நவராத்திரி வெள்ளிகிழமை, பெண் வயதுக்கு வருவது, சீமந்தம் போன்ற விசேஷங்களுக்குச் செய்யும் இனிப்பு வகை உணவு.
தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 2 கப்
வெல்லம் – 2 கப்
நெய் – 1/2 கப்
முந்திரிப் பருப்பு – 100 கிராம்
கொப்பரைத் தேங்காய் – 1/2 மூடி
ஏலப்பொடி
செய்முறை:
- பச்சரிசியை நன்றாக நீரில் களைந்து, நீரை வடியவைக்கவும்.
- மிக்ஸியில் பொடித்து நைஸ் மாவாக அரைத்து, மாவு அல்லது மைதாச் சல்லடையில் சலித்துக் கொள்ளவும். (மேலே தங்கியிருப்பதை மீண்டும் மீண்டும் மிக்ஸியில் போட்டு அரைத்தால் ஒரு டீஸ்பூனுக்கு மேல் அரிசி ரவை மிஞ்சாது.)
- அடுப்பில் வாணலியில் சிறிது சிறிதாக சலித்த மாவைப் போட்டு நல்ல சிவப்பாக வறுத்து ஒரு தாம்பாளத்தில் ஆறவிட வேண்டும்.
- ஆறியதை மீண்டும் நைஸ் சல்லடையில் சலித்து கட்டிகளை உடைத்துக் கொள்ளவும்.
- நல்ல கொதிக்கும் வெந்நீராக வைத்து, அதை மாவில் சிறிது சிறிதாகத் தெளித்துப் பிசிறவும்.(கை சுடும்!) தண்ணீர் அதிகம் சேர்த்துவிடக் கூடாது. மாவு, பிடித்தால் பிடிபடவும், உதிர்த்தால் உதிரவும் வேண்டும். இப்படித் தண்ணீர் சேர்க்கும்போதே ஓரளவு மாவு பொரிந்து பெரிதாகும். இதை அப்படியே ஒரு பாத்திரத்தில் அழுத்தி வைத்து முக்கால் மணி நேரம் வைக்கவும்.
- மறுபடியும் கொஞ்சம் பெரிய ரவைச் சல்லடையில் (இப்போது மாவு அளவில் பெரிதாகி இருப்பதால்) சலித்து, கட்டிகளை நீக்கி, மாவை ஒரு துணியில் முடிச்சிட்டு ஒரு பாத்திரத்தில் வைத்து, குக்கரில் வெயிட் போடாமல் இட்லி மாதிரி அல்லது இட்லி வாணலியில் ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். (முடிச்சிடாமல் ஒரு அகலமான பாத்திரத்தில் துணியை விரித்து மாவைக் கொட்டி, நாலு பக்கமும் வெளித் தெரியாமல் மூடினாலும் போதும்.)
- குக்கர் அணைத்த அடுத்த விநாடியே மூடியைத் திறந்து, பாத்திரத்தை (உள்ளிருக்கும் மாவோடு) வெளியே எடுத்துவிடவும். (குக்கர் மூடியை உடனே திறக்காமல் வைத்தால் மூடியில் இருக்கும் நீர் துணிமீது விழுந்து, ஆங்கே மாவுக்கும் பொசிந்து, கட்டி தட்டிவிடும்.
- துணியைப் பிரித்து, வெந்த மாவை ஒரு தாம்பாளத்தில் கொட்டி, பாதி நெய்யையும் உருக்கிச் சேர்த்து கையால் உதிர்த்துக் கொள்ளவும். அதிக யத்தனமுமில்லாமல் மாவு தானே உதிரும்.
- தேங்காயை மிக மெலிதாகக் கீறிக் கொள்ளவும். முந்திரியை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
- ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரி தேங்காய்த் துண்டுகளைப் பொரித்துவைத்துக் கொள்ளவும்.
- நல்ல பாகு வெல்லத்தை அரை கப் தண்ணீர் சேர்த்து முற்றிய கெட்டிப் பாகாகக் காய்ச்சவும். இறுதியில் ஏலப் பொடி சேர்க்கவும்.
- பாகு காய்ந்ததும் இறக்கி, பொரித்த முந்திரி தேங்காய்த் துண்டுகளும், வேகவைத்து உதிர்த்து வைத்திருக்கும் மாவையும் கொட்டி நன்றாகக் கிளறவும்.
- மீதி இருக்கும் நெய்யையும் உருக்கிச் சேர்க்கவும்.
* 2 கப் அரிசிக்கு சுமார் 6 கப் புட்டு கிடைக்கும்.
* பச்சரிசியை வறட்டு மாவாக மிஷினில் அரைத்து வந்து, வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டு நல்ல சிவப்பாக வறுத்து, தொடர்ந்து மேலே சொல்லியுள்ளபடியும் செய்யலாம்.



புதன் கிழமை, அக்டோபர் 21, 2009 at 10:28 பிற்பகல்
nalla recipe