திங்கட் கிழமை, மார்ச் 17, 2008
கேரட் அல்வா
Posted by Jayashree Govindarajan under அல்வா, இனிப்பு வகை, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள்தேவையான பொருள்கள்:
கேரட் - 1/2 கிலோ (துருவல் - 4 கப்)
பால் - 1 லிட்டர்
சர்க்கரை - 3 முதல் 4 கப்
நெய் - 1/2 கப்
கோவா - 100 கிராம் (விரும்பினால்)
ஏலப்பொடி
குங்குமப்பூ
வெள்ளரி விதை
முந்திரிப் பருப்பு
செய்முறை:
- அல்வா செய்ய, சிவப்பாக இருக்கும் டில்லி கேரட் மிகவும் ஏற்றது. கேரட்டை நன்கு கழுவி, சிறிய அளவுத் துருவியில் துருவிக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியில் (நான்-ஸ்டிக் விரைவாகவும் சுலபமாகவும் வரும்) ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் கேரட்டை லேசாக வதக்கி, பால் சேர்த்து நிதானமான சூட்டில் கொதிக்கவிடவும். அடிக்கடி கிளறிவிட்டுக் கொண்டே இருக்கவும்.
- பால் சேர்ந்துவரும்போது, சர்க்கரை சேர்த்துக் கிளற ஆரம்பிக்கவும். மேலும் இளகி, மீண்டும் இறுக ஆரம்பிக்கும்.
- விரும்பினால் இந்தப் பதத்தில் கோவா சேர்த்துக் கொள்ளவும்.
- இறுதியில் சிறிது சிறிதாக நெய்யைச் சேர்த்து ஒட்டாமல் வரும்போது ஏலப்பொடி, குங்குமப்பூ கலந்து இறக்கவும்.
- வெள்ளரி விதை, நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு இரண்டில் ஒன்றோ இரண்டுமோ சேர்க்கலாம்.
* முழுவதும் பால் உபயோகிக்காமல் கன்டென்ஸ்ட் மில்க் உபயோகிக்கலாம். அரை கப் பால் விட்டு முதலில் கேரட்டை நன்கு பச்சைவாசனை போக வேகவைத்துக் கொண்டு கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்துக் கிளற ஆரம்பிக்கலாம். அதில் சர்க்கரை சேர்த்திருந்தால் நாம் பாதி சர்க்கரை அல்லது அதைவிடக் குறைவாகச் சேர்த்தால் போதும்.
* சிலர் குக்கரில் பாலுடன் கேரட்டை வேகவைக்கிறார்கள். சுலபம். ஆனால் எனக்குப் பிடிக்கவில்லை. துருவிய கேரட் வாணலியிலேயே சீக்கிரம் வெந்துவிடும்.
* கேரட்டைத் துருவது ஒரு பொறுமையைச் சோதிக்கும் வேலை. சிலர் அதற்காக மிக்ஸியில் அரைத்துச் செய்கிறார்கள். எனக்கு அதன் இறுதிவடிவம் பிடிக்கவில்லை. அதற்குப் பதில் நல்ல இசையைக் கேட்டுக்கொண்டு கொஞ்சம் மெனக்கெட்டு துருவி விடலாம்.
* ஆரஞ்சு கலர் கேரட்டிலும் செய்யலாம். சுவை சுமார் தான். சர்க்கரை சிறிது அதிகம் சேர்க்கவேண்டும். விரும்பினால் கலர் சேர்த்துக் கொள்ளலாம்.
* திருமணம் மாதிரி பெரிய விசேஷங்களில் பரிசாரகர்கள் இரண்டு டேபிள்ஸ்பூன் கடலைமாவையும் நெய்யில் வறுத்து, சேர்த்துக் கிளறுகிறார்கள். இது கேரட்டை பெரிய அளவில் துருவினாலும், அல்வா சேர்ந்தாற்போல் வருவதற்கும், அளவு அதிகம் காண்பதற்கும் உதவும்.
* ஒரு விசேஷத்தில் முந்திரியுடன் கிஸ்மிஸ் பொரித்துச் சேர்த்திருந்தார்கள். அல்வா என்று சொல்லிவிட்டு அதில் கிஸ்மிஸ் சேர்த்து அதை கேசரி லெவலுக்கு இறக்குவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.



திங்கட் கிழமை, மார்ச் 17, 2008 at 12:35 பிற்பகல்
இங்கே பெங்களூரில் டைகர் ட்ரயல் என்றொரு ரெஸ்டோரண்ட் இருக்கிறது, கேரட் அல்வா பிரம்மாதமாகயிருக்கும்.
ஆனால் நியூட்ரீஷியன் சொன்ன சாப்பிடக்கூடாத ஐட்டங்களில் முதல் இடம் கேரட் அல்வாவிற்கே.
//அதற்குப் பதில் நல்ல இசையைக் கேட்டுக்கொண்டு கொஞ்சம் மெனக்கெட்டு துருவி விடலாம்.//
எங்க சித்தி மீன் குழம்பு செய்யும் பொழுது நான் தான் திருவித் தருவேன். சில சமயம் மூன்று நான்கு மூடிகள், அரை மூடி என் கமிஷன்.
திங்கட் கிழமை, மார்ச் 17, 2008 at 12:54 பிற்பகல்
கேள்வியை அடக்க முடியலை. 4 மூடி தேங்காய்(தேங்காயா, கேரட்டா?) மீன்குழம்புக்கேவா? அப்ப அது தேங்காய்க் குழம்பில்லையோ? ஒன்னும் புரியலை.
திங்கட் கிழமை, மார்ச் 17, 2008 at 12:58 பிற்பகல்
நான் சொன்னது தேங்காய் தான்!
//அப்ப அது தேங்காய்க் குழம்பில்லையோ? //
இல்லை சனி ஞாயிறுகளில் ஒரு கும்பலாக பதினைந்து பேருக்கு சமைக்கிறதுண்டு. அது போன்ற சமயங்களில்…
திங்கட் கிழமை, மார்ச் 17, 2008 at 1:40 பிற்பகல்
கேரட் 4 கப், சர்க்கரை 4 கப் அப்படியானால் இது கேரட் அல்வாவா சர்க்கரை அல்வாவா என குந்தவையின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்த வேண்டுகிறேன்.
திங்கட் கிழமை, மார்ச் 17, 2008 at 5:44 பிற்பகல்
//நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்//
nice. as like the sweet.
திங்கட் கிழமை, மார்ச் 17, 2008 at 6:52 பிற்பகல்
தூள் கிளப்பிக்கிட்டு இருக்காங்க இங்க. நான் பார்க்காம போனேனே.
சரி காரட் அல்வாவைப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கறேன்.
ரொம்ப நல்ல இருக்கும்மா.
செவ்வாய்க் கிழமை, மார்ச் 18, 2008 at 5:11 பிற்பகல்
Jally samayal
செவ்வாய்க் கிழமை, மார்ச் 18, 2008 at 7:56 பிற்பகல்
Hai Jash,
Carrot halva is very nice. I made today for summer vacation first special i made this sweet. so write more receipy.Rk
புதன் கிழமை, மார்ச் 19, 2008 at 12:02 பிற்பகல்
மோகன்தாஸ் தம்பி, எனக்கும் இந்தமாதிரி 15, 20 பேருக்கு சமைக்க எல்லாம் பிடிக்கும். கொஞ்சம் வீசி செய்யும்போது சுவையும் அபாரமா இருக்கும். சின்ன குத்தடுக்குல செய்யும்போதுதான் ரொம்ப யோசிக்கவேண்டியிருக்கு.
ப்ரசன்னா, நல்ல முயற்சி. இதுக்குதான் ஒரு பங்கு அல்லது அதுக்கும் கீழ சர்க்கரை. மத்ததுக்கெல்லாம் அதைவிட அதிகமாத்தான் இருக்கும். குந்தவை மேல என்ன கோபம், அவருக்கு எதிரா ஆதரவாளர்களைத் தூண்டிவிடறீங்க?
ramakannan, Adiya, நன்றி.
ரேவதிநரசிம்மன், சும்மா பெருமூச்செல்லாம் விடாதீங்க. கொஞ்சம் நெய் குறைச்சு போட்டுகூட செய்யலாம்.
chitrasethuraman, சமையல் ஜல்லியா இருக்குன்னா சொல்றீங்க?