இந்தப் பெயரைக் கேட்டாலே சலிப்பில் ஓடிவிடும் அளவுக்கு கோவையில் இருந்த போது இது வீடு நிறைந்து இருக்கும். ஒவ்வொரு முறையும் கடையில் சிரத்தையாக, “‘மைசூர்பாகு’ன்னு சொல்லாதீங்க, ‘மைசூர்பா’ன்னு சொல்லுங்க” என்று திருத்துவார்கள். அப்போது பல ஊர்களில் கிடைக்காமல் இருந்ததால் வெளியூரில் யார் வீட்டுக்குப் போனாலும் சாய்ஸே இல்லாமல் இதை மட்டுமே வாங்கிப் போகவேண்டி இருந்தது. ஆனால் மிகச் சுலபமாகச் செய்யக் கூடிய ஒரு இனிப்பு இந்த மைசூர்பா தான். பல வருடங்களாக, கடையில் வாங்குவதையே நிறுத்திவிட்டேன்.
தேவையான பொருள்கள்:
கடலை மாவு – 1 கப்
சர்க்கரை – 2 1/2 கப்
நெய் – 2 1/2 கப்
செய்முறை:
- கடலை மாவை நன்கு சலித்து, மிக லேசாக 2, 3 நிமிடங்கள் மட்டும் வறட்டு வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.
- நெய்யை லேசான தீயில் நன்றாக உருக்கி வைத்துக் கொள்ளவும்.
- சர்க்கரையை சிறிது நீர் சேர்த்து, அடுப்பில் சிம்மில் வைத்து, முழுவதையும் கரைய விடவும். கரைவதற்கு முன் சூடு அதிகமானல் பாகு ஆகிவிடலாம். அதனால் தீயை மிகக் குறைந்த அளவிலேயே வைத்து முழுமையாகக் கரைக்க வேண்டும்.
- சர்க்கரை கரைந்ததும், கடலைமாவை சிறிது சிறிதாகச் சேர்த்துக் கட்டிகளில்லாமல் கலந்து கொள்ளவும். சலித்து வறுத்திருப்பதால் பெரிய பிரச்சினை ஆகாமல் கலந்துவிடும்.
- மாவு கலந்து கொதிக்கத் தொடங்கியதும், நெய்யை நான்கைந்து பாகங்களாக தவணை முறையில் இறுக இறுக சேர்த்துக் கிளறவும்.
- கடைசியில் எல்லா நெய்யும் சேர்த்தபின், கிளறிக்கொண்டே இருக்கையில் சேர்ந்தாற்போல் நன்கு கெட்டியாக ஒட்டாமல் வரும்போது, இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி ஒரு கரண்டியால் சீராகப் பரத்தி ஓரங்களை அழுத்தி விடவும். சிறிது நெய் தடவிய தட்டையான கரண்டியால் தடவினால் மேல்பாகம் வழவழப்பாகிவிடும்.
- நன்கு ஆறியதும் கத்தியால் கீறி வில்லைகள் போடலாம். கடைகளில் கிடைப்பதுபோல் நீள் சதுரமாகவோ, வழக்கமான சதுரங்களாகவோ தான் செய்ய வேண்டும் என்றில்லை. பிள்ளையாருக்கான சின்ன மோதக அச்சில் கூட வார்த்து எடுக்கலாம். எல்லாவற்றிற்கும் எவ்வளவு நேரமானலும் கலவை வளைந்து கொடுக்கும். வாயில் கரையும்.
* சுத்தமான நெய்யில் மட்டும் தான் செய்ய வேண்டும். மைசூர்பாகிற்க்குச் செய்வது போல் டால்டா உபயோகிக்கக் கூடாது.
* அதிகம் நெய்க்கு பயந்தவர்கள், 2 பங்கு மட்டும் நெய் சேர்த்தும் செய்யலாம். பெரிய வித்தியாசம் தெரியாது.
** சொல்ல மறந்தது, உடம்பைப் பார்த்துக் கொள்ளவும். அடிக்கடி உணவில் இஞ்சித் துவையல், மிளகு ரசம், கொள்ளுப் பொங்கல் என்று சமைத்துச் சாப்பிடவும்.


திங்கட் கிழமை, நவம்பர் 5, 2007 at 5:02 பிற்பகல்
நான் குழந்தையா இருகரச்சே (இப்பவும் குழந்தை தான்) எங்க பக்கத்து வீட்டு ஆன்டி, மைசூர் பாகு செஞ்சு தரேன் பேர்வழி!னு கல்கோனா ( நான் வெச்ச பேரு அதுக்கு) செஞ்சு குடுத்த்டாங்க.
அதுலேருந்து தெனாலி ராமன் பூனை வளர்த்த கதை மாதிரி(தெரியுமா?) மைசூர் பாகை பார்தாலே ஓடி விடுவேன். கோவை கிருஷ்ணா மைசூர் பாக் காரங்க தான் அந்த பயத்தை தெளிய வெச்சாங்க.
இன்னும் கேசர்ரி வந்து சேரலை. கேசரிக்காக தனி பதிவே போட்டு இருக்கேன், ஒரு வருஷம் முன்னாடி. அதான் உஷா பாச மழை பொழியாறாங்க.
//சொல்ல மறந்தது, உடம்பைப் பார்த்துக் கொள்ளவும். அடிக்கடி உணவில் இஞ்சித் துவையல், மிளகு ரசம், கொள்ளுப் பொங்கல் என்று சமைத்துச் சாப்பிடவும். //
இல்லாவிட்டால் கார்க் புடுங்கி விடும்! என முன் குறிப்பாகவே போட்டிருக்கலாம். பரவாயில்ல, பி.குவாகி விட்டது.
திங்கட் கிழமை, நவம்பர் 5, 2007 at 6:13 பிற்பகல்
ambi, உங்க கேசரி பதிவும் கூகிளாண்டவர் தயவுல படிச்சுட்டேன். :0
உண்மையா மைசூர்பாகு செய்யற்துதான் கொஞ்சம் ட்ரிக்கி, கஷ்டம். ஆனா எவ்வளவு நல்லா வந்தாலும் யாரும் மக்கள் கண்டுக்க மாட்டேங்கறாங்க. “மைசூர்பா செய்யலையா?(கஞ்சமே!)”ன்னு பாக்கறாங்க. என்ன போச்சுன்னு நானும் நலுங்காம பத்து நிமிஷத்துல இதைச் செஞ்சுடறது.
திங்கட் கிழமை, நவம்பர் 5, 2007 at 10:38 பிற்பகல்
இந்த மைசூர்பா கொஞ்சம் கேசரி ஜாடைல இருக்கு?
நானும் கோயம்புத்தூர்ல வாழ்ந்திருக்கேன் (வசிச்சிருக்கேன்னு சொல்றதவிட வாழ்ந்திருக்கேன்னுதான் சொல்லணும்), ஆனா இந்த மைசூர்பா கேள்விப்பட்டதேயில்லையே. இனிப்பு திங்க மாட்டேங்கிறதால காதிலயே போட்டிருந்திருக்க மாட்டேன்.
செவ்வாய்க் கிழமை, நவம்பர் 6, 2007 at 6:01 மு.பகல்
ஜெயஸ்ரீ,
ரெண்டு நாள் நான் வலை பக்கம் வரல்லை. அதற்குள் இத்தனை ஸ்வீட் போட்டுட்டீங்க. ஸூப்பர். கண்டிப்பா உங்க ரெஸிபிதான் ட்ரை பண்ண போறேன். (எனக்கு இங்கே பௌடர்டு சுகர்தான் கிடைக்கிறது.அதற்கும் இதே அளவுதானா.என் சந்தேகத்திற்கு முடிவே இல்லை).உங்களுக்கு என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 21, 2007 at 4:21 மு.பகல்
Hi ,
Tried ur mysorepa recipe today and it came out very well. Thank you so much for a perfect recipe.
திங்கட் கிழமை, டிசம்பர் 24, 2007 at 10:21 மு.பகல்
Prema, Thanks and Welcome.
சனிக்கிழமை, நவம்பர் 1, 2008 at 10:16 மு.பகல்
Jayashree madam i have seen all your recipes and stories all are quiet interesting the way u deliver ur sense of humor everything is very nice can u post some recipes for diabetic patients i will be very grateful to u
திங்கட் கிழமை, டிசம்பர் 22, 2008 at 6:00 பிற்பகல்
ஜெ, உங்க ரெசிபி பார்த்து மைசூர்பா செஞ்சேன், சூப்பரா வந்துச்சு. டாங்ஸ் டாங்ஸ்…
திங்கட் கிழமை, பெப்ரவரி 2, 2009 at 8:59 பிற்பகல்
கொள்ளுப் பொங்கலா அது என்ன? சொன்னீங்கன்னா, என்னை போன்ற வெயிட்டான மக்களுக்கு உதவும்.:)