வற்றல் குழம்பு செய்வதில் இது ஒரு முறை. இதை சுண்டைக்காய் வற்றல் குழம்புக்கான குறிப்பாகக் கொடுத்திருக்கிறேன். ஆனால் இதே முறையில் மணத்தக்காளி வற்றல், மினுக்கு வத்தல், வெண்டை, கொத்தவரங்காய், பாகற்காய் வற்றல்களிலும் செய்யலாம். நான் இரண்டு மூன்றை சேர்த்துப் போட்டும் செய்வேன்.
தேவையான பொருள்கள்:
புளி – எலுமிச்சை அளவு
காய்ந்த மிளகாய் – 5 அல்லது 6
சுண்டைக்காய் வற்றல் – 20 *
வற்றல் குழம்புப் பொடி – 1 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணை – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு, மஞ்சள்தூள் – தேவையான அளவு
வெல்லம் – சிறிது (விரும்பினால்)
தாளிக்க - கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை:
- புளியை கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியில் நல்லெண்ணை விட்டு, முதலில் வற்றலை வறுத்துக் கொள்ளவும்.
- அதன்மேலே கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலையும் சேர்த்துத் தாளிக்கவும்.
- மேலே வற்றல் குழம்புப் பொடியைப் போட்டு வறுத்துக் கொண்டு, புளிநீரைச் சேர்க்கவும். (வாசனை தூக்குகிறதா?)
- உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, கெட்டியாக இறுகி, பச்சை வாசனை போகும்வரை கொதிக்க விட்டு இறக்கவும்.
- விரும்பினால் இறக்கும் முன் ஒரு சிறு துண்டு வெல்லம் சேர்க்கவும். நோ கொத்தமல்லித் தழை.
* வற்றல் குழம்புப் பொடி இல்லாவிடில் அன்றாடம் உபயோகிக்கும் சாம்பார்ப் பொடியையே உபயோகிக்கலாம்.
* சுண்டைக்காயில் இரும்புச் சத்து மிகுதியாக உள்ளது. வறட்டு இருமல், ஆஸ்துமா, ஜுரம், வயிற்றுப் பூச்சியினால் ஏற்படும் வலி, சிறுநீர்ப் பிரச்சினை என பலவற்றிற்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து. காரணம் தெரியாமல் திடீரென வயிற்றுவலி வந்தால், சுண்டைக்காயை எண்ணையில் வறுத்து, நெய், உப்புடன் சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டுப் பார்க்கவும்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
சாதத்தோடு பிசைந்து சாப்பிட, குழம்பு கெட்டியாக புளிக்காய்ச்சல் மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் சாதம் கலக்க மேலும் ஒருபங்கு தண்ணீர் அதிகமாக வைத்து நீர்க்கச் செய்வதே சரி.. சூடான சாதத்தில் நெய், நல்லெண்ணை, வற்றல் குழம்பைச் சேர்த்து வேகமாகக் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும். கலப்பதற்கு முன் முடிந்தால் மிளகாய், சுண்டைக்காய் வற்றலை தனியாக எடுத்துவைத்துக் கொண்டு கலக்கவும். கலந்தபின் மீண்டும் சேர்த்துக் கொள்ளலாம். மிளகாயோ, வற்றலோ சாதத்தில் சிதைந்தால் சுவை கெடும்.
பயத்தம் பருப்பு சேர்த்த கூட்டு அல்லது காரம் அதிகம் இல்லாத கூட்டு வகைகள், சுட்ட அப்பளம், பொரித்த வடாம் வகைகள். கீரை மசியல் அல்லது கீரைக் கூட்டு எல்லாவற்றையும் மிஞ்சும்.
புதன் கிழமை, April 18, 2007 at 10:14 மு.பகல்
சுண்டைக்காய் வற்றல் – 20 *
இதைச் செய்யும் முறை??
புதன் கிழமை, April 18, 2007 at 11:00 பிற்பகல்
பிரசன்னா, இதுக்கு என்ன செய்முறை? மளிகைக் கடையிலே பாக்கெட்டில் அடைச்சுக் கிடைக்குமே?
புதன் கிழமை, April 18, 2007 at 11:28 பிற்பகல்
ப்ரகாஷ், என்ன கோளாறுன்னு தெரியலை. உங்க பின்னூட்டம் 4 தடவை அப்ரூவ் செஞ்சும் வரமாட்டேங்குது. ஒருவேளை இனிமே வரலாம். (ரொம்ப பயப்படுது போல சபைக்கு!)
இங்க copy and paste..
====
Prakash | icarusprakash.wordpress.com |
பிரசன்னா, இதுக்கு என்ன செய்முறை? மளிகைக் கடையிலே பாக்கெட்டில் அடைச்சுக் கிடைக்குமே?
=====
அதெல்லாம் தெரியாமலா இருக்காங்க. இப்ப நான் சொல்லிட்டாலும் உடனே சுண்டைக்காய் வாங்கி வத்தல் போடப் போறாங்களா? என் கைய தட்ட வெச்சு ஒடிக்கணும். இனிமே நாளைக்கு காலைல தான் அதுக்கெல்லாம் பதில்.
வியாழன், April 19, 2007 at 9:58 மு.பகல்
//
சுண்டைக்காய் வற்றல் – 20 *
இதைச் செய்யும் முறை??//
இங்கே…
வியாழன், April 19, 2007 at 3:46 பிற்பகல்
//பிரசன்னா, இதுக்கு என்ன செய்முறை? மளிகைக் கடையிலே பாக்கெட்டில் அடைச்சுக் கிடைக்குமே?//
பிரகாஷ், கடையில வத்தக் குழம்பும் கிடைக்கும். புளிக்காய்ச்சலும் கிடைக்கும். அப்புறம் அதுக்கு எதுக்கு ரெசிப்பின்னு கேப்பீங்களா?
நீர் மோர் செய்யும் முறையே எழுதியாச்சு. இதை எழுதினா என்னவாம்?