண்டும் மீட்க முடியாதா என்ன? ஆனாலும் நான் எதிர்பார்த்த 25% மீண்டும் கிடைத்தால் மிக மிக மகிழ்வேன் என்பதையும் சொல்ல வேண்டும்.

நிதானமாக, மன அமைதியுடன் லாப்டாப்பைத் திறந்தேன். உடனேயே சொல்லிவைத்தாற் போல் ஃபோன்.

“வருதா சரியா?”

“யாருக்குத் தெரியும்?”

“சும்மா விடாதடா. எடுத்து browse பண்ணிக்க.”

“எனக்குப் பிடிக்கலை. விரலால cursor movements எனக்குப் பழக்கமில்லை. எனக்கு வேண்டாம். என்னோடதே வரட்டும்!”

“பட்டிக்காடு, அந்த bagல ஒரு மௌஸ் இருக்கு. எடுத்துப் போட்டுக்க. அப்றம் சொல்ல மறந்துட்டேன், 🙂 Happy Browsing! :))”

“தேவை இல்லை!”

லாப்டாப் பையைத் திறந்து பார்த்தால் அநியாயத்துக்கு குட்டியாக ஒரு எலிக்குட்டி, பாக்கிங் பிரிக்காமல். எடுத்து தொடர்புகொடுத்ததும், புதுப் புருஷன் மாதிரி இழுத்த இழுப்புக்கு வந்தது. வசதியாக இருந்தாலும் இன்னும் என்னவோ புது இடம் மாதிரி மனதிற்கு ஒட்டாமல் இருந்தது. விடுவிடுவென்று என் பெயரில் இன்னொரு user account ஆரம்பித்து, என்னை administrator ஆக்கிக் கொண்டு, ரங்கமணியை limitedக்கு இறக்கி… musicindiaonline திறந்து, பட்டையைக் கிளப்பும் இரண்டு பாட்டு கேட்டதும் பொட்டி நம்மாளு மாதிரி ஓர் உணர்வு வந்துவிட்டது. yahoo, g-talk எல்லாம் இறக்கி, googleல் தமிழில் தேட பழக்க தோஷத்தில் Alt 3 அழுத்தி, வார்த்தைகளைத் தட்டினால்… அட இதற்கு தமிழே தெரியவில்லை. நான் வீட்டு வாசல் டோர்மேட்டில் வந்து படுத்துக் கொள்ளும் மும்பை தெரு நாய்க்கே மதுரை வீரன் என்று பெயர்வைத்து, ‘வீஈரஅஅன்..!’ என்று கூப்பிட்டு, தமிழில் பேசினால், சொன்ன பேச்சு கேட்க வைத்திருக்கிறேன். ஈகலப்பையை இறக்கி, Keyman configurationல் Alt -2 TSCII, Alt-3 UNICODE என்று மாற்றும்போது 3 வருடம் முன்பு இதை என் பெட்டியில் என்னைச் செய்யவைக்க மரத்தடி நண்பர் யாஹூ சாட்டில் தலையால் தண்ணீர் குடித்தது நினைவு வந்து படுத்தியது. :(( தமிழ்மணமும் தேன்கூடும் திறந்தால், புதிதுபுதிதாக பதிவுகள் ஓடிக்கொண்டிருந்தன. சரி நிதானமாக அப்புறம் வரலாம், நம் பதிவை எதற்கும் ஒருதடவை பார்க்கலாம் என்று திறந்தால், எழுத்தாளர் உஷா வந்திருக்கிறார்.. சரி, அவருக்கு ஒரு ஸ்பெஷல் ரெசிபி போடலாம், அதற்கு முன் நம் சொந்த, நொந்த கதை தட்டலாம் என்று இந்தப் பதிவை பாதி தட்டிக் கொண்டிருக்கையில்…. call from ரங்கமணி. சே, இது ஒரு கெட்ட பழக்கம் இந்தப் பத்து நாள்களாக..தொண தொணவென்று ஃபோனில் கூப்பிட்டுப் பேசுவது…. இனிமேல் ரொம்ப பிசி, சும்மா சும்மா ஃபோன் செய்யக்கூடாதென்று சொல்லிவைக்க வேண்டும்.

“கிளம்பற அவசரத்துல முக்கியமானதை சொல்ல மறந்துட்டேன். என் லாப்டாப்ல என்ன வேணாலும் திறந்து படி. ஆனா no messenger downloads, அதைவிட முக்கியமா a strict ‘NO’ to your Tamil fonts and other tamil stuff, I mean it!!”

ஹா ஹா, ஐயோ பாவம், I already கருவாடு it. :)) என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்கப்பா!… நம்ப மக்கள் சொல்றது சரிதான் – “உலகம் கோயிஞ்சாமிகளால் ஆனது!!” 🙂