“எவஞ்சொன்னது, கமல் மரபைக் கட்டுடைப்பவர்ன்னு?” என்று நான் கேட்கமுடியவில்லை.

வழக்கம்போல் “நான் மரபைப் கட்டுடைப்பவனாக்கும்” என்று மீசைமுறுக்கியிருக்கிறார்.  😦

தீபாவளியன்று விஜய் டிவி “காஃபி வித் அனு”வில் கமல் எழுதி வாசித்தது…

கம்பரே வெண்பா கடினம் என்றுதான் விருத்தம் கையாண்டதான முன்னுரையுடன் “கல்லும் சொல்லாதோ கதை” என்ற ஈற்றடி எடுத்துக் கொடுத்தவர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்கள்.

 

மகதலினா கல்பட்டும் தேறினளாம் அவளக்காள்
அகலிகையும் கால்பட்டு மீண்டனளாம் – இகமிதிலே
அல்லலுறும் நவயுகத்து நாயகியர் அகமகிழக்
கல்லும்சொல் லாதோ கதை.

[*முதல் வார்த்தை இன்னதென்று விளங்கவில்லை. என்  சிற்றறிவை  வைத்துக்கொண்டு அனுமானிக்கவும் முடியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும். (இரா.முருகன் அருளால் கிடைத்துவிட்டது.. நன்றி.) தனிச்சொல் ‘இகமிதிலே’ பேராசிரியரால் பாராட்டப்பட்டது.]

 

ஆத்தமா னார்(அ)யலார் பள்ளிப் பறித்தெடுத்து
மூத்தவர்யா மெனக்கூறி அமர்ந்திருக்கும் சூத்திரத்தைச்
சொல்லின்றிக் கூறிவிடும் பழங்கோயில் கேட்டுப்பார்
கல்லும்சொல் லாதோ கதை.

[“ஆத்தமானார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்..” என்ற திருவாசக அடியிலிருந்து தான் எடுத்தாண்டதாக கமல் கூறினார்.]

 

ம்ம்ம்.. நல்ல முயற்சி. வெண்பா அதிகம் தெரியாமல் ஆனால் ஓசைநயத்திலேயே சரியாக எழுதுபவர் என்று கமலை பேராசிரியர்  அறிமுகப்படுத்தினார். அப்படிப்பட்ட கமல் கொஞ்சம் மோனையிலும் கவனம் செலுத்தியிருக்கலாமோ… (இப்ப ரொம்ப முக்கியம்!)

 

எத்தனை இடங்களில் பிரிக்கமுடியுமோ பிரித்துவிட்டேன்; அத்தனையும் மீறி இத்தனை இடங்களில் தளைதட்டிய ஒன்றை வெண்பா என்று பேராசிரியர் பாராட்டித் தள்ளினார். இவர்கள்தான் கமலின் வளர்ச்சிக்குப் பிரச்சினை.

 

* சமீபமாக புகழ்ச்சிகளில் நெகிழ்கிற கமலைப் பார்க்கக் கவலையாக இருக்கிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் பாராட்டப்படும் சிறுவர்கள்போல் நடந்துகொள்கிறார்.

* தொ.பரமசிவன் என்கிற தொ.ப எழுதிய ‘மனிதர்களின் தெய்வங்கள்’ குறித்து சிலாகித்தார். வாங்கிப் படிக்கவேண்டும்.

* கடவுளை மொத்தமாக மறுக்கும் நாத்திகர்- வெங்கடாஜலபதியிலிருந்து வெக்காளி, இசக்கிவரை- என்று நான் நினைத்துக்கொண்டிருக்க, ‘அவனோட’ சாமியை ‘அவனை’க் கும்பிட அனுமதிக்கவேண்டும் என்றார். பெருந்தெய்வங்களையும் (தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்னு சொல்வாங்க.. ஆனா அவரைப் பார்க்க திருப்பதிக்குதான் வரச்சொல்வாங்க) பெருவழிபாடுகளையும் (தொப்பையில் காலணாவை வைத்து வீட்டுக் கிணற்றிலேயே தூக்கிப்போட்டுவந்த பிள்ளையாருக்கு பிரமாண்டப் பெருவிழா எடுக்கக் கிளம்பியிருப்பது) மட்டுமே புறக்கணித்தார். டிபிகல் இணைய நாத்திகவாதம். ஏமாற்றம்.

* மதம் அவரவர் படுக்கையறைச் சமாசாரம் மாதிரி; அவரவரோடு அந்தரங்கமாக முடிந்துவிட வேண்டியது என்று சொன்னவர், தான் மட்டும் எப்பொழுதும் பொதுவில் அவருக்குகந்த உடையை படுக்கையறையிலேயே  நிறுத்திக்கொள்ளாமல் (கருப்பு; அதுவும் இந்தமுறை படுகேவலமான டிசைனில் இருந்தது.) ஏன் வரவேண்டும்; இவரும் நாத்திகத்தை மனதுக்குள் அந்தரங்கமாக வைத்துக்கொண்டு, வெளியே பொதுவில் வண்ணமயமான ஆடைகளில் வரலாமே என்ற என் ஆதங்கத்திலிருந்து இன்னும் கேட்க/சொல்ல நினைக்கும் பல விஷயங்களைச் சொல்லாமல் விடுவதற்கு என் கமலபிமானம் மட்டுமே காரணம் என்று யாரும் (சரியாகக்) கணக்குப் போடவேண்டாம். தயவுசெய்து என் வழமையான சோம்பேறித்தனம் மட்டுமே காரணம் எனக் கொள்ளவும்.

எச்சரிக்கை: இந்தப் பதிவிற்கு, “உங்காளை முதல்ல அடுத்தவனுக்குப் புரியற மாதிரி பேசச்சொல்லு”, “I am not surprised. கமலுக்கு உளறிக்கிட்டே இருக்கணும்” மாதிரி மறுமொழிகள் [என்மீதான  :))] தனிநபர் தாக்குதலாகக் கருதப்பட்டு கடுமையாக மட்டுறுத்தப்படும். ஏற்கனவே வீட்டில் கேட்டுக்கேட்டு கோபத்தில் கொலைவெறியில் இருக்கிறேன். எரிச்சலில் எக்குத்தப்பாக எங்காவது யந்திரன் படத்திற்கு ஏடாகூட விமர்சனம் எழுதிவிடும் அபாயம் இருப்பதால்…