Lonavala என்ற மலைவாசஸ்தலம் மும்பையிலிருந்து சுமார் 100 கிமீ தூரத்தில், இருக்கிறது.

அது எவ்வளவு பெருமை பெற்றதாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். நமக்குத் தேவையானதை(தின்பண்டம் தான்; வேறென்ன?) மட்டும் நாம் பார்ப்போம். கல்லிடைக்குறிச்சி அப்பளத்திற்கு பெயர் பெற்றதுபோல் இந்த மலைவாசஸ்தலம் சிக்கி(Chikki)க்கு பெயர் பெற்றதாக இருக்கிறது. ஊர் முழுவதும் சிக்கி கடைகள் தான். ஒரிஜினல் வேர்க்கடலை சிக்கி தவிரவும் விதவிதமான வகைகளில்- Coconut chikki, Til Chikki, Kaju Chikki என்று சிக்கி’கள் கிடைக்கின்றன.

இனி…

    chikki.JPG

தேவையான பொருள்கள்:

வேர்க்கடலை – 4 கப்
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை – 3 கப்
அரிசிமாவு – சிறிது

செய்முறை:

  • வேர்க்கடலையை வறுத்து, தோல்நீக்கி, ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
  • ஒரு சுத்தமான பலகை அல்லது சமதளத்தை, அரிசிமாவு தூவித் தயாராக வைக்கவும்.
  • ஒரு வாணலியில், உடைத்த வேர்க்கடலை எவ்வளவு இருக்கிறதோ, அந்த அளவு சர்க்கரையைப் போட்டு சூடாக்கவும். தண்ணீர் சேர்க்கக் கூடாது.
  • அடுப்பை மிக நிதானமாக எரியவிட வேண்டும். சர்க்கரை கருகாமல் பார்த்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் இருக்கும் சர்க்கரையை கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.
  • சர்க்கரை மெதுவாகத் தளர்ந்து, கட்டிக் கட்டியாகி, பின் உருக ஆரம்பிக்கும்போது நெய்யை விடவும்.
  • சர்க்கரை முழுவதும் நன்றாக உருகியதும் உடைத்த கடலையைப் போட்டு, ஒரு கிளறு கிளறி உடனே அடுப்பை அணைத்து, கையோடு மாவு தூவிய பலகையில் கொட்டவும்.
  • அப்பளக் குழவியில் சுற்றிலும் சிறிது நெய் தடவிக் கொண்டு, துரிதமாக அப்பளம் மாதிரி இட்டு, முடிந்தவரை பரத்த வேண்டும்.
  • இனி பரத்த முடியாது என்ற நிலையில், சூட்டோடு கத்தியால் கோடுகள் போட்டு, ஆறியதும் வில்லைகளாக எடுத்துவைக்கவும்.

* சர்க்கரையை உருகவைக்கும் நேரத்தில் மிக நிதானமாக செயல்பட வேண்டும். அடுப்பை சிம்’மில் வைத்து மட்டுமே செய்வது நல்லது. சர்க்கரை கருகினால் கசந்துவிடும்.

* சர்க்கரை உருக ஆரம்பித்ததிலிருந்து, மிகத் துரிதமாக செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் சிக்கியைப் பரத்துவதோ, வில்லைகள் போடுவதோ இயலாமல் சிக்கி கடினப்பட்டுப் போய்விடும்.

-0-

“எனக்கு ஸ்ட்ராபெர்ரி பிடிக்கும்; அதோட விலைதான் பிடிக்காது” என்று எப்பொழுதும் புலம்பிக் கொண்டிருக்கும் என்னைக் கொண்டு போய்  மஹாபலேஷ்வரில் நிறுத்தினால்.

ஊரெங்கும் Strawberry Farms…

    strawberry-farm.JPG

 ஊரில் இறங்கியதுமே பழமாக வாங்கிவைத்துக் கொண்டது போதாது என்று, Ice-Cream, Milkshake, Juice, Crushes என்று கிடைத்ததை எல்லாம் உள்ளே தள்ளியது போதாது என்று நம்ப Mapro Foods  ஃபாக்டரியை ஒட்டி பெரிய விற்பனைத் தளம் வைத்திருக்கிறார்கள். ஊரிலேயே கிடைக்குமென்றாலும் வந்த பெருமைக்கு ஒரு Jamஆவது வாங்கலாம் என்று போனால், We accept Credit Cards என்று போர்டு போட்டுக் கொண்டு விற்றுத் தள்ளுகிறார்கள். அவ்வளவுக்கெல்லாம் இங்கு வாங்க என்ன இருக்கப் போகிறது என்று யோசித்தால், மக்கள் கார்டை தேயோ தேய் என்று தேய்க்கிறார்கள். எனக்கு இந்த இனிப்பு சமாசாரம் எல்லாம் பிடிக்காதென்பதால் நம்மாள் கார்டுக்கு ஒன்றும் பழுதில்லை.🙂 ஆனாலும் என்னவோ ஊரிலிருந்து வந்தபின்னும் ஒரு வாரத்துக்கு “ஸ்ட்ராபெரி வீடேஏஏ…” என்று வீடே மணத்துக் கொண்டிருந்தது.

    strawberry-chikki.JPG

இது என்னவா? அம்மா அப்பா தவிர எல்லாமே ஸ்ட்ராபெரி ஃப்ளேவர்ல கிடைக்கற ஊர்ல… ஸ்ட்ராபெரி சிக்கிதான்.:))))