எச்சரிக்கை: ஒரு பெண்ணுக்கு இவ்வளவு பிரச்சினைகளா என்று உருகுபவர்கள், இளகிய மென்மையான மனதுக் காரர்கள் தவிர்க்கவும்.
தேவையான பொருள்கள்:
பணிவு
பொறுமை
அடக்கம்
நேரந்தவறாமை
சுறுசுறுப்பு
சிரித்த முகம்
தாளிக்க - பதிபக்தி, பெரியோரிடம் மரியாதை, மிதமிஞ்சிய தாய்மையுணர்வு, கலாசாரத்திலேயே கருத்தும் கவனமும், இன்ன பிற பாவனைகள்…
செய்முறை:
வீடு முழுவதும் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். (அப்படியே ஒருமுறை மொத்தமாக ஃப்ளாட்டை தண்ணீரில் முக்கி எடுப்பது மாதிரி இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்?)
ஜன்னல்கள், கதவுகள், கர்ட்டன் துணிகள், டிவி, டிவிடி வகையறாக்கள், படுக்கை, விரிப்புகள், தலையணை, குளியலறைக் கண்ணாடி முதல் கழிவறை டியோரண்ட், கால் மிதிக்கும் மிதியடி வரை, சமையலறை ஷெஃபுகள், மிக்ஸி, கிரைண்டர் உபகரணங்கள், சிங்க், முதல் அஞ்சறைப் பெட்டிவரை… நேர்ப்படுத்தி துப்புரவாக வைக்கவும்.
மறைக்க வேண்டிய பொருள்களை மறைப்பதும், தூக்கி ஏறக் கட்டியிருந்த பொருள்களை இறக்கிச் சீராட்டுவதும் முக்கியம். (உதாரணமாக முறையே அடுப்பில் வைத்துவிட்டு இணையப் பக்கம் எட்டிப் பார்த்ததில் கருகிய பாத்திரங்கள், பூச்சூட்டலுக்கு வாங்கிய புடைவை)
நாலரை மணிக்கு அலாரம் அடித்தால் படு நிதானமாகத் திரும்பிப் படுத்து, ‘பேசாம மும்பைக்கு மாத்திண்டிருக்கவே வேண்டாம். ஏன் நான் மட்டும் இவ்ளோ சிக்கிரம் எழுந்து…’ என்பது முதல் ‘தேடித் தேடி பேங்க் காரனுக்குக் கொடுத்த எங்கப்பாவைச் சொல்லணும்’ வரையிலான வகை வகையான பத்து நிமிடப் புலம்பலை நினைத்துக் கூடப் பார்க்காமல், அப்படியே அலாரம் சத்தம் கேட்டதும் வில்லிலிருந்து அம்பு புறப்படுவது போலவோ, விடுபட்ட ஸ்பிரிங் போலவோ எழுந்திருக்கவும்.
32 பற்களைத் தேய்க்க 3 நிமிடங்கள் எடுத்துக் கொண்டாலும் முழு உடம்பிற்கும் குளிப்பதை 2 நிமிடங்களில் முடிக்கக் கற்றுக் கொள்ளவும்.
பாலை அடுப்பில் வைத்துவிட்டு காய்வதற்குள், ஃப்ளாட்தான் என்றாலும் இருக்கும் குட்டி வாசலைக் கூட்டித் துடைத்து குறைந்தது ஒரு 8 புள்ளி 8 வரிசை கோலம் போடவும். வழக்கமான ஸ்டார், மாவிலைக் கோல ஜல்லிகளுக்கு விலக்கு.
காஃபி போட்டு, அந்தக் களைப்பைப் போக்க நிதானமாக பால்கனியில் தரிசனம் தந்துகொண்டு உறிஞ்சுவது, ஆறரைக்கு கோவிந்த் கிளம்புவதற்குள் ஆறே காலுக்கே காலில் ஷூவை மாட்டிக் கொண்டு, “வாக்கிங் போறேன், கிளம்பும்போது லைட் ஃபேன் எல்லாம் ஒழுங்கா அணைச்சுட்டுப் போங்க, பை” சொல்லிவிட்டு தெருவில் போகிறவர்களுக்கெல்லாம் ‘ஹாய்’ சொல்லிக்கொண்டு ஒரு மணி நேரம் நகர்வலம் வருவது, நாமும் போஸ்டர் பதிவுக் கலாசாரத்தைத் துவங்கலாமா என்று யோசிப்பது, பார்க்கில் பயிற்சி செய்வோரில் தம்மின் மெலியாரைப் பார்த்து ‘ஹூம்!’ என்று பெருமூச்சு விட்டு ஏங்குவது, பெரியோரைப் பார்த்து “அம்மாடீ, நாம பரவாயில்லை, எந்தக் கடை கோதுமையோ!” என்று இறுமாப்பு கொள்வது அனைத்தையும் நினைத்துக் கூடப் பார்க்க வேண்டாம்.
“ஹய்யய்யோ… என் உசுருக்குள்ள தீயைவெச்சான் அய்யய்யோ.. என் மனசுக்குள்ள நோயைத் தெச்சான் அய்யய்யோ” க்களை இப்பொழுதைக்கு மனதினால் நினைக்காவிட்டாலும் மறந்தும் தன்னிச்சையாய் வாயினால் வழக்கம்போல் 50 டெசிபலில் பாடிவிடாமல் இருக்க வேண்டும். (ஏற்கனவே ஒருமுறை இதற்கான விலையைக் கொடுத்தாகிவிட்டது.) “நான் வாடாஆ மல்லி, நீ போடாஆ அல்லி” என்று பெண் பாடினாலும், உடனே உணர்ச்சிவசப்பட்டு, “அது ‘அல்லி’ இல்லைடா செல்லம், ‘அள்ளி’; எங்க, நாக்கை உள்ள மடிச்சு சொல்லு!” என்று கனகாரியமாய் இப்போது பெண்ணுக்கு தமிழறிவை ஏற்றிக் கொண்டிருக்க வேண்டாம். ஆனாலும் பாடிய வாயும் ஆடிய காலும் அடங்குமா தெரியவில்லை. ரொம்ப அடக்க முடியவில்லை என்றால் எதற்கும் “அதரம் மதுரம்.. வதனம் மதுரம்.. நயனம் மதுரம்…” என்று மதுராஷ்டக வகையறாக்களை திரும்பத் திரும்ப மனனம் செய்தால் அகிலம் மதுரமாக சாத்தியம் இருக்கிறது.
நடுமுதுகிற்கு மேல் பிடரிக்குக் கிழிருந்து மெலிதாக விர்ரென்று ஒரு வலி ஆரம்பிக்கிறதா? அட நம்ப நண்பர் மைக்ரேனார். ஐயோ வேண்டாம், ரம்பையின் காதலில் அஞ்சலிதேவி புல்லாங்குழலிசை கேட்டுப் பாடுவது போல் “அழைக்காதே.. நினைக்காதே” பாடித் தடுக்கப் பார்க்கவும். சொன்னால் கேட்பானா தெரியவில்லையே.
பொதுவில் வந்து “என்னங்க..” என்று அழைக்கும்போது நம் குரம் நமக்கே கொஞ்சம் கேவலமான toneல் பிசிறுகிற மாதிரி இருக்கலாம். ஆனால் அதைக் கேட்டும் கண்டுகொள்ளாத மாதிரி இருந்துவிட்டு சாவகாசமாக, “என்னையா கூப்ட?’ என்று முழிக்கும் கணவனை முதல் இரண்டு முறை மட்டுமே மன்னிக்கலாம். மூன்றாவது முறையாக அந்தச் சம்பவம் நடந்தால் அது நடிப்பு அல்லது கொழுப்பு. “Why all these..? Feel free.. ” என்று வழக்கம்போல் சொன்னாலும் ஏற்கவேண்டாம்.
கணவரையாவது ஒரு முறைப்பில் சமாளிக்கலாம். ஆனால் பெண் கேட்கப் போகும்,
“ஏன் இப்பல்லாம் கம்ப்யூட்டர் எனக்கே கொடுத்திட்ட? மரத்தடி தமிழ்மணம் எல்லாம் மூடிட்டாங்களா, பாஸ்வேர்ட் மறந்திட்டயா?”
“ஏன் இப்பல்லாம் என்னைத் திட்டவே மாட்டேங்கற? நான் சமத்தா இருக்கேனா?”
“ஏன் இப்பல்லாம் சிடில பாட்டே போடமாட்டேங்கற? வீணையை வீணையை எடுத்து வெச்சு வாசிச்சுப் பாக்கற?”
“அப்பாவோட ஏன் சத்தமா பேச மாட்டேங்கற?” அல்லது “அப்பாகிட்ட ஏன் எப்பவும் ரகசியம் பேசிண்டே இருக்க?”
“ஏன் எப்பவும் ஏதாவது வேலை செஞ்சுண்ட்டே இருக்க?”
“ஏன் எல்லாத்தையும் துடைச்சு துடைச்சு வெக்கற?”
“ஏன் அப்பா செய்ற வேலையை எல்லாம் நீயே நீயே செய்யற?”
“ஏன் மத்யானம் என்னோட தூங்க மாட்டேங்கற?”
“அப்பாவை ஏன் சர்கேஸ்டிக்கா கூப்பிடற?” (மரியாதையா கூப்பிட்டா, அது சர்கேஸ்டிக்னு நினைக்கற அளவுக்கு கலாசாரம் சீரழிஞ்சிருக்கா வீட்டுல?))
“ஏம்மா தெனக்கும் தெனக்கும் வெளில கிளம்பும்போது இப்பல்லாம் அம்மா மாதிரி அழகா இருக்க?” (அட, அதில் பயப்பட எதுவுமில்லை. புடைவை கட்டும்பொழுதெல்லாம் பெண் பல வருடங்களாகச் சொல்வதுதான். அம்மா என்பவள் புடைவை, தலையில் துண்டு கட்டிக் கொண்டு இருக்கவேண்டும் என்பது இங்கேதான் குழந்தைகளுக்கு கர்ப்பத்திலேயே அழுத்தமாக போதிக்கப் படுகிறது. த்ரிஷாவே அம்மாவாக நடித்தாலும் புடைவைதான்.)
……
……
இடையிடையே ஃபோனில் அம்மா அடக்கமாக(!) இருக்கச் சொல்லி அட்வைஸ், அப்பாவின் நலன் விசாரிப்பு, அண்ணா மன்னியின் அன்பைக் கூட சமாளித்து விடலாம். ஆனால் இந்தத் தம்பி என்ற பெயரில் இருக்கும் வானரம், “என்ன லக்ஸ், சிந்தால்லேருந்து ஹமாம் லைப்பாய் வரைக்கும் ஒரே சோப்பு வாசனை இதுவரைக்கும் வருது? அந்தப் பக்கம் பயங்கரமா சோப்புப் போடறியா, திருந்துங்கடீ” என்று பதில் சொல்லமுடியாத கேள்விகளாகக் கேட்டுக் கொண்டு அந்தப் பக்கம் சிரித்துக் கொண்டே இருப்பதையும், “பதில் பேசு, என்ன பேசமாட்டேங்கற? ஃபோனை அங்க குடு, நானே கேட்டுக்கறேன்’ என்று சீண்டுவதையும் எல்லாவற்றிற்கும் ‘ஹி…. ஹி’ என்று மட்டும் வழிந்துகொண்டு ‘சரி வெச்சுடவா, வேலை இருக்கு’ என்று சொல்லிக்கொண்டே 20 நிமிடம் கேட்க வேண்டியிருப்பதைத் தான் பொறுக்க முடிவதில்லை. இந்தத் தடவை எப்படியும் இதை திடமாகக் கடக்க வேண்டும்.
இன்னும் சில சின்னச் சின்ன dos and donts…
சாப்பாட்டு மேசையாக டைனிங் டேபிளையே உபயோகித்து கம்ப்யூட்டர் டேபிளுக்கு ஓய்வளிக்க வேண்டும்.
உடன் உட்கார்ந்து டி.வி சீரியல்களை ஆர்வத்தோடு பார்ப்பதுபோல் நடிக்க முடிந்தால் நல்லது. சீரியலில் வரும் பெண்களுக்கான சிக்கல்களுக்காக நம் முகத்தையும் சிந்தனையையும் கூட சீரியஸாக வைத்துக் கொண்டு கவலைப்பட முடிந்தால் மேலும் நல்லது.
வெயில் காலமாக இருப்பதால் தலையை விரித்துக் கொண்டே இருப்பானேன்? நன்றாக இழுத்து வாரி எப்பொழுதும் ஒரு band போட்டுக் கொள்ளலாம்.
குழந்தையை எந்தக் காரணம் கொண்டும் கடிந்துகொள்ளாமல் சிரித்துக் கொண்டே அதைச் சமாளிக்கவும். கேட்டதை எல்லாம் ஒரு தாய்க்கே(?!) உரிய பொறுமையுடன் செய்து தரவும். மற்ற குழந்தைகளையும் அப்படியே செல்லமாக வைத்துக் கொள்ளவும். ஆனால் மற்ற குழந்தைகளிடம் அளவை மிஞ்சி விட வேண்டாம். அதனால் பெண்னுக்குக் கோபம் வந்து மீண்டும் மேலே இருக்கும் கேள்விகளில் எதையாவது ஒன்றிரண்டை அது பொதுவில் உருவிப் போடலாம்.
நைட்டி என்பது இரவுக்கான உடை மட்டுமே என்பதை இவ்வளவு காலங் கடந்தாவது உணருவது நல்லது. மற்றபடி டைனிங் சேர், சோபா, கம்ப்யூட்டர் ஸ்பீக்கர், கிரைண்டர் என்று அங்கிங்கெனாதபடி இருக்கும் எல்லாப் பொருள்களுக்கும் முழு ஓய்வு கொடுத்துவிட்டு துப்பட்டாவை எப்பொழுதும் சொந்தத் தோளிலேயே சுமக்கவும்.
ஞாயிறு என்றால் ஏழு மணிக்கு எழுந்தால் போதுமே என்று கோவிந்த் சொல்வதைக் கேட்டு வழக்கம்போல் ஒன்பது மணி வரை தூங்கிவிடவேண்டாம். அதெல்லாம் பொதுவாக உலகில் ரங்கமணிகளுக்கானது.
இத்தனையையும் இன்னும் எதிர்கொள்ளப்போகும் எதிர்பாராத பலவற்றையும்கூட சமாளிக்க வேண்டும். ஆனால் கஷ்டமோ, வலியோ முகத்தில் தெரியாமல் சமாளிக்க வேண்டும். அப்போதுதான், “இதெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்லை. என்னோடது எப்பவுமே ஒரு ஆர்கனைஸ்ட் குடும்பம்தான்” மாதிரி சீன் கிடைக்கும். முடியுமா என்று கேட்டால் முடிய வேண்டும். ஏர்போர்டில் handbaggageல 18 கிலோ பொருளை அடைத்து வைத்துவிட்டு சந்தேகம் வராமல் இருக்க 8 கிலோவுக்கே குறைவு மாதிரி அவர்கள் பார்க்கும்போது அலட்சியமாகத் தூக்கி இந்தப் பக்கத்திலேருந்து அந்தப் பக்கம் வைப்பதில்லையா? (உள்ளே நரம்பு எலும்பெல்லாம் தெறிக்கும்!) ஒருமுறை ஒரு 19 கிலோ + 2 கிலோ கிரைண்டரையே(2 கிலோ, கிரைண்டருக்கு கம்பெனி பாக்கிங் பத்தாது என்று எக்ஸ்ட்ராவாக அண்டக் கொடுத்திருந்த ஜீன்ஸ், டவல் வகையறா) அப்படி எடுத்துக் கொண்டு போன நம் திறமையை இப்போது நினைத்துப் பார்க்கவும்.
Hand baggage போதாது என்று கர்ச்சீப், பர்ஸ் வைக்கிற சின்ன கைப்பையிலேயே 5 கிலோவை வழக்கமாக ஏற்றுவதையும் நினைவுப்படுத்திக் கொள்ளவும். ஆனால் கஷ்டப்பட்டு பாரம் சுமப்பது நாமாக மட்டுமே இருக்கவேண்டும். போனமுறை பெண்ணின் கையிலும் ஒரு கைப்பையைக் கொடுத்து பேருக்கு ஒரு 20 பக்க டிராயிங் நோட் வைத்ததையே அந்தக் குழந்தை தூக்க முடியாமல் ஏர்போர்ட் பொது இடத்தில் அழுத வரலாறுகளை (அதோட ஒரு ஓரமா ‘கொற்றவை’, ‘ஆதவன் கதைகள்’ ரெண்ரே ரெண்டு புக் மட்டும் என்னோடது வெச்சிருந்தேன். அது ஒரு பெரிய வெயிட்டாப்பா?…) இந்த நேரத்தில் நினைவூட்டிக் கொள்.
எப்பொழுதும் நாம் விச்ராந்தியாக இருப்பதைப் பார்த்து பொறாமைப் படும் அக்கம்பக்கத்தவர்கள் எல்லோரும், இப்போது நம்மை பால்கனியில் பார்க்கும் ஓரிரு நொடிகளில் “என்ன ரொம்ப பிசி போலிருக்கு?!” என்று கேட்கும் தொனியில் குரூர சந்தோஷமும், நக்கலும் இருப்பதாகத் தெரியலாம். தெரியலாம் என்ன தெரியலாம், நிச்சயம் இருக்கும். ஆனால் இந்தச் சமயத்தில் அக்கம்பக்கத்தினருடனான நல்லுறவு மிக முக்கியம். அதனால் அதையெல்லாம் இப்பொழுதைக்கு கண்டுகொள்ளாமல் பதிலுக்கு ஒரு ஸ்மைலியை மட்டும் போட்டு வைக்கவும். நாம் இணையத்தில் போடாத வெற்று ஸ்மைலியா?…
===
“இரு.. நிறுத்து… என்ன இணையம் வரைக்கும் வந்துட்ட? ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசில எங்க இணையத்தையுமா? இந்த செய்முறை வேற முடியவே மாட்டேங்குது.. என்ன நடக்குது இங்க?”
“நான் இனிமே எப்படி இருக்கணும்னு எனக்கு நானே சொல்லிக்கறேன்; புலம்பிக்கறேன். வலைப்பதிவு ஆரம்பிச்சதிலேருந்து எனக்குள்ளயே பேசிகிட்டாலும் எல்லாம் ரெசிபி ஃபார்மட்ல தான் சொல்ல வருது..”
“அது போகட்டும், எல்லா பதிவர்களுக்கும் இருக்குற கிறுக்குதான். ஆனா எதுக்கு இவ்ளோ அமக்களம்? 100 வது பதிவைப் போடப் போறியா?”
“அதெல்லாம் இப்ப இல்லை. 99 வரைக்கும்தான். அதுக்கப்புறம் வழக்கப்படி கொஞ்ச நாள் கட்டையா போட வேண்டியதுதான். நான் மட்டும் விதிவிலக்கா?”
“அடடா என்னாச்சு?”
“தங்கை தம்பிகள் அவங்க குடும்பம், குழந்தைகள், அம்மா அப்பா எல்லாரும் லீவுக்கு வராங்களே..”
“வாவ்! நல்ல விஷயம் தானே. அதுலயும் அம்மா வராங்கங்கற ஒரு சந்தோஷமே போதுமே! நாங்களெல்லாம் கேட்டதா சொல்லு. பிரமாதமா சமைச்சு அசத்திடுவியா? இங்க வலைப்பதுவுலயும் எல்லாச் சமையலையும் பகிர்ந்துப்ப இல்லை? “
“நீங்க வேற, வர்றது கோவிந்தோட அம்மா! நானே டென்ஷன்ல இருக்கேன், எனக்கு உலை வெக்கவே மறந்தாப்ல இருக்கு!! அரிசிக்கு எவ்ளோ தண்ணி வெக்கணும்? ஃபில்டர்ல காப்பிப் பொடியை மேல போடணுமா, கீழ போடணுமா?”
“:))) அதுசரி, கதை அப்படிப் போகுதா? கஷ்டம் தான். அப்ப வேலை எல்லாம் முடிஞ்சுட்டு ராத்திரி 11 மணிக்கு மேலதான் கணினிப் பக்கமே வரமுடியும்னு சொல்லு!”
“ஐய, அவனவனுக்கு இருக்கற அலுப்புல அப்பாடீன்னு படுத்தாப் போதும்னு… “, ஐயய்யோ!!!…. படுக்கும்போது தாலிக்கொடியை அவிழ்த்து தலையணைக்கு அடியில் வைப்பதை மறக்காமல் மறந்துவிட வேண்டும்.
பாதித் தூக்கத்தில்…….
……
…….
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்: (for the title)
As I am suffering from the severe above mentioned situation, I request you sir/madam to grant me leave for 12 days only from today (21/04/07 to 02/5/07).
Thanking you,
Yours seasoningly seasoning ![]()
Jayashree Govindarajan.
ஞாயிற்றுக்கிழமை, April 22, 2007 at 12:19 மு.பகல்
12 நாட்களையும் உறவினர்களுடன் சந்தோஓஓஓஷமாகக் கழிக்க வாழ்த்துக்கள்!
அன்புடன்,
(ஊரிலிருந்து வந்திருக்கும் அம்மா சமைத்துப் போட, காலை நீட்டி உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டே தட்டச்சும்) – சொக்காயி!
டிஸ்கி: கண்டிப்பாக, நீங்கள் குறிப்பிட்ட குரூர சந்தோஷமும், நக்கலும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்!
ஞாயிற்றுக்கிழமை, April 22, 2007 at 4:07 மு.பகல்
Been there ,done that.
சொன்னா நம்புவீங்களோ மாட்டிங்களோ தெரியாது, பாதி படிக்கறதுக்கு முன்னாலயே தெரிஞ்சு போச்சு யார் ஊரிலேருந்து வராங்கன்னு…
(பாம்பறியும் பாம்பின் கால்)
ஞாயிற்றுக்கிழமை, April 22, 2007 at 8:28 மு.பகல்
என்ன கொடுமை சரவணன் இது. இவங்கா வலைப்பதிவையெல்லாம் படிச்சு, இதெல்லாம் இவங்க சமைச்சி போடுவாங்கன்னு தெரிஞ்சும் வர்றாங்களா? அவ்ளோ தைரியசாலிங்களா எல்லாரும் இவங்க குடும்பத்துல? ஆச்சரியம்தான்.
ஞாயிற்றுக்கிழமை, April 22, 2007 at 9:14 மு.பகல்
[...] Posted by Visitor on April 22nd, 2007 தினமும் பார்ப்பேனுங்க – இவங்க பதிவை – wordpress ல login பண்ணினதும் top posts லிஸ்ட்ல இருக்கும். சரி, என்ன தான் இருக்கும்னு இன்னைக்கு click செஞ்சு பார்த்தேன் – ஒரு இன்ப அதிர்ச்சி – சமையலுக்கும் பதிவுக்கும் சம்மந்தமே இல்லை!? தாளிக்க – பதிபக்தி, பெரியோரிடம் மரியா… [...]
ஞாயிற்றுக்கிழமை, April 22, 2007 at 12:48 பிற்பகல்
முதல் வரியைப்படித்தவுடன் ஊகித்துவிட்டேன். எங்கள் இல்லத்திலும் அதே இனிய கதை அடிக்கடி நிகழ்ந்துகொண்டுதான் உள்ளது.(but with no pulambals:-))) ஜெயஸ்ரீ இதுபோல எழுதுவதாக இருந்தால், அந்த உறவினர்கள் ஒவ்வொரு மாதமும் இருமுறை வந்து இருவாரங்கள் மட்டுமே தங்கிச் செல்லும்படி வேண்டிக்கொள்கிறேன்.
ஞாயிற்றுக்கிழமை, April 22, 2007 at 12:55 பிற்பகல்
மரத்தடியில் பரிசு வாங்கிய மாஸ்டர்பீஸ் கதைக்குப்பிறகு அடுத்த சிறந்த பவுன்சர் / யார்க்கர் / இன்ஸ்விங்கர் (எல்லாம் என்ன என்று எனக்குத் தெரியாது) சிறந்த பதிவு இதுதான். தினமும் சிறிது நேரத்திற்காவது ஓய்வெடுத்துக்கொள்ளவும் என்று வேண்டிக்கொள்கிறோம்.
ஞாயிற்றுக்கிழமை, April 22, 2007 at 5:39 பிற்பகல்
[...] குறிப்பு பாணியில் Jayashree Govindarajan இன் கலகல [...]
ஞாயிற்றுக்கிழமை, April 22, 2007 at 11:34 பிற்பகல்
சொக்காயி, Grrr.. நாங்களும் அடுத்தது காலை நீட்டிடுவோமில்ல.
ஜெயஸ்ரீ, நம்பறேன் நம்பறேன். வீட்டுக்கு வீடு அடுப்படி.
பாலராஜன்கீதா உங்க வீட்டுல அடிக்கடி நிகழறதால புலம்பிப் பிரயோசனமில்லைன்னு விட்டுட்டாங்க போல. எனக்கு இதெல்லாம் பல வருஷமா டச் விட்டுப் போச்சு. அதே இவ்ளோ டென்ஷன். அப்புறம் கதை நல்லா இருந்ததுன்னு சொல்லாதீங்க. உங்க ரசனையை இங்க யாரும் வந்து பின்னூட்டத்துலயே மட்டமா சொல்வாங்க!
ப்ரசன்னா,
பிரச்சினை என்னன்னா, என்னவோ, என்ன மாயமோ தெரியலை, நானே வேணும்னே கேவலமா சமைக்கப் பார்த்தாலும் அவங்க வீட்டுலேருந்து வராங்கன்னா, சமையல் தன்னைத் தானே சூப்பரா ஆக்கிக்கிடும். ஏற்கனவே சுத்துப்பட்ட நாட்டார் தெய்வங்களை திருப்தி செஞ்சு சான்றிதழ் வெச்சிருக்கேன்.
ஆனா நானே விரும்பி சில பேருக்காக ஆர்வமா, கவனமா சமைச்சாலும், பயங்கரமா சொதம்பிடும்.
கதம்பமாலை, கில்லி நன்றி.
திங்கட் கிழமை, April 23, 2007 at 11:24 மு.பகல்
ஜெயஸ்ரீ : என்ன பொழைக்கத் தெரியாதவங்களா இருக்கீங்களே… லீவு விட்ட உடனேயே கோந்தேயை தூக்கி இடுப்பிலே வெச்சிகிட்டு, அம்மா வீட்டுக்கு கிளம்பி, ஒரு மாசத்துக்குக் குறையாம டேரா அடிச்சிடணும். அய்யோ பாவம், இந்த மனுஷனுக்கு தனக்கா ஒரு காப்பித்தண்ணி கூட வெச்சிக்கத் தெரியாதேன்னு பாவம் பாத்தீங்களானால், கதை கந்தல்
புதன் கிழமை, April 25, 2007 at 11:39 மு.பகல்
கடவுளே! ஹ்ம்..
ஆகா இந்த சமையல் குறிப்பு படிக்கவே கஷ்டமா இருக்கு…செய்முறையை செயல்முறையில் கொண்டுவருவது மிகக் கஷ்டம்…நான் எளிமையான குறிப்புகளை மட்டுமே செய்து பார்ப்பது வழக்கம்.
நான் எப்போதும் போல திட்டுவாங்கிக் கொண்டே
இருந்து விடுகிறேன். வளையாது….
வியாழன், April 26, 2007 at 12:20 பிற்பகல்
சங்கத்து போட்டியில் வெற்றி பெற்றதுக்கு என் மனமாந்த வாழ்த்துக்கள்!
வாழ்க வளர்க!
மேலும் பல போட்டிகளில் கலந்து நீங்கள் வெற்றியை குவிக்க வேண்டும்
நட்புடன்
நாகை சிவா
http://vavaasangam.blogspot.com
வியாழன், April 26, 2007 at 6:10 பிற்பகல்
போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!!
வியாழன், April 26, 2007 at 7:03 பிற்பகல்
இவ்வளவு சுவாரஸ்யமா எழுத முடியுமான்னு ஆச்சரியமா இருக்கு. ரசிச்சு படிச்சேன்.
வியாழன், April 26, 2007 at 7:04 பிற்பகல்
போட்டியில கலக்கிட்டீங்க.
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!
வியாழன், April 26, 2007 at 8:25 பிற்பகல்
congrats jayasree
nice post w/o different thinking.
வெள்ளிக்கிழமை, April 27, 2007 at 10:13 மு.பகல்
First time unga siteku varen. Mathy solli therinjudhu. wow romba romba nalla iruku unga narration…
U have some super dooper recipes I am going to add it to the tamilindex site
வெள்ளிக்கிழமை, April 27, 2007 at 5:43 பிற்பகல்
மேடம்,
இந்த பதிவு வருத்தப்படாத வாலிபர் சங்கத்து பரிசுப்போட்டியில் பரிசுக்குரியதாக தேர்ந்தெடுந்து உள்ளோம்…
வாழ்த்துக்கள்…
மேலும் விபரங்களுக்கு http://vavaasangam.blogspot.com/2007/04/blog-post_26.html
வியாழன், மே 3, 2007 at 1:22 பிற்பகல்
உங்க மெயில் ஐடி அனுப்பி வையுங்களேன் பிளிஷ்..
என்னோட ஐடி :- raam.tamil@gmail.com
வியாழன், மே 3, 2007 at 7:39 பிற்பகல்
Wow !! போட்டியில பரிசு கிடைச்சதுக்கு வாழ்த்துக்கள்.
இனிமையா இருந்ததா ?
விடுமுறை
வியாழன், மே 3, 2007 at 10:46 பிற்பகல்
//Jayashree Govindarajan Says:
April 22nd, 2007 at 11:34 pm
அப்புறம் கதை நல்லா இருந்ததுன்னு சொல்லாதீங்க. //
இப்போது என்ன சொல்கிறீர்கள் ஜெயஸ்ரீ ?
))
வ.வா.ச.போட்டியிலும் பரிசு பெற்றதுக்கு வாழ்த்துகள்.
// வ.வா.ச. 200ஆவது பதிவில் Jayashree Govindarajan சொன்னது…
கடைசி நேரத்துல 12 மணிக்கு இன்னும் 1 மணி நேரம் இருக்கும்போது வேகமா தட்டிக் கொட்டி உள்ள தள்ளினது. பரிசெல்லாம் கிடைக்கும்னு நினைக்கவே இல்லை. வவா சங்கம், நம்பளையும் கண்டுகிட்டதுக்கு தாங்கஸ்! //
வாவ்! இப்பத்தான் மக்களே படிக்கறேன். எனக்கே எனக்கா? நானே மாமியார் வர டென்ஷன்ல
மரத்தடி பரிசுப்போட்டியிலும் இப்படித்தான் தேர்வுக்கு முந்தைய நாளில் விழுந்து விழுந்து படிப்பதுபோல இறுதி நாளில் சிறந்த கதை அனுப்பி பரிசு பெற்றது நன்றாக நினைவில் உள்ளது
))
வெள்ளிக்கிழமை, மே 4, 2007 at 1:34 பிற்பகல்
இராம், நாகை சிவா, தகவலுக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள். வவாச மேன்மேலும் வளர வாழ்த்துகள்.
பத்மா, ஜெயஸ்ரீ நன்றி. விடுமுறை இனிமையோ இனிமை. இப்ப தனிமையோ தனிமை.
((
Revathi, tamilcuisine இவ்வளவு நாள் எனக்குத் தெரியாது. நல்ல முயற்சி. நன்றிகள்.
CVR, கண்மணி, Arunkumar வாழ்த்துகளுக்கு நன்றி. இனிமேல் தான் மற்ற படைப்புகளைப் படிக்க வேண்டும். உங்களோடு பரிசைப் பகிர்ந்துகொண்டதில் எனக்கும் மகிழ்ச்சி.
வெள்ளிக்கிழமை, மே 4, 2007 at 2:14 பிற்பகல்
///நான் எப்போதும் போல திட்டுவாங்கிக் கொண்டே இருந்து விடுகிறேன். வளையாது….///
முத்துலஷ்மி, சும்மா ஜோக்குக்குத் தானே சொல்றீங்க?
உங்க வயசு குடும்பம் எனக்குத் தெரியாது. ஆனா இதை நான் எழுதினது வேறு சில என்னைப் பாதித்த பெண்களுக்கு. அது கீழ…
என்னோடு பேசுகிற பல பெண்கள் செய்வது, எப்பொழுதும் மாமியார் நாத்தனார் வகையறாவைப் பற்றி குற்றம். எத்தனை மணி நேரம் கொடுத்தாலும் விடாது பேசிப் புலம்புவார்கள் என்றுதான் நினைக்கிறேன். தொடர்ந்து தன் கணவன் இதையெல்லாம் கண்டுகொண்டு தன்னை காபந்து செய்துகொண்டே இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது, அப்படி செய்ய முடியாத பட்சத்தில் அவனைக் குற்றம் சொல்லி அல்லது அதற்காகச் சண்டை போட்டுக் கொண்டிருப்பது. (அநேகமாக பல ஆண்கள் இதில் சாமர்த்தியம் இல்லாதவர்கள் என்பதையும் சொல்ல வேண்டும்.) என்னைப் பெண்களிடம் வெறுப்படையச் செய்யும் விஷயங்களில் இது முக்கியமானது.
உண்மையில் கணவனோடு வரும் கருத்து வேற்றுமைகளே பிரச்சினை. மாமியார் நாத்தனார் விஷயங்கள் பிரச்சினை இல்லை நெருக்கடி மட்டுமே. கணவனோடு வருகிற பிரச்சினைகள் அவசரமாகப் பேசித் தீர்த்து சரிசெய்து கொண்டு மேலே போக வேண்டியவை. நெருக்கடிகள், அவ்வப்போது குறைந்த காலத்துக்கு வரப் போகிறவை. இதுவும் கடந்து போகும் என்ற மனோ நிலையில் கொஞ்சம் அமைதியாக நகர்ந்து செல்ல வேண்டியவை. ஆனால் பெண்கள் சின்னச் சின்ன நெருக்கடிகளுக்காக கணவனை நெருக்கி, பிரச்சினைகளையும், தனக்கும் கணவனுக்குமான அல்லது கணவனுக்கும் அவனது குடும்பத்தினருக்குமிடையிலான பிளவுகளையும் பெரிதாக்கிவிடுகிறார்கள். குடும்ப அமைதியைக் கெடுப்பதைத் தவிர வேறு எதுவும் இதனால் நடந்ததாகச் சரித்திரம் இல்லாததால் தான் இன்னும் இது ஆண்களே கிண்டல் செய்யும் அளவிற்கு காலம் காலமாகத் தொடர்ந்து வருகிறது.
நான் நினைத்த வாழ்க்கையை வாழ்கிறேன். நிச்சயம் என் வீட்டில் இருக்கும் மற்ற மருமகள்களை விட வித்யாசமாக. ஆனால் உறவினர்கள் வரும்போது மாற்றிக்கொள்கிறேன். ஒன்றும் குறைந்து போவதில்லை அதனால். ஆனால் உங்களுக்காகத் தான் மாற்றிச் செய்கிறேன், இல்லாதபோது அப்படி இல்லை என்பதையும் தைரியமாகச் சொல்லியே செய்கிறேன். (இது முக்கியம். யாருக்கும் பயந்து, பொய்யாக வாழத் தேவை இல்லை.முக்கியமாக இந்தப் பதிவை வந்திருந்த எல்லோருக்கும் படிக்கக் கொடுத்தேன்.)எதற்கும் எதிலும் ரங்கமணியை இழுப்பதில்லை.
இன்னொரு இரு கோடுகள் தத்துவம். புகை பிடிக்காத மாணவன், புகை பிடிக்கும்- ஆனால் ஆசிரியரைப் பார்த்ததும் பதறி சிகரெட்டைப் கீழே போட்டு ‘குட்மார்னிங் சார்!’ சொல்லும் மாணவன் இருவரில் யார் ஆசிரியரைக் கவருவார்கள் என்று நினைக்கிறீர்கள்? (உதாரணம் தப்பாயிடுச்சா? இப்போதைக்கு அட்ஜிஸ். அப்புறமா யோசிச்சு வேற நல்லதா சொல்றேன்.)
பொதுவில் சொல்லாமல் பெண்களுக்குள் மட்டும் சொல்ல நினைக்கிறேன் என்றாலும் வேறு வழி இல்லாததால் பொதுவிலேயே சொல்ல வருவது என்னவென்றால், பொருளாதாரத்திலும் இன்னபிற விஷயங்களிலும் சொந்தக் காலில் நிற்பதற்கு முன்னால் முதலில் குடும்ப உறவுகளில் கணவனைச் சாராமல் நிற்க வேண்டியது அவசியம். ‘பெரிய’ இடத்தை அசத்திவிட்டால் அப்புறம் ரங்கமணியைக் கவிழ்ப்பதெல்லாம் ஜுஜுபி!
வெள்ளிக்கிழமை, மே 4, 2007 at 2:32 பிற்பகல்
///லீவு விட்ட உடனேயே கோந்தேயை தூக்கி இடுப்பிலே வெச்சிகிட்டு, அம்மா வீட்டுக்கு கிளம்பி,…////
///அய்யோ பாவம், இந்த மனுஷனுக்கு தனக்கா ஒரு காப்பித்தண்ணி கூட வெச்சிக்கத் தெரியாதேன்னு…//
இன்னொரு தப்பாகிப் போச்சு அதுல.
(( அந்தாளுக்கு சூப்பரா சமைக்கத் தெரியும்னு சொன்ன ஒரே காரணத்துக்காகத்தானே எங்கப்பாவே….
நானும் சஞ்சீவ் கபூர் லெவலுக்கு கற்பனை செஞ்சுகிட்டு, ‘நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்திரிக்காய்’னெல்லாம் கனவுல டூயட்(!) பாடி,….
ஆனா மோசமில்லாம சமைப்பாரு பிரகாஷு. மாமியார் வளர்ப்பு அப்படி! ‘ஊருக்குப் போறியா, கிளம்பு, ஒரு மாசமில்லை ரெண்டு மாசம் கழிச்சு வந்தா போதும்’னு ( நான் அவ்ளோ நல்லவ!) டிக்கெட் வாங்கிக் கொடுத்து ஏத்தி விட்டுடுவாரு. அதான் அதைவிட சூப்பரா சமைக்க இவ்ளோ மெனக்கெடறேன்.
உங்க கமெண்ட் எங்க மாமியார் படிச்சுட்டு, ‘பிரகாஷ் bad boy, சேராத’ன்னு சொன்னாங்க. நல்லவேளை நான் வாரத்துல ஏழு நாள் மட்டும் அவங்க சொல்றதைக் கேக்கறதில்லை.
வெள்ளிக்கிழமை, மே 4, 2007 at 3:06 பிற்பகல்
பாலராஜன் கீதா, உங்க அட்டகாசத்துக்கு ஒரு அளவே இல்லாம போய்கிட்டிருக்கு. இணையத்துல எங்கயும் எழுதறதில்லை. ஆனா எழுதறவங்க அத்தனைபேரோட விபரங்கள், கருத்துகளும் அத்துப்படியா வெச்சிகிட்டு அப்பப்ப எடுத்து விடறீங்க. உங்களுக்கு ஏதாவது பெருசா (பட்டம்தாங்க!) தரணும்னு நினைக்கிறேன். ஒன்னும் ஓட மாட்டேங்குது!
நீங்க சொல்றது சரி, மரத்தடிப் போட்டில எழுதினவங்க லிஸ்ட் பார்த்து நமக்கு மட்டும் எழுதவராதான்னு போட்டிக்கு எழுதினதால (இலக்கிய தாகமெல்லாம் எனக்கு எடுக்கவே எடுக்காது!)அப்படி கடைசியாப் போயிடுச்சு. இப்பவும், ‘நமக்கும் நகைச்சுவை வரும், நாம ஒன்னும் சண்டைக் கோழி இல்லை’ன்னு நிருப்பிக்க வேண்டி சேரநினைச்சு ஆனா நேரமேயில்லாம இப்படி ஆகிப் போச்சு. என்னமோ போங்க!
வெள்ளிக்கிழமை, மே 25, 2007 at 4:35 பிற்பகல்
ennakku unga ezhuthukkal rommba pidikkuthu. tamizhla eppadi comment addikkarrathunu koncham solli thangalen. apparamm nannum vandhuu niraya comment addikkiren.
சனிக்கிழமை, மே 26, 2007 at 8:38 மு.பகல்
Srilatha, உங்க சந்தேகங்களுக்கெல்லாம் இங்க பதில் கிடைக்கும். http://tamilblogging.blogspot.com/2006/12/how-to-readwrite-in-tamil.html
வலைப்பதிவது குறித்த இன்னும் நிறைய விஷயங்களுக்குக் கூட. வெறும் பின்னூட்டத்தோட நிறுத்திக்காம நீங்களும் ஒரு வலைப்பதிவே தொடங்கலாம். வாழ்த்துகள்!
செவ்வாய்க் கிழமை, மே 29, 2007 at 3:55 பிற்பகல்
dear jayashree
romba thanks. ennoda adhutha comment ungalukku thazmilathan. appram ungaloda pathivugala ethanavatti padichirukkenu enakke theriyadhu.
ungaloda rasigai naan
வெள்ளிக்கிழமை, ஜூன் 8, 2007 at 8:43 மு.பகல்
Dear Madam,
R u still writing?
V
வெள்ளிக்கிழமை, ஜூன் 8, 2007 at 9:06 மு.பகல்
Srilatha, thanks.
V, உங்க கேள்வியே புரியலையே.
இத்தனைக்கப்புறமும் இன்னம் எழுதறேனான்னு கேக்கறீங்களா?
)
வெள்ளிக்கிழமை, ஜூன் 8, 2007 at 11:26 பிற்பகல்
Aha.Nan romba bayandukittu irunden.Edo pazhaya website-le irukkomnu Jai,i am happy it is still active.Ippo enge irukeenga Jai?
சனிக்கிழமை, ஜூன் 9, 2007 at 4:33 பிற்பகல்
Vidya,
//Ippo enge irukeenga Jai?//
அப்படி என்றால் இதற்கு முன்னாலேயே உங்களுக்கு என்னைத் தெரியுமா?
நான் தற்சமயம் மும்பையில் இருக்கிறேன். ஆனால் மன்னிக்கவும், நீங்கள் எந்த வித்யா என்று எனக்குத் தெரியவில்லை.எனக்குத் தெரிந்த வித்யா எல்லாம் யோசித்துவிட்டேன். யாருக்கும் D முதலெழுத்து இல்லை.
எதற்கும் இருக்கட்டும் என்று ஃபோனில் கோவிந்தையும், ‘உனக்குத் தெரிஞ்ச வித்யா எல்லாம் லிஸ்ட் போடு!’ என்று சொன்னேன்.
மூணாங்கிளாஸ் படித்த விரல் சூப்பும் வித்யாவிலிருந்து ஆரம்பித்ததில் கடுப்பாகி ஃபோனை வைத்துவிட்டேன்.
உங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளவும். நன்றி.
திங்கட் கிழமை, ஜூன் 11, 2007 at 3:29 பிற்பகல்
ஆண்கள் வெளியே சொல்வதில்லை
செவ்வாய்க் கிழமை, ஜூன் 12, 2007 at 3:09 பிற்பகல்
Jsri,
சிறிது காலம் உங்கள் பதிவு பக்கம் வர முடியவில்லை !
எங்கிருந்து கற்றீர்கள் இத்தகைய அழகான நடையில் எழுத ? (சீரியஸாக கிண்டல் எதுவும் இல்லை, நம்புங்கள்
)
//ஏர்போர்டில் handbaggageல 18 கிலோ பொருளை அடைத்து வைத்துவிட்டு சந்தேகம் வராமல்
இருக்க 8 கிலோவுக்கே குறைவு மாதிரி அவர்கள் பார்க்கும்போது அலட்சியமாகத் தூக்கி இந்தப்
பக்கத்திலேருந்து அந்தப் பக்கம் வைப்பதில்லையா? (உள்ளே நரம்பு எலும்பெல்லாம் தெறிக்கும்!)
//
//நைட்டி என்பது இரவுக்கான உடை மட்டுமே என்பதை இவ்வளவு காலங் கடந்தாவது
உணருவது நல்லது.
//
//
ஏன் அப்பா செய்ற வேலையை எல்லாம் நீயே நீயே செய்யற?
//
நகைச்சுவை உங்களுக்கு இயல்பாக வருகிறது. ரசித்து வாசித்தேன் !
//, ஐயய்யோ!!!&. படுக்கும்போது தாலிக்கொடியை அவிழ்த்து தலையணைக்கு அடியில்
வைப்பதை மறக்காமல் மறந்துவிட வேண்டும்.
//
இந்த கடைசி வரி தான் ஹைலைட்
அப்புறம், முத்துலஷ்மிக்கு நீங்கள் சொன்ன பின்னூட்ட பதில் பிடித்திருந்தது !
வ.வா.ச பரிசெல்லாம் வேற வாங்கிட்டீங்க, இனிமேல் உங்களை பிடிக்க முடியாது
என்றென்றும் அன்புடன்
பாலா
செவ்வாய்க் கிழமை, ஜூன் 12, 2007 at 6:30 பிற்பகல்
// பொருளாதாரத்திலும் இன்னபிற விஷயங்களிலும் சொந்தக் காலில் நிற்பதற்கு முன்னால் முதலில் குடும்ப உறவுகளில் கணவனைச் சாராமல் நிற்க வேண்டியது அவசியம்// ரொம்ப சரி.
//ஆனால் உங்களுக்காகத் தான் மாற்றிச் செய்கிறேன், இல்லாதபோது அப்படி இல்லை என்பதையும் தைரியமாகச் சொல்லியே செய்கிறேன். (இது முக்கியம். யாருக்கும் பயந்து, பொய்யாக வாழத் தேவை இல்லை// இது ரொம்ப முக்கியம் இல்லையா? இந்த பதிலில் சொன்ன எல்லாமே நானே எழுதியது போல இருந்தது.
புதன் கிழமை, ஜூன் 13, 2007 at 9:15 மு.பகல்
Adada!Ippidi mandaiye udacchuppeengannu therinja modalliye solli iruppene.Neither you nor I know each other.Unga writing style was friendly.Anda urimaile kettutten.Thavira Mumbai-le nanum kuppai kotti irukken.Konjam ezhudavum varum.
Idhu podumnu i took some liberty.Thatsall.
I am currently in USA.Generally in Chennai.Age—-,2 daughters.
Will write more.
வியாழன், ஜூன் 14, 2007 at 8:09 மு.பகல்
எ.அ.பாலா, ரொம்பத்தான்!!
)
பத்மா, நல்லவேளை நான் தான் தனி ஆளோ என்று பயந்துவிட்டேன். ரொம்ப நாள் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து தாங்கமுடியாமல் தான் தான் கொட்டிவிட்டேன்! பெண் தான் பெண்ணுக்கு விரோதின்னு எனக்கு பட்டம் வேற இதுக்கு.
வியாழன், ஜூன் 14, 2007 at 8:18 மு.பகல்
அட Vidya, நீங்க தாராளமா கேக்கலாம். உங்களுக்கு இல்லாத உரிமையா? ஆனா பாருங்க நம்ப மொழில… எங்க இருக்கீங்கன்னு கேக்கறுதுக்கும், இப்ப எங்க இருக்கீங்கன்னு கேக்கறதுக்கும் வித்யாசம் ஏதோ இல்ல? அதனால தான் அப்ப முன்னாடி எங்க இருந்தேன்னு உங்களுக்கு தெரியுமோ, அதான் மத்த நண்பர்கள் மாதிரி இப்ப எங்கன்னு கேக்கறீங்கன்னு நினைச்சுட்டேன்.
பொதுவா இணையத்துல நண்பர்கள் ஜெ!, Jsri, ஜெஸ்ரீ இப்படி எல்லாம் கூப்பிடுவாங்க. மற்ற பெர்சனல் நண்பர்கள் கடிதம் பின்னூட்டங்களில் எல்லாம் Jays ன்னு கூப்பிடுவாங்க. அந்தப் பின்னூட்டங்கள் எல்லாம் உள்ளயே விடமாட்டேன். இது எதுவும் இல்லாம உங்க அழைப்பு புதுசா இருந்தது. அதனாலதான் ஏதாவது தெரிஞ்சவங்களா இருந்து தவறவிடக் கூடாதேன்னு விசாரிச்சேன். தவறா நினைக்காதீங்க.
//Will write more.//
Please..
வியாழன், ஜூன் 14, 2007 at 8:28 மு.பகல்
HosurOnline.Com,
//ஆண்கள் வெளியே சொல்வதில்லை.//
நான் ஆண்களுக்கான பிரச்சினைகளை என்றும் குறைத்து மதிப்பிட்டதில்லை. மிக அதிகம் என்ற வருத்தமும் அதை பெண்களைப் போல் வெளியில் புலம்புவதில்லை என்ற அவர்கள் குறித்த இரக்கமும் நல்லெண்ணமும் எனக்கு என்றும் உண்டு. ஆனால் பொதுவான இதுபோன்ற இடங்களில் எப்பொழுதாவது ஆண்கள் அவற்றைச் சொல்லிவைக்கலாம். நீங்கள் தான் சொல்லுங்களேன்.
[உங்கள் பின்னூட்டம் என்ன காரணத்தாலோ Spamற்குப் போயிருக்கிறது. மன்னிக்கவும், தாமதமாகத்தான் பார்த்து அனுமதித்தேன்.]
வியாழன், ஜூன் 14, 2007 at 8:41 மு.பகல்
HosurOnline.Com, (உங்க பேரென்ன?)
நீங்கள் குறித்துள்ள வலைத்தளம் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன். என் பெண்ணிற்கு மெஹந்தி இடுவதில் பைத்தியம். எப்பொழுதும் என் கையை காகிதத்தில் வைத்து அவுட்லைன் வரைந்து இடையில் ஏதாவது புத்தகங்களிலிருந்து டிசைனை வரைந்து பார்த்த்துக் கொண்டே இருப்பாள். அவ்வப்போது கோனை எடுத்துக்கொண்டுவந்து என் காலையும் இடுவதற்கு பயிற்சிகளமாக எடுத்துக் கொள்வாள். (“நீ பாட்டுக்கு கம்ப்யூட்டர்ல படி. நான் தொந்தரவு செய்யாம இட்டுவிடறேன்!”. தெருவில் எல்லோரும் என் மானாவாரியான டிசைன்களால் ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள்.) அடுத்த வருஷம் கோர்ஸில் சேர்த்துவிடுகிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.
உங்கள் தளத்தில் இருக்கும் டிசைன் எல்லாம் பிரிண்ட் எடுத்து புத்தகமாக்கி சர்ப்ரைஸ் கொடுத்து அசத்த வேண்டும்.
அப்புறம் உங்கள் கோபத்திற்காக, Ladies Special பகுதிக்கு மிளகாய்ப் பழம் படம் போடுவதெல்லாம் சாரி, கொஞ்சம் ஓவர்!
))
சனிக்கிழமை, ஜூலை 28, 2007 at 3:16 பிற்பகல்
Brilliant write up !
சமையல் குறிப்புதேடி இனையத்தில சுற்றி எப்படியோ உங்களோட பதிவிற்கு வந்துவிட்டேன்…இரண்டு மூன்று பதிவுகள் படித்தேன்..மிகவும் பிடித்திருக்கிறது.. அசாதாரனமான எழுத்து நடை… நீங்கள் சமையல் குறிப்பு தவிர வேறு எதுவும் கட்டுரைகள் எழுதியதில்லையா? எதுவும் எழுதியிருந்தால் லிங்க் கொடுக்க முடியுங்களா?
திங்கட் கிழமை, ஜூலை 30, 2007 at 3:31 பிற்பகல்
Gopalan, thanks. நான் அந்த மாதிரி அபசாரம் எல்லாம் செய்யறதில்லை. என் எழுத்துக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை.
செவ்வாய்க் கிழமை, ஜூலை 31, 2007 at 12:04 மு.பகல்
// என் எழுத்துக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை. //
))
ஆமாம். கிளைகள் இல்லாததால்தான் “அதற்கு” அந்தப் பெயர்.
செவ்வாய்க் கிழமை, ஜூலை 31, 2007 at 3:53 பிற்பகல்
இது இன்னொருவிதமான புலம்பல்.
‘அடடா……….. உங்க பதிவு கண்ணுலே படாமப்போச்சே(-:’
இப்ப மஜாதான்:-))))
ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 7, 2007 at 5:29 பிற்பகல்
நான் ரொம்ப லேட் கம்மர் உங்க பதிவுக்கு
///நான் எப்போதும் போல திட்டுவாங்கிக் கொண்டே இருந்து விடுகிறேன். வளையாது….///
முத்துலஷ்மி அக்கா மட்டும்தான் உண்மைய பேசறாங்க.
ம்
வியாழன், ஜூன் 12, 2008 at 2:30 பிற்பகல்
accidentally i sited, read and enjoyed your writings-a few of them. planning to read completely from the beginng. can you give me your home page link so that i can read from the beginning without missing any.
வியாழன், ஜூன் 12, 2008 at 2:38 பிற்பகல்
lallihari,
நிஜமாவே பெரிய விபத்துதான்.
உங்களுக்கு என்ன தேவைன்னு தெரியலையே. இது சும்மா சமையல் குறிப்பு பதிவு. முழுக்க அதான் இருக்கும்.
Homepage ல கடைசி 10 பதிவுகள் இருக்கும். முதல்லேருந்து தேவைன்னா வலப்பக்கம் “இதுவரை..” பகுதில ஜனவரி 2007 லேருந்து க்ளிக்கி படிக்கலாம்.
புதன் கிழமை, செப்டம்பர் 17, 2008 at 9:11 மு.பகல்
Jayashree,
I am reading your article for the first time..Just too good to resist!!!
செவ்வாய்க் கிழமை, December 23, 2008 at 12:22 மு.பகல்
ungaludaiya yezhuthu nadai yenakku migavum pidithu irukiradhu,ananda vikatanu-ku yen nanri.
செவ்வாய்க் கிழமை, December 23, 2008 at 11:36 பிற்பகல்
ungaludaiya yezhuthukku naan rasigai aagiviten.
புதன் கிழமை, பெப்ரவரி 18, 2009 at 10:39 பிற்பகல்
Visalakshi sundar:
aruna: thanks உங்களுக்கும் ஆனந்த விகடனுக்கும்.