குழம்பு வகைகளில் முதலில் இதைத்தான் சொல்லியிருக்க வேண்டும். விட்டுப் போய்விட்டது.
சாம்பார்ப் பொடி தயாராக இருந்தால் போதும். அரைச்சல்ஸ் வேலைகள் இல்லாமல் விரைவில் தயாரித்துவிடலாம். அதிகம் மசாலா இல்லாததால் பிரச்சினை இல்லாதது. நாட்டுக் காய்கறிகளில் செய்யவும், தினசரி சமையலுக்கும் மிகவும் ஏற்றது. வீட்டுச் சாப்பாடு என்பதற்கான முக்கியக் குறியீடு பருப்புக் குழம்பு.
தேவையான பொருள்கள்:
புளி – எலுமிச்சை அளவு
வாழைத் தண்டு – ஒரு சாண் நீளம்
துவரம் பருப்பு – 3/4 கப்
சாம்பார்ப் பொடி – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
கொத்தமல்லித் தழை
தாளிக்க: எண்ணெய், உளுத்தம் பருப்பு, வெந்தயம் (விரும்பினால்), சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.
செய்முறை:
-
துவரம் பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்.
-
வாழைத் தண்டை நார் நீக்கி, வட்டவட்ட துண்டுகளாகவோ, சற்றே அகலமாக இருந்தால் அரைவட்ட துண்டுகளாகவோ நறுக்கி, (கருக்காமல் இருக்க) மோர் கலந்த நீரில் போட்டுக் கொள்ளவும்.
-
அடுப்பில் வாணலியில் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
-
மோர்நீரை வடித்து, நறுக்கிய வாழைத் தண்டு துண்டங்கள், உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு மூடி வேக வைக்கவும்.
-
அந்த நேரத்திற்குள் புளியை வெந்நீரில் ஊறவைத்து, நீர்க்கக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
-
அரைப்பதம் வெந்த காயுடன், புளி, மஞ்சள் தூள், சாம்பார்ப் பொடி சேர்த்துக் கொதிக்க விடவும்.
-
பச்சை வாசனை போனதும், வேக வைத்த பருப்பைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.
-
நறுக்கிய மல்லித் தழை தூவி உபயோகிக்கவும்.
* இந்த முறையில் பூசணி, கத்தரி, வெண்டை, கொத்தவரங்காய், பரங்கி, அவரை, முருங்கை என்று நாட்டுக் காய்கறிகள் எல்லாவற்றிலும் செய்யலாம். அனைத்துக் குழம்பும் எந்தக் காயை உபயோகிக்கிறோமோ, அதற்கான பிரத்யேகமான சுவையோடும் மணத்தோடும் இருக்கும்.
* கத்தரி வெண்டை போன்ற காய்களை முதல் ஐந்து நிமிடங்கள் வேகவைக்கத் தேவை இல்லை. தாளித்ததும் சிறிது வதக்கி, நேரடியாக புளிநீரைச் சேர்க்கலாம்.
* அவரை போன்ற காய்களுக்குப் பொருத்தமாக பச்சை மொச்சை போன்ற பயறுகளும் சேர்ப்பதால் அதிக மணத்தைக் கொடுக்கும்.
* காய்களுக்குப் பதில் கீரை வகைகளையும் பொடியாக நறுக்கி, வதக்கி குழம்பில் சேர்க்கலாம்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
நெய் சாதம், இட்லி, தோசை, பொங்கல், உப்புமா (முக்கியமாக ரவை, அரிசி உப்புமா),…..
குழம்பில் இருக்கும் காய் தயிர்/மோர் சாதத்திற்கு மிகவும் பொருத்தமானது. குழம்பு ரசம் சாதங்களுக்கு வேறு கறி/கூட்டு உபயோகித்து தயிருக்கு ஊறுகாயை நாடும் வேளையில் ஊறுகாயை ஓரம்கட்ட/ ஒழிக்க குழம்பின் தான்(காய்) மிக முக்கியமானது. தனிப்பட்ட முறையில் எனக்குப் பிடித்தவை வாழைத் தண்டு, பூசணி, அவரை, கீரைத் தண்டு.
[மீனாட்சி தண்டு என்று மரம் மாதிரி ஒரு கீரைத் தண்டு கிடைக்கும். அதன் கீரை வேலைக்காகாது. தண்டை வட்டமான வில்லைகளாக நறுக்கி கூட்டு செய்வதும் இந்தக் குழம்பில் போடுவதும் எனக்குப் பிடிக்கும்.]

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 28, 2007 at 11:21 பிற்பகல்
சாம்பாருக்கும் இந்த குழம்புக்கும் என்ன வித்தியாசம்? (எப்போ எதை சேர்க்கிறதுங்கிற வரிசை மாறியிருக்கே தவிர)
சனிக்கிழமை, டிசம்பர் 29, 2007 at 9:56 மு.பகல்
சாம்பாரில் கொத்தமல்லித் தழையைத் தூவிப் பரிமாறுபவர்களுக்குத் தூக்குத் தண்டனை தரவேண்டுமென்பது என் உறுதியான எண்ணம்.
சனிக்கிழமை, டிசம்பர் 29, 2007 at 10:31 மு.பகல்
பிரேமலதா, என்ன இப்படி கேட்டுட்டீங்க? செய்முறைல இதுக்கு தேங்காய், தனியா எல்லாம் தனியா அரைச்சுவிடறதில்லை. சாம்பார் ஹோட்டல்கள்ல கிடைக்கும். பருப்புக் குழம்பு தான் வீட்டுச் சாப்பாட்டோட முக்கிய குறியீடு. இதை பதிவுலயே சேர்க்க விட்டுட்டேன். இப்ப சேர்த்துட்டேன். அன்றாட சமையல்ல மசாலா குறைவா அசிடிடி வராம இருக்க உதவும். உங்களுக்கு கரண்ட் கட்னா என்னன்னு தெரியுமா?
சனிக்கிழமை, டிசம்பர் 29, 2007 at 10:48 மு.பகல்
சாம்பார்ல கொத்தமல்லித் தழை தூவறதோட இல்லை, உள்ளயும் அரைச்சு விடுவோம். என் சாம்பார் பதிவுகள் படிச்சதில்லையா?
)
சாம்பார்ல வெல்லம் போடறவங்களை பசிக்காத புலிக்கு தின்னக் கொடுக்கணும்னுங்கறது எனக்கும் உறுதியான எண்ணம்.
சனிக்கிழமை, டிசம்பர் 29, 2007 at 1:46 பிற்பகல்
2007 ஆம் ஆண்டின் சிறந்த உள்குத்தாக இதை அறிவிக்கிறேன்
))))
“சாம்பார்ல வெல்லம் போடறவங்களை பசிக்காத புலிக்கு தின்னக் கொடுக்கணும்னுங்கறது எனக்கும் உறுதியான எண்ணம்.”"
அன்புடன்
ச.திருமலை
சனிக்கிழமை, டிசம்பர் 29, 2007 at 3:41 பிற்பகல்
எனக்கு சமையலில் இதுமாதிரி எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க் சேர்ப்பதே பிடிக்காது. என் அத்தை நன்றாகச் சமைத்துவிட்டு, கட்டக்கடைசியில் எதாவது செய்துவைப்பாள். நன்றாக அவியல் செய்துவிட்டு, ‘ரெண்டே ரெண்டு பல்லு இஞ்சி வெச்சி அரச்சேன், சீக்கிரம் செரிக்கும்’ என்பாள். மோர்க்குழம்பில் தக்காளி சேர்த்து அரைப்பாள். எல்லா காயும் சாம்பாருக்கு போட்டுவிட்டு, மீந்து கிடக்குதேன்னு ரெண்டு வாழக்காயும் போட்டேன் என்பாள். (வாழக்கா கொளம்பும் வாழவெட்டிப் பொண்ணும் என்பது சொலவடையாம்.) எனக்கு செம கடுப்பாகும். ஆனால் பரிமாறும்போதே (எங்க வீட்டிலே இனிமே எல்லா இமெயில்தான் பெண்போன்ற முகமலர்ச்சியுடன்), ஹரி நல்லா இருக்குல்ல என்று ஆர்வமாகக் கேட்பாள். வேற என்ன சொல்ல? செம சூப்பர் என்பேன். அண்ணனுக்குப் பிடிக்குமே என்று நினைத்துக்கொண்டு, மறக்காமல் என் தங்கை அதே போன்ற உணவைத் திரும்பச் செய்து திட்டு வாங்கிக்கொள்வாள். இந்த ஃபிட்டிங் விஷயத்தில் சாம்பாரில் கொத்தமல்லித் தழையும் நாசமா போன வெல்லமும் சேர்த்தி.
மடங்களில் சாப்பிடப் போனால் புளியை விட வெல்லம் அதிகம் பயன்படுத்துவார்கள். எத்தனை சொன்னாலும் மாறமாட்டார்கள். கடவுள் நம்பிக்கையே அப்போதே விட்டுவிடலாமா என்றெல்லாம் கோவம் வரும், அவ்ளோ இனிப்பு இருக்கும்!
எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் இல்லாம சமைக்கப் பழகவும் மனிதர்களே.
சனிக்கிழமை, டிசம்பர் 29, 2007 at 10:07 பிற்பகல்
புது வருஷத்தில், ‘தாளிக்கும் ஓசையின்’ roadmap-ல் international cuisine items எல்லாம் இடம் பெற்றிருக்கிறதா?
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 30, 2007 at 8:22 பிற்பகல்
//சாம்பார்ல வெல்லம் போடறவங்களை பசிக்காத புலிக்கு தின்னக் கொடுக்கணும்னுங்கறது எனக்கும் உறுதியான எண்ணம்.//
இந்த விஷயத்தில் நான் வாத்தியார் கட்சி
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 30, 2007 at 11:51 பிற்பகல்
புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜெயஸ்ரீ. நேரப்பற்றாக்குறை… அப்பறமா விலாவாரியா ரிப்ளை பண்றேன்.
திங்கட் கிழமை, டிசம்பர் 31, 2007 at 12:26 பிற்பகல்
ஸ்ரீகாந்த், ரொம்பத்தான்.
நீங்க ஏதாவது குறிப்பு அனுப்பினா அதை ஏத்தறதுல ஆட்சேபணை இல்லை.
மோகனா, உங்க வாத்தியார் இதுக்கெல்லாம் வேற கட்சி கட்டியிருக்காரா? பெங்களூர்ல ரொம்ப நாள் இருந்ததோட பாதிப்பா இருக்கும். என்ன சொல்லியிருக்கார்னு எனக்கும் சொல்லுங்க. அவரோட சண்டை போட்டு ரொம்ப நாள் ஆச்சு.
சொக்காயி, புத்தாண்டு வாழ்த்துகள். குழம்பு குறித்து குழம்பாம தெளிவா ஏதோ கருத்து வெச்சிருக்கீங்க போல. அப்பறமா விலாவாரியாவே வாங்க.
திங்கட் கிழமை, டிசம்பர் 31, 2007 at 12:28 பிற்பகல்
திருமலை, உள் என்ன பகிரங்கமா வெளிக்குத்தே விட்டாலும் எதுவுமே தனக்கு சம்பந்தமில்லாத மாதிரி ஒரு கதை சொல்வாங்கன்னு எதிர்பார்த்தேன். அதே நடந்தது.
ப்ரசன்னா, அதெல்லாம் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ்னு நீங்க யார் சொல்றதுக்கு? சாம்பாராட improved version. வெல்லம் போட்டா ஓடிப்போற அளவுக்கு இது சாதாரண கோயில்/ மட/ உம்மாச்சிப் பிரச்சினை இல்லை. எங்க வாழ்வாதாரப் பிரச்சினை. இங்க அவசரத்துக்கு நல்ல ஹோட்டல்களுக்குப் போகணும்னா, ஒன்னு ஏதாவது வட இந்திய ஹோட்டல்கள் சாம்பாரெல்லாம் அவங்களுக்கு சுட்டுப் போட்டாலும் வராது. அங்க போய் கெத்தா “we see only English pictures” தோரணைல “We eat only tandoori”. அல்லது ஒரேயடியா மங்களூர்காரங்க ஹோட்டல் வெல்லச் சாம்பார். அதுக்கு பட்டினியே மேல். என் சம்சாரம் வெக்கற சாம்பாரே சாம்பார்னு ரங்கமணி சொல்றது தங்கமணிகளுக்கு வரமில்லை, சாபம்.
அப்றம் உங்க அத்தைக்கு என் வணக்கங்களையும் உங்க தங்கைக்கு என் வாழ்த்தையும் சொல்லிடுங்க. இவங்க எல்லாம் இருக்கறதாலதான் நாட்டுல மழை பெய்யுது.
திங்கட் கிழமை, டிசம்பர் 31, 2007 at 2:13 பிற்பகல்
எனக்கு எது எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்னு நாந்தான் தீர்மானிப்பேன். நீங்களா?
அவரவர் எக்ஸ்ட்ராஃபிட்டிங்குகள் அவரவர்க்குன்னு கவிதை எழுதற அளவுக்கு கொலைவெறிய தூண்டாதீங்க. அஷ்டே.
திங்கட் கிழமை, டிசம்பர் 31, 2007 at 2:27 பிற்பகல்
அதெல்லாம் கவிதை எழுதிகிட்டு அந்தப் பக்கம் போனா நாங்க என்ன சொல்லப் போறோம்? மத்தபடி உங்களுக்கு என்ன தின்னக் கொடுக்கணும், பசிக்காத புலிக்கு யாரைத் திங்கக் கொடுக்கணும்னு நாங்களும் தீர்மானிப்போம். யார் கேக்க முடியும்?
திங்கட் கிழமை, டிசம்பர் 31, 2007 at 9:17 பிற்பகல்
அக்கா பிரம்மாதமாய் ஒன்றும் இல்லை, வாத்தி அடிக்கடி பசித்த புலியை இழுத்துப் போட்டு சாப்பாடு போடுவார் நான் அதைத்தான் சொல்ல வந்தேன்
ஏனென்றால் வெல்லம் போட்ட சாம்பார் என் பெங்களூரு வாழ்க்கையை கடித்துக்குதறியிருக்கிறது அதனால் தான்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு புத்தாண்டு மேன்மைகளை கொண்டு வரட்டும்.
திங்கட் கிழமை, டிசம்பர் 31, 2007 at 9:48 பிற்பகல்
ஜெயஸ்ரீ,
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஆந்திர நாட்டில், புலுசு என்றது மிகவும் சுவையான (வெல்லம் சேர்ந்த) நெகிழமுதாக்கும்..
இது ரசமுக்கும் சம்பார்ருக்கும் இடைப்பட்டது. பருப்பு இதில் கலக்கமட்டா.
கீரை தண்டு அல்லது தோசைகாய் அல்லது பூசணி தான் காயாக உபயோகிப்பா.
ஆனால் வெறும் பருப்பில் (தனியாக செய்து), நெய்யுடன் சேர்த்து உண்ணுவார்கள்.
ஆந்திராவில் கோங்கூராவய் விட புலுசு மிகவும் பிரசித்தி.
-கிருஷ்ணா
செவ்வாய்க் கிழமை, ஜனவரி 1, 2008 at 1:10 பிற்பகல்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஜெயஸ்ரீ. !
புதன் கிழமை, ஜனவரி 2, 2008 at 12:00 மு.பகல்
இந்தப் புத்தாண்டில் உங்களுக்கு “இணைய மரபிலக்கண மாதா” என்ற பட்டம் வழங்கப்பட்டிருப்பதை அறிந்தீர்களா?
பட்டம் கொடுத்த பெருமை அடியேனுடையது என்பதை வரலாறு கவனமாக வழக்கம்போல மறந்துவிடும் என்பதால் நானே பதிந்தும் வைக்கிறேன்.
– பி.கே. சிவகுமார்
வியாழன், ஜனவரி 3, 2008 at 7:29 மு.பகல்
ஜெயஸ்ரீ,
உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
வெள்ளிக்கிழமை, ஜனவரி 4, 2008 at 12:55 பிற்பகல்
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
ஜெயஸ்ரீ, Uma kumar நன்றி.
மோகன், உங்க வாத்தியார் பேரன்பும் பெருங்கருணையும் கொண்டவர். அதனால எல்லாரையும் பசிச்ச புலிக்கு தின்னக் கொடுப்பார். நான் அப்படி இல்லை. என்னோட சாய்ஸ், பசிக்காத, பொழுதுபோகாத, கையாலாகாத, கிழப் புலி தான்.
பிகேஎஸ், இது மரபிலக்கியக்காரங்களுக்கு தெரியுமா? நல்ல வரலாறு போங்க!
krishna, நீங்க சொன்னீங்களேன்னு நானும் 4 ஆந்திரமாநிலத்தவரைக் கேட்டுட்டேன். எல்லாரும் நாம செய்ற சாதா சாம்பாருக்குத்தான் புலுசுன்னு தெலுங்குல பேருன்னு சொல்றாங்க. விருந்துகள்லயும் கவனிச்சிருக்கேன், ‘புலுசு தீஸ்கோரா’ மாதிரி பேச்செல்லாம் நம்ப சாம்பாரைத்தான் சொல்வாங்க. ரெண்டு பேர், “நாங்க புளியும் மிளகாயும் அதிகம் சேர்த்தாலும் சேர்ப்போமே தவிர வெல்லாம் எல்லாம் போடமாட்டோம்”னு கடுப்பே ஆயிட்டாங்க. நாலுபேரும் ஒன்னா சொன்ன விஷயம் புலுசுலயும் கொத்தமல்லி நிறைய சேர்ப்பாங்களாம். எதுக்கும் இன்னொரு நம்பத்தகுந்த பார்ட்டி இருக்காங்க; அவங்ககிட்ட கேட்டுச் சொல்றேன். உங்களுக்கும் அப்படி ஏதாவது குறிப்பு கிடைச்சா சொல்லுங்க. சிலர் நம்பவீட்டுக்கு வந்தா செஞ்சுபோட வசதியா இருக்கும்.
வெள்ளிக்கிழமை, ஜனவரி 4, 2008 at 2:43 பிற்பகல்
//எங்க வாழ்வாதாரப் பிரச்சினை. இங்க அவசரத்துக்கு நல்ல ஹோட்டல்களுக்குப் போகணும்னா, ஒன்னு ஏதாவது வட இந்திய ஹோட்டல்கள் சாம்பாரெல்லாம் அவங்களுக்கு சுட்டுப் போட்டாலும் வராது//
இந்த வாழ்வாதாரப் பிரச்னை எனக்கும் இருக்குது.
சர்ச்கேட் முதல் விரார் வரைக்கும் எல்லா ஹோட்டல்லயும், ஏதோ வெல்லம் போட்டாத்தான் சாம்பாரோட மேனுஃபக்சரிங்கே முழுமையாகும்கிற அசைக்கமுடியாத நம்பிக்கையில மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்.
இவனுங்களையெல்லாம் சரவணபவனுக்கும்,வசந்தபவனுக்கும் கூட்டிட்டுப் போய் “இதாண்டா ஒரிஜினல் சாம்பார்” நல்லா டேஸ்ட் பண்ணிப் பாருங்கன்னு சொல்ல ஆவேசம் வருது.
புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜெயஸ்ரீ.
வெள்ளிக்கிழமை, ஜனவரி 4, 2008 at 7:04 பிற்பகல்
சாம்பார் பற்றி பேசும்போது “சாம்பார் வடை” இல்லாமலா
சமீபத்துல பாத்த ஒரு கொடுமை – எம்.டி.ஆர். இன்ஸ்டண்ட் “மெட்ராஸ் சாம்பார் பொடி” பாக்கெட்டுலயும் வெல்லம் சேக்கச் சொல்லி ரெசிபி. தமிழர்கள் சாம்பாரில் வெல்லம் சேர்க்கமாட்டார்கள் என்று தெரிந்தும் ரெசிபியில் கன்னட முறையை புகுத்தும் வெளிக்குத்து இது.
http://www.mtrfoods.com/masalapowders/madrassambarpowder.htm
Cook 350g of vegetables of your choice. Keep aside.
Cook 75g of Toor dal in 1 ltr of water, with 1 tsp refined veg oil and a pinch of turmeric.
Add cooked vegetables, tamarind juice and salt to taste
Add 3-4 tbsp MTR Sambar powder and a little jaggery if desired. Boil for 8-10 min.
Top with 1 tsp of mustard seeds and curry eaves fried in a little oil.
Garnish with finely chopped coriander leaves. Serve with rice, dosa or idli.
திங்கட் கிழமை, ஜனவரி 7, 2008 at 5:22 பிற்பகல்
பிரகாஷ், அவங்க அதெல்லாம் தெரியாமலா இருக்காங்கன்னு நினைக்கிறீங்க? வாழ்த்துகளுக்கு நன்றி.
Sambar Vadai, இந்த அநியாயத்தை நீங்கதான் தட்டிக் கேக்கணும்.
உண்மையிலேயே ஒருதடவை சாம்பார்வடையும் ஆர்டர் செஞ்சு, மொத்த உணவும் பாழாயிடுச்சு. [வடையும் சாம்பார் சட்னியும் தனித்தனியா இருந்திருந்தா வடையை மட்டுமாவது அனுபவிச்சிருக்கலாம்.
] கொத்தமல்லி சேர்க்கணும்னு எடுத்துச் சொன்னதுக்கு நன்னி.
சனிக்கிழமை, ஏப்ரல் 19, 2008 at 10:35 பிற்பகல்
[...] Vazhai Thandu Kulambu (Banana stem Kuzhambu) from My Kitchen Pitch [...]