தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 1 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
கடலைப் பருப்பு – 1/4 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
பயத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
உப்பு – தேவையான அளவு
எண்ணை – தேவையான அளவு
தாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.
செய்முறை:
- அரிசியை தண்ணீரில் களைந்து, உலர்த்தி, ரவையைவிட சற்று பெரிய அளவில் உடைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியில் எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, , பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து ஒரு கப் ரவைக்கு 1 1/2 கப் தண்ணீர் என்ற அளவில் வைத்து, கொதித்ததும், உடைத்த ரவையைக் கொட்டி, தேவையான உப்பு சேர்த்துக் கிளறி வைக்கவும். (இதிலேயே அரிசி பாதி வெந்திருக்கும்.)
- பருப்புகளை தண்ணீரில் ஒரு மணிநேரம் ஊறவைத்து, காய்ந்த மிளகாய், பருப்புகளுக்குத் தேவையான உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த விழுதை, கிளறி இறக்கியிருக்கும் அரிசி ரவையோடு கலந்து கொள்ளவும்.
- ஒரு வாயகன்ற வெண்கல உருளியில் அடிப்பகுதியின் ஓரங்களில் வரிசையாக 3 அல்லது 4 சிறிய(உள்ளங்கை அளவு) அடைகளாகத் தட்டி இறுதியில் நடுவிலும் ஒன்று தட்டி 7 அல்லது 8 டீஸ்பூன் எண்ணை விட வேண்டும்.
- மேலே உருளியின் வாயை ஒரு தண்ணீருள்ள பாத்திரத்தால் மூட வேண்டும்.
- மெதுவாக உருளியின் பக்கங்களை அடிக்கடி திருப்பிவிட்டுக் கொண்டே இருந்தால் ஒவ்வொரு பக்கமாக எண்னை நகர்ந்து அந்தந்தப் பகுதி அடை வேகும்.
- நன்கு வெந்ததும் அப்படியே எடுத்துப் பரிமாறலாம். (திருப்பி விடாமலேயே மேல்பகுதி வெந்திருக்கும்.)
* தவலை அடையை இந்த முறையில் செய்வதற்கு ‘கிளறிக் கொட்டிய அடை’ என்றும் பெயர்.
* இதற்கு தேங்காயெண்ணை உபயோகித்தால் அல்லது சிறிதளவாவது கலந்து உபயோகித்தால் மணமாகவும் சுவையாகவும் இருக்கு.
* அரிசியை உடைத்து உபயோகிப்பதற்குப் பதில் எங்கள் வீட்டில் பொடியான அரிசிக் குருணையையே நேரடியாக உபயோகித்தும் பார்த்திருக்கிறேன்.
* என்னிடம் தற்சமயம் உருளி இல்லாததால் வாணலியில் தான் செய்தேன். ஒரே நேரத்தில் நாலைந்தாகச் செய்யாமல் ஒரே பக்கமாக வாணலியைச் சாய்த்து வைத்துக் கொண்டு, ஒவ்வொன்றாக, சற்று பெரிதாகவும் செய்யலாம். பாத்திரத்தை உருட்டும் வேலை மிச்சம். உருளி மாதிரி இல்லாமல் வாணலிக்கு அதுதான் வசதி.


திங்கட் கிழமை, ஜூலை 30, 2007 at 7:21 பிற்பகல்
தவலை இட்லி, வடை, அடை மூணுக்கும் வித்தியாசம் என்னன்னு ரொம்ப நாளா குழப்பம் இருந்தது. இப்போது தீர்ந்தது.
2 ஆவது செய்முறையில காய்ந்த மிளகாயை என்ன செய்யணும்னு சொல்லவே இல்லையே ?
செவ்வாய்க் கிழமை, ஜூலை 31, 2007 at 4:05 மு.பகல்
ஆஹா………… நீங்கதான் ‘நீங்க’ன்னு தெரியாம இருந்துருக்கேன் ‘மண்டூகம் ‘போல.
ரொம்ப சந்தோஷம் ஜெயஸ்ரீ.
எல்லாம் நலமே:-)
புதன் கிழமை, ஆகஸ்ட் 1, 2007 at 11:08 மு.பகல்
ஜெயஸ்ரீ திருத்திட்டேன் உடனேயே. நன்றி.
துளசி, வாங்க. இந்த ரெசிபிக்காகத் தானே உங்களை அப்படிச் சொல்லிகிட்டீங்க. நான் ஆமைவடை போட்டிருந்தா கூர்மமா இருந்திருக்கேன்னு தானே சொல்லியிருப்பீங்க? கவலைப்படாதீங்க. பெருசா ஒன்னும் எழுதிடலை. முன்னாடி ஊஞ்சல் கட்ட ஐடியா கேட்டீங்களே, அந்த வீடு கட்டினதையா இப்ப சொல்றீங்க?
புதன் கிழமை, ஆகஸ்ட் 1, 2007 at 1:42 பிற்பகல்
ஆமாம். இப்போ ஊஞ்சலில் உக்காந்துருக்கறது ஒரு யானையும், குரங்கும்.
கெளரவமாச் சொன்னா புள்ளையாரும் அனுமாரும்:-)))))
புதன் கிழமை, ஆகஸ்ட் 1, 2007 at 6:39 பிற்பகல்
//பயத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்//
பயத்தம் பருப்புனா— Moong dhaal? I mean, the one we use to make “Ven Pongal”? pls excuse my ignorance
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 3, 2007 at 4:25 பிற்பகல்
Gopalan,
அதே தான். தோலோட பச்சையாவும், கழட்டினதும் மஞ்சளாவும், இருக்கறதுக்குள்ள சின்ன சைஸாவும், வெண்பொங்கல்ல போடுவோமே, அதே தான். தமிழ்ல வேற பேர் கூட இதுக்கு இருக்கா? ஒருவேளை அடைல சேர்க்கச் சொன்னதால உங்களுக்கு இந்தச் சந்தேகம் வந்துதா? சாதா அடைலயே நான் சேர்ப்பேன். நல்லா இருக்கும்.
ignoranceஆ? அதுல எல்லாம் நீங்க என் கூட போட்டி போட முடியாது.
நானே ஜெயிப்பேன்.
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 3, 2007 at 4:26 பிற்பகல்
துளசி, ஊஞ்சலை ஏன் அவங்களுக்கு அலாட் செஞ்சீங்க? அப்ப உங்க வீட்டுக்கு வந்தா ஆட முடியாதா? நான் வரலை பின்ன.