போகிப் பண்டிகை, பொங்கல், கனுப் பொங்கல் நாள்களில் கிட்டத்தட்ட அனைத்துவிதமான நாட்டுக் காய்கறிகள், பச்சைப் பயறுகளையும் சமையலில் உபயோகித்துவிடுவோம். இப்போது காய்கறிக் கடைகளிலேயே எல்லாவற்றையும் நறுக்கிக் கலந்து தயாராகவும் கிடைக்கிறது. ஆனால் தனித் தனியாக வாங்கிச் செய்தால் நம் விருப்பப்படி தேவையான அளவுகளில் தேவையான நீளத்தில் நறுக்கிச் செய்யலாம்.

 இது கனுப்பொங்கல் நாளில் செய்யப்படும் எளிமையான கனுக் கூட்டு..

தேவையான பொருள்கள்:

அவரைக்காய், கொத்தவரங்காய், பரங்கி, பூசணி, கத்திரி, வெண்டைக்காய், புடலை, சேனை, வாழை, காராமணிக்காய், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பச்சை பட்டாணி, பச்சை மொச்சை, பச்சைக் காராமணி…

புளி – சிறிய எலுமிச்சை அளவு
தேங்காய்த் துருவல் – 1/4 கப்
அரிசி மாவு – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை – சிறிது

தாளிக்க: 
எண்ணை – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
பெருங்காயம் –  1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு –  2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு –  2 டீஸ்பூன்
சீரகம் –  1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 6-8
கறிவேப்பிலை –  சிறிது
 

செய்முறை:

  • காய்கறிகளை மிகப் பெரிதாக இல்லாமல் சுமாரான அளவில் நறுக்கிக் கொள்ளவும்.
  • கடினமான பயறு, காய்கறிகளை தண்ணீர் சேர்க்காமல் குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, தாளிக்க மேலே சொல்லியிருக்கும் பொருள்களை அதே வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வரவும்.
  • பின்னர் கத்திரி, வெண்டை போன்ற மென்மையான காய்கறிகளைச் சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளவும். 
  • உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து காய்களை முக்கால் பதத்திற்கு வேகவைத்துக் கொள்ளவும்.
  • அத்துடன் குக்கரில் வெந்த காய்கறிகளையும், கரைத்து வைத்திருக்கும் புளியையும் கொட்டி, தேவைப்பட்டால் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
  • பச்சை வாசனை போய், காய்கறிகளும் சேர்ந்தாற்போல் வெந்ததும், தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.
  • அரிசிமாவு அல்லது கார்ன்ஃப்ளோர் கரைத்துவிட்டு, கூட்டுப் பதத்தில் இறக்கவும்.
  • நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.

* இதில் எந்த மசாலா சாமான்களோ, மசாலாப் பொடிகளோ சேராமல் காய்கறி, பயறுகளின் சுயமான சுவையே மேலோங்கி இருக்கும் என்பதே இதன் சிறப்பு. முழுக்க நாட்டுக் காய்கறிகளாலேயே நிறைந்திருக்கும் இதில் அதிகமாக, பச்சை மொச்சை மற்றும் பச்சை மிளகாயின் வாசனையே தூக்கலாக இருக்கும்/இருக்க வேண்டும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய், பருப்புடன் கலந்த சாதம்.

Advertisements