தேவையான பொருள்கள்:
பச்சரிசி மாவு – 1 கப்
தண்ணீர் – 2 கப்
பச்சை மிளகாய் – 3
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு (சுமார் 1 டீஸ்பூன்)
தேங்காய்த் துருவல் – 1 டேபிள்டீஸ்பூன் (விரும்பினால்)
தேங்காயெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க: தேங்காயெண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை.
செய்முறை:
- பச்சை மிளகாய், உப்பு பெருங்காயத்தை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கப் பச்சரிசி மாவை இரண்டு கப் தண்ணீரில் கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
- கரைசலுடன் 2 டேபிள்ஸ்பூன் தேங்காயெண்ணெய் விட்டு அடுப்பில் வாணலியில் அடிப்பிடிக்காமல் கைவிடாமல் கிளறவும். (நான்ஸ்டிக் வாணலியில் எளிதாகவும் விரைவாகவும் செய்யலாம்.)
- மாவு இறுக ஆரம்பிக்கும்போது அரைத்த விழுதையும் சேர்த்துக் கிளறவும். சுமார் 10 நிமிடத்துக்குள் மாவு வெந்து இறுகி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
- ஆறிய மாவை சுண்டைக்காய் அளவு சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- ஒரு குக்கர் பாத்திரம் அல்லது இட்லிதட்டில் எண்ணெய் தடவி, உருண்டைகளை வைத்து குக்கரில் இட்லிவேக வைப்பதுபோல் வெயிட் போடாமல் ஒரு ஐந்து நிமிடம் மட்டும் வேகவைத்து எடுக்கவும்.
- அடுப்பை அணைத்த உடனே திறந்து மின்விசிறி அடியில் ஆறவிடவும்.
- அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் தாளித்து, மெதுவாக உருண்டைகளைச் சேர்த்து உடையாமல் நாசுக்காகக் கிளறிவிடவும்.
- கொழுக்கட்டைகளைச் சேர்த்தபின் ஒரு நிமிடம் மட்டும் அடுப்பில் வைத்திருந்து கிளறி இறக்கிவிடவும்.
* சூடாகவோ ஆறியோ எப்படிச் சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.
* கொழுக்கட்டை மாவு மிகுந்தாலும் இந்த மாதிரி செய்யலாம். தேவையான பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயம் அரைத்த விழுதை மாவிலேயே நன்கு கலந்துப் பிசைந்து உருண்டைகள் பிடித்து குக்கரில் வேகவைத்து மேலே சொன்னபடி தாளித்துக் கிளறவும்.

ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2009 at 8:23 பிற்பகல்
நன்றாக இருக்கிறது. ஊர் டிபனெல்லாம் நன்றாகத் தேடித்தேடி பண்ணுகிறீர்கள் என்று நினைக்கிறேன். குஜராத்தி ஐடங்களை கொஞ்சம் நிறுத்திக்கொண்டு…
ரொம்ப நாள் கழித்து வெங்காயம் இல்லாமல் ஒன்று. நல்லதுதான்.!!
ஆமாம், இதற்கு ஏன் அம்மணி கொழக்கட்டை என்று பேர்?
புதன் கிழமை, ஏப்ரல் 1, 2009 at 12:22 பிற்பகல்
ஹலோ ஜெய்
இதுல பச்ச மிளகாய்க்கு பதில் மிளகாய்ப்பொடியும் போடலாமா??
புதன் கிழமை, ஏப்ரல் 1, 2009 at 12:41 பிற்பகல்
சொல்மண்டி: என்னுடைய பல பதிவுகள் வெங்காயம் இல்லாமல்தானே இருக்கும். ‘அம்மணி’ன்னா சிறியன்னு டைரில அர்த்தம் போட்டிருக்கு. ஆனா அகராதில அப்படி ஒரு அர்த்தம் இல்லை. வேணா நாம அம்’மினி’க் கொழுக்கட்டைன்னு தமிழ்ல பேர் வெச்சுடலாம்.
srilatha: இதுக்கெல்லாம் சட்டம் போட்டு தண்டிக்கவா முடியும்? சொன்னாதான் நீங்க கேப்பீங்களா? என்னமோ செய்ங்க. பொதுவா பச்சை மிளகாய்தான் நல்லா இருக்கும். மிளகாய்ப்பொடி நிறமும் சுவையும் மாறும்.
புதன் கிழமை, ஏப்ரல் 1, 2009 at 3:59 பிற்பகல்
Vanthitihala aaththa… remba santhosam…
Ammini kozhukattai padam paakumbodhey saaptalam bola irukku. Indha sunday, senju pakkanum.
வெள்ளிக்கிழமை, ஜூலை 17, 2009 at 9:18 மு.பகல்
[...] படித்துக் கொண்டு இருக்கும் போது, இந்த ரெசிபி கண்ணில் மாட்டியது. நல்லா இருக்கறா [...]
வெள்ளிக்கிழமை, ஜூலை 17, 2009 at 9:22 மு.பகல்
உங்க ரெசிபி எங்க வீட்டில எப்படி பிரயோஜனமாச்சு என்று என்னோட அனுபவத்தை எழுதி இருக்கேன்.. படிச்சு பாருங்க, ஃபீரியா இருக்கும் போது:
http://akhilnjaya.wordpress.com/2009/07/17/kovamaa-edu-kozhukkataiyai/
ஜெயா.