(1)
தேவையான பொருள்கள்:
பெரிய வெங்காயம் – 2
தேங்காய்த் துருவல் – 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்வற்றல் – 6
புளி – நெல்லிக்காய் அளவு
பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க – கடுகு, எண்ணை, பெருங்காயம், கறிவேப்பிலை.
செய்முறை:
- வெங்காயத்தை அரிந்துகொள்ளவும்.
- தேங்காய், மிளகாய், புளி, பொட்டுக்கடலை, உப்பு இவற்றை முதலில் சிறிது அரைத்துக் கொள்ளவும்.
- இறுதியில் அரிந்து வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து கரகரப்பாக தண்ணீர் விடாமல் அரைக்க வேண்டும்.
- எண்ணையச் சூடாக்கி, கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம் தாளித்து அரைத்து வைத்துள்ள விழுதைக் கொட்டி 2,3 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
-0-
(2)
தேவையான பொருள்கள்:
சின்ன வெங்காயம் – 25
தக்காளி – 6
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
மிளகு - 10
தனியா - 1 டீஸ்பூன்
எண்ணை - 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- வெங்காயம் தக்காளியை வாணலியில் லேசாக வதக்கி தேங்காயுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- வெந்தயம், மிளகு, தனியா இவற்றை எண்ணை விடாமல் வறுத்து பொடி செய்துகொள்ளவும்.
- வாணலியில் எண்ணையைச் சூடாக்கி அரைத்த விழுது, பொடி, உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
-0-
(3)
தேவையான பொருள்கள்:
சின்ன வெங்காயம் - 20
காய்ந்த மிளகாய் – 6
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
நிலக்கடலை - 10
பூண்டு – 5 பல்
இஞ்சி - சிறு துண்டு
புளி - சிறிது
உப்பு – தேவையான அளவு
தாளிக்க – எண்ணை, கடுகு, கறிவேப்பிலை.
செய்முறை:
- எண்ணையைச் சூடாக்கி, மிளகாய், கடலைப்பருப்பு, நிலக்கடலை, பூண்டு, இஞ்சி, வெங்காயம் என்ற வரிசையில் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
- உப்பு, புளியுடன் வறுத்து வைத்துள்ள பொருள்களையும் சேர்த்து அரைக்கவும்.
- கடுகு, கருவேப்பிலை தாளித்துக் கலக்கவும்.
-0-
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
இட்லி, தோசை, சப்பாத்தி, ஊத்தப்பம், உப்புமா, பிரட்…..
இட்லி(தோசை) மிளகாய்ப் பொடியுடன் வெங்காயத்தை நறுக்கிச் சேர்த்து அரைத்து எடுத்தால் இன்னொரு சுவையான வெங்காயச் சட்னி.
ஊத்தப்பம் போன்ற ஏற்கனவே புளிக்கவைக்கப்பட்ட உணவுகளுக்குச் செய்யும்போது சட்னியில் புளிப்புச் சுவைக்காகச் சேர்க்கப்படும் தக்காளி, புளியின் அளவைக் குறைத்தோ முற்றிலும் நீக்கியோ செய்யவேண்டும்.
வெள்ளிக்கிழமை, மார்ச் 23, 2007 at 7:44 மு.பகல்
பின்னூட்டக் கடத்தல்:
arul Says:
March 22nd, 2007 at 11:33 pm e
சின்ன வெங்காயத்தை மட்டும் வைத்து ஒண்ணும் செய்ய முடியாது. தயிர் சாதத்துக்கு கடித்துக்கொண்டு சாப்பிடுவது தவிற.
இருந்தாலும் ஒரு சட்னி:
1. சின்ன வெங்காயம் – 20
2. பச்சை மிளகாய் – சிறியது – 4
3. புளி – குட்டி நெல்லிக்காய் அளவு
4. கறிவேப்பிலை – நாலைந்து இலை
5. உப்பு
(கொத்தமல்லி கூடாது)
மிக்ஸியில் அரைக்காமல் அம்மியில் அரைக்கவும். அல்லது ஒரு மணையின்மீது வைத்து நல்ல உருளைக் கல்லில் நன்றாக மசியத் தட்டவும்.
கடுகு,ஓரிரண்டு இலை கறிவேப்பிலை, தோலுள்ள, உடைத்த உளுந்து போட்டு தாளிக்கவும்.
மிக மெல்லிய தோசை அல்லது மெதுமெது இட்டிலிக்கு தொட்டுக்கொள்ள.
நான் இந்தச் சட்டினியில் தேங்காயெண்ணை சேர்த்து சாப்பிடுவேன். ஓகே ஓகே அது பொள்ளாச்சிக்காரங்க பழக்கம். மத்தவங்களுக்கு ஒத்துக்காது.
அருள்
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 31, 2007 at 3:31 பிற்பகல்
பச்சை மிளகாய்க்கு பதிலாக வரமிளகாயை வைத்தும் செய்யலாம். சிலர் 1,2 பூண்டு சேர்ப்பதும் உண்டு. ரொம்பக் காரமா இருக்கும். நாங்க நல்லெண்ணை சேத்துக்குவோம் (தேங்காயெண்ணைக்குப்பதில்).