chinna-urulai-kizangu1.JPG

தேவையான பொருள்கள்:

சின்ன உருளைக் கிழங்கு – 1 கிலோ
வெங்காயம் – 4
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை – சிறிது
 

தாளிக்க – 4 டேபிள்ஸ்பூன் எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

chinna-urulai-kizangu-roast.JPG

செய்முறை:

  • உருளைக் கிழங்கை நன்கு கழுவி, குக்கர் உள்பாத்திரத்தில் தண்ணீர் இல்லாமல இரண்டு விசில்வரை வேகவிடவும்.
  • குக்கர் திறந்ததும் கிழங்கை உரிக்கவும். ரொம்பவே அதிகமாகப் பொறுமையைச் சோதிக்கும் கட்டம் இதுவே.
  • கொஞ்சம் பெரியதாக ஓரிரு கிழங்குகள் இடையில் இருந்தால் அவைகளை மட்டும் இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, வெங்காயம் என்ற வரிசையில் எல்லாவற்றையும் பொன்னிறமாகத் தாளித்து, உரித்து வைத்துள்ள உருளைக் கிழங்கையும் சேர்க்கவும்.
  • உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து, நிதானமான தீயில் அடிக்கடி திருப்பிவிட்டுக் கொண்டே அரை மணி நேரம் வதக்கவும். பொன்னிறத்துக்கு மேல் எந்தப் பகுதியும் கருகிவிடாமல் பார்த்துக் கொள்ளவும்.
  • கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

* நான் ஸ்டிக்கில் அவ்வளவாக அலட்டிக் கொள்ளாமல் செய்யலாமே என்று நினைப்பவர்கள்,  அவசியம் செய்யுங்கள். ஆனால் மணிக் கணக்காக வதக்கினாலும், கிழங்கு முறுகலாக ஆகாமல், படுத்தி, போரடிக்கும் என்பதை பின்னர் புரிந்துகொள்ளலாம்.🙂

உருளைக் கிழங்கு ரோஸ்ட் அதிக எண்ணையில்லாமல் செய்ய நினைப்பவர்களுக்கு:

  • உரித்த கிழங்கில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், ஒரு டீஸ்பூன் கடலைமாவு கலந்து பிசிறி அரைமணி நேரம் அல்லது இருந்தால் ஒருமணி நேரம் அப்படியே வைத்துவிடவும்.
  • வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, தாளித்தபின், ஊறிய கிழங்கைச் சேர்த்து ஒரு பத்துநிமிடம் கை விடாமல் கிளறிக் கொண்டே மிதமான சூட்டில் வதக்கவும். எண்ணை அதிகம் இல்லாததால் கொஞ்சம் அலட்சியமாக இருக்க முடியாது என்பதைத் தவிர ருசியாகவே இருக்கும். அப்படி ஒன்றும் உடல் ஆரோக்யத்திற்கு பெரிய பாவம் செய்துவிடவில்லை என்ற நிம்மதியும் கிடைக்கும்.🙂

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

குட்டீஸ் அப்படியே சாப்பிடலாம்.

சாப்பாட்டில் குழம்பு, ரசம், தயிர் என்று எல்லா சாதத்துடனும் சாப்பிடலாம். எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் போன்ற கலந்த சாதங்களுக்கும் உபயோகிக்கலாம்.

சப்பாத்தி, பூரிக்கு உபயோகிப்பதானால், இரண்டு பெரிய தக்காளி, மூன்று பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி, தாளிக்கும்போது சேர்த்துக் கொள்ளவேண்டும். தக்காளியின் நீர்ப்பசை நன்றாக வற்றிய பின்னர்தான் கிழங்கை வாணலியில் போடவேண்டும்.