“எனக்கு பூரி பிடிக்காது!” என்று சொல்பவரை இனிமேல் தான் நான் சந்திக்க வேண்டும்.

puri.JPG

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு – 2 கப்
மெல்லிய ரவை – 4 டீஸ்பூன்
உப்பு, எண்ணை – பொரிப்பதற்கு (தேவையான அளவு)

செய்முறை:

  • கோதுமை மாவு, ரவை, உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் நன்றாகக் கலந்துகொண்டு, சிறிது சிறிதாக நீர் சேர்த்துப் பிசையவும்.
  • இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்தால் தான் திரட்ட முடியும் என்ற பதத்திலேயே இரண்டு டீஸ்பூன் எண்ணை சேர்த்து, ஒட்டாமல் கெட்டியாகப் பிசையவும்.
  • சிறுசிறு உருண்டைகளாக (சிறிய எலுமிச்சை அளவு) உருட்டித் தயாராக வைத்துக் கொண்டு, உருண்டைகள் இருக்கும் பாத்திரத்தை மூடியே வைத்திருக்கவும்.
  • வாணலியில் எண்ணையை மிதமான சூட்டில் காயவைக்கவும்.
  • பூரி உருண்டையை எண்ணையில் தொட்டுக் கொண்டு சின்னச் சின்னதாக இடவும்.
  • இட்டு முடித்ததுமே எண்ணையில் பொரிக்கவும். ஒருபக்கம் வேகும்போதே, கரண்டியால் எண்ணையை மேல்பக்கமும் விட்டால் உப்பி பெரிதாகும். லேசாக எண்ணையில் அழுத்தி பொரியவைக்கவும்.
  • மெதுவாக அடுத்தபக்கமும் திருப்பி, பொன்னிறமாகச் சிவந்ததும், முற்றிலும் எண்ணையை வடித்து எடுக்கவும்.

பூரி சுவையாகவும் சரியாகவும் அமைய:

* சப்பாத்தி மாதிரி இல்லாமல் பூரிக்கு மாவு பிசைந்ததும், உடனே செய்ய ஆரம்பிக்க வேண்டும். பூரிக்கான சப்ஜியையும் தயார் செய்துவிட்டே மாவு பிசைய ஆரம்பிப்பது நல்லது.

* சப்பாத்தியைவிட பூரி மாவு அதிகத் தண்ணீர் பசை இல்லாமல் கெட்டியாக இருக்கவேண்டும். சப்பாத்தி மாவு மாதிரி இருந்தால் அதிகம் எண்ணை குடித்து சொதசொதவென்று ஆகிவிடும். 😦

* ஹோட்டலின் சுவைக்காகவும் மொறுமொறுப்பிற்காகவும் ரவை சேர்க்கிறோம்.

* விரும்புபவர்கள் சோயாமாவு 2 டேபிள்ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம்.

* சிலர் 5 அல்லது 10 பூரிகளை மொத்தமாகச் செய்துவைத்துக் கொண்டு பொரிக்க ஆரம்பிப்பார்கள். அப்படி எல்லாம் காயவிடாமல்
உடனேயே பொரிக்க வேண்டும். அப்போது தான் பூரி உப்பி அழகாக வரும்.

* நான் பார்த்தவரை அநேகம் பேர் செய்யும் பிழை, பூரிகளையும் சப்பாத்தி மாதிரி மெல்லியதாக இட்டுவிடுவது. சற்று தடிமனாக இட்டு இருந்தால் தான் பெரிதாகப் பொரிந்து சுவையாக இருக்கும்.

* அடுப்பை மிகக் குறைந்த தீயில் வைத்தால் கட்டை மாதிரி ஆகிவிடும். மிக அதிகத் தீயில் வைத்தால் மேல்பக்கம் கருகி, உள்ளே சரியாக வேகாமல் இருந்துவிடும். தொடர்ந்து மிதமான சூட்டில் மட்டுமே எண்ணை காய வேண்டும்.

* பூரி இடும்போது சப்பாத்திக்குச் செய்வது போல் மாவு தோய்த்து இடக்கூடாது. இப்படிச் செய்வதால் பொரிக்கும் எண்ணையில், இந்த மாவு பிரிந்துபோய் கருப்பு வண்டலாக அடியில் தங்கிவிடும். அந்த எண்ணையிலேயே அடுத்தடுத்த பூரிகளைப் பொரிக்கும்போது வண்டல் அவற்றின்மேல் ஒட்டிக்கொண்டு, உடல் ஆரோக்யத்திற்குப் பெரும் கேடு. உருண்டைகளை எண்ணை தோய்த்து மட்டுமே இடவும். இதனால், பூரி பொரித்த எண்ணை கடைசிவரை கலங்காமல் இருப்பதை நாமே உணரலாம்.

* பொரித்த எண்ணையை மீண்டும் பொரிக்க உபயோகிக்காமல் இருப்பது நல்லது. அதனால் எண்ணை வைக்கும்போதே, குறைந்த மற்றும் தேவையான அளவு மட்டுமே வாணலியில் எண்ணை வைக்கவும். இதை நான் நேரில் பலரிடமும் வலியுறுத்துவது தான் என்றாலும் இங்கேயும் அப்படியே  இங்கேயும் ஒருமுறை  படிக்கவும்.
 
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

அநேகமாக தமிழ்நாட்டில் பூரி என்றாலே தேங்காய்ச் சட்னி,  உருளைக் கிழங்கு மசாலா அல்லது ச்செனா(channa) தான். இப்போது நிலைமை மாறிவருகிறது. இன்னும் சில சப்ஜிவகைகளும் இனி, சொல்ல நினைக்கிறேன்.