“எனக்கு சாப்பாட்டில் கட்டாயம் சாத்தமுது இருந்தாகணும்…”
— கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.
“எனக்கு சாத்தமுது மட்டும் இருந்தாலே போதும்; முழுச் சாப்பாடாய் நினைத்து திருப்தியடைவேன்.”
— நாந்தான். 🙂
தேவையான பொருள்கள்:
புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
தக்காளி – 2 பெரிது
பச்சை மிளகாய் – 1
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
ரசப் பொடி – 1 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பருப்பு வேக வைத்த தண்ணீர் – 2 கப்
கொத்தமல்லித் தழை – சிறிது
உப்பு – தேவையான அளவு
தாளிக்க – எண்ணை அல்லது நெய், கடுகு, சீரகம்.
செய்முறை:
- புளியை நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.
- தக்காளிகளை நான்காக நறுக்கி, நன்கு கையால் மசித்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் கரைத்துவைத்துள்ள புளி, மசித்த தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு கொதிக்க விடவும்.
- தக்காளித் துணுக்குகள் வெந்து, புளி பச்சை வாசனை போனபின், ரசப் பொடி சேர்க்கவும்.
- மேலும் 2 நிமிடம் மட்டும் கொதிக்க விட்டு, பருப்புத் தண்ணீர் சேர்க்கவும்.
- பருப்புத் தண்ணீர் குறைவாக இருந்தால் தேவைப் படும் அளவு தண்ணீர் சேர்த்து, அடுப்பை சிம்மில் வைக்கவும்.
- இப்போது மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக மேலே நுரை சேர்ந்து ரசம் கொதிக்க மேலே பொங்கி வரும்.
- இந்த நேரத்தில் அடுப்பை அணைத்து விடவும்.
- அதன்மேல் சிறிது எண்ணை அல்லது நெய்யில் ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் சீரகம் தாளித்து, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.
* எந்த ரசத்திற்கும் நாட்டுத் தக்காளியாக இருந்தால் நலம். புளியைக் குறைத்து உபயோகிக்கலாம். கிடைக்காவிட்டால் மட்டுமே சீமைத் தக்காளி உபயோகிக்கவும்.
* தக்காளியை விரும்பிச் சாப்பிடுபவர்கள் இருந்தால் துண்டங்களாகப் போடலாம். அல்லாதவர்கள் வீட்டில் மசித்து விட்டால் ரசம் முழுவதும் தக்காளி நிரவி இருக்கும். வீணாகாது. சுவையும் இந்த முறையில் தான் நன்றாக இருக்கும்.
* ரசப் பொடி சேர்த்ததும் அதிக நேரம் கொதிக்க வைக்கக் கூடாது. இதனால் ரச மண்டி உருவாகி விடும். ஓரிரு நிமிடங்களிலேயே கொதிக்க விடாமல் பருப்புத் தண்ணீர் சேர்த்து விட்டால், அடிவரை ரசத்தைக் கலந்தே முழுவதும் உபயோகிக்கலாம்.
* பருப்புத் தண்ணீர் சேர்த்ததும், அடுப்பை மிகக் குறைந்த தீயிலேயே வைக்க வேண்டும். அவசரம் என்று சீக்கிரம் கொதிக்க வைத்தால், நுரை உருவாகாமல் சுவை கெட்டுவிடும்.
* ரசம் பொங்கி மேலே வரும்போது வழிந்துவிடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். ரசத்தின் சுவையே அந்த மேல்ப்பகுதியில் தான் இருக்கிறது. 🙂
* எல்லாவகை ரசத்திற்கும் பெருங்காயம் மற்றும் கொத்தமல்லித் தழையின் வாசம் கூடுதலாக இருந்தால் நன்றாக இருக்கும்.
* பொதுவாக ரசம் ஈயப் பாத்திரத்தில் செய்தால் சுவையாக இருக்கும். ஆனால்….
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
அப்படியே சூப் மாதிரி குடிக்கலாம். சாதத்தில் கலந்து சாப்பிடுவதே வழமையான பாணி; இன்னும்….
வியாழன், பிப்ரவரி 22, 2007 at 10:26 பிப
koodave thirukkanaamudhu-vum irundha romba besha irukkum 🙂
You might be interested in this:
http://srikkanthan.blogspot.com/2005/02/blog-post.html
வெள்ளி, பிப்ரவரி 23, 2007 at 6:52 முப
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்,
நான் quote பண்ணியிருக்கறது பெரியவர் ஸ்ரீகாந்த். நீங்க சிறுவன் இல்ல, அதான் கூடவே திருக்கன்னலமுது கேக்கறீங்க. [நீங்க பாயசத்துல அப்பளம் நொறுக்கி சாப்பிடற கேசா? :)]
தேசிகரோட ஆகாரநியமம் பத்தி பத்ரி ஒரு தடவை குறிப்பிட்டிருக்காரு. ரொம்ப எளிமையா இருக்கும்னு சொல்லி ஏமாத்தியிருக்காருன்னு இப்பத்தான் தெரியுது. அர்த்தம் இருந்தா நல்லா இருக்குமே. தேசிகர் என்னமோ சொல்றாரு; ஆனா என்ன சொல்றாருன்னு தான் தெளிவா தெரியலை. ஆனாலும் உங்க சுட்டிக்கு நன்றி.
புதன், ஒக்ரோபர் 10, 2007 at 7:25 பிப
// “எனக்கு சாத்தமுது மட்டும் இருந்தாலே போதும்; முழுச் சாப்பாடாய் நினைத்து திருப்தியடைவேன்.”
– நாந்தான்.//
நானுந்தான். கூட தொட்டுக்க ஒரு சின்னத் துண்டு நார்த்தங்காயோ இல்லை மாவடுவோ இல்லை சுட்ட அப்பளமோ அட எதும் இல்லை கடைல வாங்கின சிப்ஸ் இருந்தாக் கூட போதும். அம்மா சாதத்தை மசிச்சு நிறைய ரசம் விட்டு நீர்க்கக் கரைச்சுக் கொடுத்தால் இதுல எதுவும் இல்லாமலே கூட உள்ள விட்டுறுவேன் – அவ்ளோ சமத்து நான்…
ஞாயிறு, ஜூன் 26, 2011 at 12:10 பிப
அப்படியே சூப் மாதிரி குடிக்கலாம்.
ஞாயிறு, ஜூன் 26, 2011 at 12:12 பிப
நன்றி.